Header Ads



இலங்கையில் அறிவை மையமாககொண்ட அபிவிருத்தியுடன் கூடிய பாடசாலை அபிவிருத்தித் திட்டம் முன்னெடுப்பு



(எஸ்.எல். மன்சூர் (கல்விமாணி)
ஆசிரிய ஆலோசகர், அட்டாளைச்சேனை)

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் ஆரம்பக்கல்வியை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதன் அவசியத்தை உணர்ந்து கொண்ட இன்றைய அரசு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அந்த அடிப்படையில் மகிந்த சிந்தனையின் தூரநோக்குக்கு ஏற்ப எதிர்கால இலங்கையின் அறிவை மையமாகக் கொண்டதும், அபிவிருத்தியை நோக்காக் கொண்டமைந்த 5000 ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகள் மீள்நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டங்களை அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் அடிப்படையில் பிள்ளைநேயத்தை மையப்படுத்தி பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு மற்றும் கற்பதற்கு உகந்த பௌதீக சூழலை உருவாக்குவது சம்பந்தமாக எதிர்பார்க்கப்படுகின்ற உற்பத்திக்கான ஒரு வழிகாட்டல் இதன் மூலமாக முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

நிரந்தர அபிவிருத்திக்கான ஆரம்பக்கல்வி எனும் நோக்கக்கூற்றின் அடிப்படையிலும், நிரந்தரமான அபிவிருத்தி ஏற்படும் வகையில் தேடல், வெளியிடல், ஆக்கம் மற்றும் இரசனைக்கு ஏற்ப சுய கற்கையை உறுதிப்படுத்தும் பிரியமான கற்றல் சூழல் ஒன்றை ஆரம்பக்கல்வி கட்டத்தில் உண்டாக்கும் பணிக்கூற்றினையும் உள்ளடக்கியதாக ஆரம்பக் கல்வி மாணவர்களின் முக்கியத்துவம் எதிர்பார்க்கும் மட்டத்தை அடைவதற்கான முயற்சிகளில் கல்வியமைச்சின் பூரண அனுசரையுடன் பாடசாலைகள் தோறும் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் பின்வரும் விடயங்கள் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது. ஆரம்பப்பாடசாலையானது சிறுவர் அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறுகின்றமை, எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்குத் தேவையான பலம்வாய்ந்த அடிப்படையை கட்டி எழுப்பத் தேவையான அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதை இக்கால கட்டத்தில் ஏற்படுத்துதல், இவர்களுக்கான விருத்தியை ஏற்படுத்தும் வகையில் உகந்த சூழலை பாடசாலைகளில் அமைத்துக் கொள்வதன் மூலம் ஆரம்பப்பாடசலையின் கல்விநிலை, பாதுகாப்பான உகந்த கற்றல் சூழல் ஒன்றை ஏற்படுத்தி பிள்ளைநேய பாடசாலைக்கான வேலைத்திட்டத்தை கல்வியமைச்சு அறிமுகப்படுத்தி வருகின்றது.

இதற்கமைவாக இப்பாடசாலைகளில் குறிப்பாக 5000 பாடசாலைகள் திட்டத்திற்கு உட்பட்டதும், மாணவர்களின் வரவு குறைந்து சென்று மூடப்படும் நிலைமையில் காணப்பட்ட பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலையின் உட்கட்டமைப்பு, பௌதீக கட்டமைப்புக்களை விருத்தி செய்து மாணவர்கள் விரும்பி வருகை தந்து கற்கும் ஓரு சூழலை ஏற்படுத்துவதற்காக இப்பாடசாலைகளுக்கு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திலுள் பாடசாலைகளையும் உட்படுத்தியதாக ரூ. ஐந்து லட்சம் நிதி வழங்கப்பட்டு சமூகத்தின் பங்களிப்புடனும் முக்கியமாக இனங்காணப்பட்ட வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கான ஒரு செயற்றிட்டம் வெற்றிகரமாக பாடாசலைகளில் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் பிள்ளைநேய பாடசாலைக்குள் உள்வாங்கும் ஒரு முன் ஏற்பாடான நடவடிக்கையை இத்திட்டத்தின் ஊடாக பின்பற்றபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுவர் உரிமை கோட்பாட்டுக்கேற்ப சகல சிறுவர்களினதும் சகல உரிமைகளையும் உயிர்ப்பாக நிறைவு செய்கின்ற பாடசாலைகளே பிள்ளை நேய பாடசாலை என்று வரையறைத்துள்ள நிலையில் ஐந்து வயது தொடக்கம் ஒன்பது வயதுவரையிலான சகல பிள்ளைகளுக்கும் ஆரம்பக்கல்வியினை  உறுதிப்படுத்துதல், சகல மாணவர்களையும் அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகளுக்கு அண்மித்த வகையில் தேசிய மட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதே இதன் நோக்காகக் கூறப்படுகின்றது. இதன் மூலம் பிள்ளை விரும்புகின்ற, பிள்ளைகளின் உரிமைகள் உயிர்ப்பிக்கி;ன்ற ஒரு பாடசாலையாக இவைகள் திகழவேண்டுமென்பதே அரசின் நோக்கமாகும்.

இவ்வாறு பிள்ளைநேயத்தை உள்வாங்குகின்றபோது பின்வரும் பிள்ளைநேய அளவீடுகள் அங்கு அமுல்படுத்தப்படும் நிலை தோற்றம்பெறும். அவையாவன,

1. உரிமைகளுக்கு அடிப்படையாக மகிழ்ச்சிகரமாக உள்வாங்குதல்

2. ஆண், பெண் பால் நிலை சமத்துவத்தை ஏற்படுத்துதல்

3. சிறுவர்களுடைய தரமான கல்வி பிரதிபலனை அபிவிருத்தி செய்தல்

4. சிறுவர்களுடைய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அரவணைப்பை உறுதிப்படுத்தல்

5. மாணவர்கள், குடும்பம் மற்றும் சமூகத்தினுடைய உயிர்ப்பான பங்களிப்பு

6. பிள்ளைநேயத் தொகுதி, கொள்கை, விதிமுறைகளினால் உதவி கிடைத்தல் ஆகியவை பிள்ளை நேயத்தின் முக்கிய அம்சங்களாகக் கொள்ளப்படுகின்றன.

மேற்படி விடயங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட நிதிகள், சமூகப்பங்களிப்புக்களுடனும் பாடசாலைகளில் பின்வரும் விடயங்களில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டன. குறிப்பாக மின்சார வசதிகள், நீர்வசதிகள், மலசலகூட வசதிகள், பாடசாலை வேலிகள் மற்றும் நுழைவாயி;ல் நிர்மானித்தல், உள்ள கட்டிடங்களை திருத்தி வர்ணம் பூசுதல், பாடசாலையின் நிலத்தை பயன்தரும் தோட்டமாக மாற்றுதல், பாடசாலைக்கான பெயர்ப்பலகையை மக்கள் தெளிவாக பார்க்கும் வண்ணம் தயாரித்தல், தரம் ஒன்று மாணவர்கள் கற்கும் வகுப்பறைகள் செயற்;பாட்டறை முறைமைக்கமைவாக தயார்படுத்தப்படுதல், சிறுவர்களுக்கான சிறந்த விளையாட்டு முற்றத்தை நிர்மானித்தல், அதிபர், ஆசிரியருக்கான விடுதிகளை திருத்தியமைத்தல் போன்ற விடயங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு தற்போது இத்திட்டம் பூரணமாக முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மூலம் தற்போது அனைத்து ஆரம்பப்பாடசாலைகளும் புதிய முறைகளில் கற்றலுக்கான தயார் நிலையில் காணப்படுவதுடன், இப்பாடசாலைகளுக்கான அடுத்தாண்டு மாணவர்களை உள்வாங்குவதற்கும், இப்பாடசாலையின் சுற்றுவட்டத்தில் கற்கின்ற, கற்கவிருக்கின்ற மாணவர்களையும் இனங்காண்பதற்காக ஊட்டப்பிரதேசத்தையும் வரையறை செய்துள்ளமையினால் அடுத்தாண்டிலிருந்து மாணவர்கள் விரும்பி தமது பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு கற்கச் செல்கின்ற ஒருநிலைமை தோற்றம்பெற்றுள்ளதையே இந்நடவடிக்கை சுட்டிக்காட்டுகின்றது. எதிர்வரும்2016ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் பிள்ளைநேயப் பாடசாலைகளாக மாற்றம் பெறவைப்பதற்கான முன்னேற்ற நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக எதிர்வரும் ஆண்டிலிருந்து சகல ஆரம்பப்பாடசாலைகளும் பிள்ளை நேயப் பாடசாலைகளாக தோற்றம் மாற்றம் பெறவுள்ளமை முக்கிய அம்சமாகும். 

எனவே, உலகின் கல்விநிலையோடு இலங்கையின் கல்வி நிலையை ஒப்பிடுகின்றபோது உயர்வான மட்டத்தில் காணப்படும் எமது நாட்டின் கல்விமுறையில் இவ்வாறான புதியபுதிய செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும் நாட்டில் ஒரு சிறிய பங்கினர் கட்டாயக் கல்வி பெறுகின்ற வயதிலும் உடலுழைப்பில் ஈடுபட்டு வருவது அல்லது இடைவிலகும் மாணவர்களின் கணிசமான பங்கினர் தொடர்ந்து கொண்டு வருவது தவிர்க்கப்படுதல் கட்டாயமாகும். நவீன உலகின் போக்குக்கு ஏற்ப நமது பிள்ளைகளையும் உள்வாங்கி அச்சவாலை முறியடிப்பதற்கான ஒரு முன்னேற்றத்தை ஆரம்பக்கல்விப் புலத்தின் சிறப்பான வழிகாட்டுதல்களை இன்றைய ஆரம்பப்பாடசாலைகள் கொண்டுள்ளன என்பதை மேற்காணப்பட்ட செயற்பாடுகள், வழிகாட்டுதல்கள், விடே திட்டங்கள் அனைத்தும் மாணவர்களின் சிறப்பான கற்றலை மேற்கொள்ளவே என்பதையும், இலவசக் கல்வியை தொடர்ந்தும் இலவசமாக அரசு வழங்குவதையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்கு நாமும் உறுதுணையாக இருந்து கற்ற சமூதாயமாக மாற்றம் பெற்று நாட்டின் அவிருத்திக்கு வித்தாக அமைவதுடன் அது நிரந்தர அபிவிருத்திக்கான மையமாக இக்கல்வி அமையவேண்டுவதுடன், அதனை நிறைவேற்ற அனைவரும் உறுதுணையாக பாடுபடுதலும் அவசியமாகும்.


No comments

Powered by Blogger.