செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தம்பதிகளுக்கு அழைப்பு
செவ்வாய் கிரகத்துக்கு தேனிலவு செல்ல, தம்பதியினருக்கு, அமெரிக்க செல்வந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் செல்வந்தர், டென்னிஸ் டிடோ, 72. அடிப்படையில், விண்வெளி அறிவியல் இன்ஜியரான இவர், "நாசா' விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். கடந்த, 2001ல், பூமியில் இருந்து, 350 கி.மீ., உயரத்தில் உள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, இவர் பயணம் செய்துள்ளார்.
இவர், தற்போது, செவ்வாய் கிரகத்துக்கு, தேனிலவு சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:பூமியில் இருந்து, 501 நாள் பயணமாக, இருவரை, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள விண்கலங்களில் ஒன்று, இருவர் பயணம் செய்யும் விதமாக, மாற்றியமைக்கப்படும்.பூமியில் இருந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில், செவ்வாய் கிரகத்துக்கு சென்றால், பயண நேரம் குறைவாக இருக்கும்.
வரும், 2018ல், செவ்வாய் கிரகத்துக்கு சென்று வர, 500 நாட்களே ஆகும். இந்த வாய்ப்பை தவற விட்டால், அதன் பின், செவ்வாய் கிரகம் சென்று வர, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும்.பூமியை விட்டு, வெகு தூரம் செல்லும் போது, பூமி ஒரு நீல நிற புள்ளி போல் தெரியும். அதை பார்த்த சந்தோஷத்தில், அருகில் இருப்பவரை, அணைத்து கொள்ள தோன்றும். எனவே, இந்த பயணத்தில் பங்கேற்பவர்கள், தம்பதிகளாக இருந்தால், நன்றாக இருக்கும்.
இவ்வாறு, டென்னிஸ் டிடோ கூறியுள்ளார்.

Post a Comment