ஒஸாமாவை காட்டிக்கொடுத்த டாக்டர் அமெரிக்காவின் ஹீரோ என பிரகடனம்
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்காவின் சிறப்புப் படைகள் கடந்த 2011-ம் வருடம் மே மாதம் அபோதாபாத் வீட்டில் சுட்டுக் கொன்றனர். ஒசாமாவை கண்டுபிடிப்பதற்கு பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் 'ஷகீல் அப்ரிடி' உதவி செய்தார்.
ஒசாமா கொல்லப்பட்டு 3 வாரம் கழித்து, பாகிஸ்தான் ராணுவம் அவரைக் கைது செய்தது. அவருக்கு 33 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர் இப்போது பாகிஸ்தான் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட டானா ரோரபச்சர் உள்ளிட்ட 9 உறுப்பினர்கள், டாக்டர் அப்ரிடியை 'அமெரிக்கன் ஹீரோ' ஆக அறிவிக்க கோரும் தீர்மானத்தை இன்று அவையில் கொண்டு வந்தனர்.
அப்போது டானா கூறியதாவது:-
ஒசாமாவை கண்டுபிடிக்கவும் நீதியின் முன் நிறுத்தவும் உதவிய பாகிஸ்தான் டாக்டருக்கு அமெரிக்கர்கள் அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இதற்கு, நாம் நட்பு நாடு என்று கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் அரசுக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் பெரும் விலை கொடுத்துள்ளனர்.
டாக்டர் அவரது வாழ்க்கையை பணயமாக வைத்து நமக்கு ஒசாமாவை பிடிக்க உதவி செய்த அவரை நாம் கைவிடக்கூடாது. அவர் இப்போது பாகிஸ்தான் சிறையில் வாடி வருகிறார். டாக்டரை விடுதலை செய்யக் கோரி அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டாக்டரை 'அமெரிக்கன் ஹீரோ' என அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment