சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள சகலருக்கும் உணவு வழங்க முடியாது - ஐ.நா.
'சிரியாவில் நடக்கும் தொடர் சண்டையால், பாதிக்கப்பட்டுள்ள, 10 லட்சம் பேருக்கு உணவு தர முடியாது' என ஐ.நா., தெரிவித்துள்ளது. சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலக கோரி, எதிர்கட்சியினர், 22 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலகாத காரணத்தால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுத உதவி அளித்து வருகிறது. இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. சிரியாவில், எல்லை புற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். முக்கிய நகரங்களில், இரவு பகலாக சண்டை நடப்பதால், அத்தியாவசிய பொருட்களின் சப்ளை, நிறுத்தப்பட்டு விட்டது.
போதிய பாதுகாப்பு இல்லாததால், ஐ.நா., தன் அலுவலர்களை வாபஸ் பெற்றுள்ளது. பல மாதங்களாக நீடிக்கும் சண்டையில், 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும், போரின் காரணமாக மூடப்பட்டிருப்பதால், மக்கள் வருவாயின்றி, ஐ.நா.,சார்பில் அளிக்கப்படும் உணவை, பயன்படுத்தி வருகின்றனர். சிரியா அதிபர் ஆசாத், விடுத்துள்ள அமைதி திட்டத்தை, கிளர்ச்சியாளர்கள் நிராகரித்து விட்டனர். இதனால், சிரியாவில் இப்போதைக்கு சண்டை நிறுத்தம் ஏற்படுவதற்கான சூழல் இல்லை.
நாளுக்கு நாள், இலவச உணவை எதிர்பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிரியாவில் சேவையில் ஈடுபட்டுள்ள செம்பிறை சங்கத்தினர், 25 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐ.நா., உணவு அமைப்பின் தகவல் தொடர்பாளர், எலிசபெத் பிர்ஸ் குறிப்பிடுகையில், "நாங்கள் பெருமுயற்சி எடுத்து, 15 லட்சம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், மீதமுள்ள 10 லட்சம் பேருக்கு எங்களால் உணவு அளிக்க முடியாது' என, தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று, தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில், ராணுவம், கிளர்ச்சியாளர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இந்த சண்டையில் அப்பாவி மக்கள், 48 பேரும்; கிளர்ச்சியாளர்கள், 18 பேரும்; ராணுவத்தினர், 12 பேரும் பலியாயினர்.


Post a Comment