Header Ads



இலங்கையர் உட்கொண்ட 810 மில்லியன் பரசிற்றமோல்..!


கடந்த ஆண்டில், இலங்கையின் சனத்தொகையை விட 40 மடங்கு அதிகமான, பரசிற்ற மோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

கடந்த ஆண்டில், வலி நிவாரணியான 810 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகள் அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. 

2011ம் ஆண்டில் 560 மில்லியன் பரசிற்றமோல் வில்லைகளே அரசு மருத்துவமனைகள் மூலம் வழங்கப்பட்டிருந்தன. 

ஆண்டுதோறும் 560 தொடக்கம் 570 மல்லியன் பரசிற்றமோல் வில்லைகளே நோயாளிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.  ஆனால் கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை சடுதியாக பெருமளவில் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமிக்குமாறு, மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கமால் ஜெயசிங்கவை, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசென பணித்துள்ளார். 

காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற நோய்களுக்கான பொதுவான வலி நிவாரணியாக பரசிற்றபோல் பயன்படுத்தப்படுகிறது.  எனினும், இந்த மருந்தை அதிகளவில் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. 

ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை இரண்டு வில்லைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற போதிலும், நோயாளிகள் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை இரு வில்லைகளை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.  இதனால் பல சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், உடல், உள ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, கடந்த ஆண்டில் திடீரென பரசிற்றமோல் வில்லைகள் அதிகளவில் விநியோகிக்கப்பட்டதன் பின்னணியில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. 

பல அரசு மருத்துவமனைகளில் உள்ள பணியாளர்கள் பரசிற்றமோல் வில்லைகளை தனியார் மருந்தகங்களுக்கு விற்பனை செய்வதாகவும், எனவே, இதுகுறித்து முழு விசாரணை நடத்துமாறும் சுகாதார அமைச்சர் பணித்துள்ளார்.

1 comment:

  1. யாருக்கு தெரியும் ? யார் வாங்கியது? யார் விற்றது ?

    எங்கும்,எதிலும்,எப்பொழுதும்,ஊழல் ஊழல் ஊழல் ?

    நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .

    இறைவா நோய் நொடி அற்ற ஆரோக்கியமான வாழ்வை எங்கள் எல்லோருக்கும், எங்கள் சந்ததினருக்கும் தந்து அருள்வாயாக. ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.