புதிய தேர்தல் முறையின் கீழ் தமிழ், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அக்கறை காட்டுங்கள்
(இன்று 14-12-2012 வெளியாகியுள்ள நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களின் தற்போது அமுலில் உள்ள விகிதாசார தேர்தல் முறைக்கு பதிலாக விகிதாசார தொகுதி முறை சார்ந்த புதிய தேர்தல் முறையொன்றுக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இதுகாலவரை இருந்த விகிதாசார தேர்தல் முறையிலன்றி புதிய தேர்தல் முறையிலே நடக்கும். இதற்கு முன்பு இத்தேர்தல் முறையின் கீழ் புதிதாக தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்காக தேசிய மட்டத்தில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு ஒன்றும் மாவட்ட மட்டத்தில் அந்தந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட தேர்தல் நிர்ணய ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
தேசிய மட்டத்திலான தேர்தல் நிர்ணய ஆணைக்குழு அதன் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தல் வட்டாரங்களை நிர்ணயிப்பதில் மாவட்ட தேர்தல் நிர்ணய ஆணைக்குழுக்களும் அதேபோன்று தேசிய ஆணைக்குழுவும் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன.
வட,கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களது உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் புதிதாக நிர்ணயிக்கப்படும் தேர்தல் வட்டாரங்கள் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன.
சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் பரந்து, விரிந்து வாழும் பகுதிகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை விகிதா சார பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தியிருந்தது. ஒரு உள்ளூராட்சி மன்ற எல்லைப் பிரதேசத்துக்குள் வாழும் மக்களுக்கு அந்த பிரதேசத்தில் போட்டியிடும் எந்த ஒரு அபேட்சகருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு விகிதாசார தேர்தல் முறையில் இருந்தது. இதனால் மிகச் சிறிய சிறுபான்மை சமூகம் வாழ்ந்த உள்ளூராட்சி மன்றங்களில் கூட ஓரிரு சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். புதிய திட்டப்படி வட்டார முறை வருவதனால் அந்த வட்டாரத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாய்ப்பு கிட்டும்.
புதிய தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக பல அங்கத்துவ தொகுதி மற்றும் சிறுபான்மையினருக்கு சாதகமான வகையில் தொகுதி நிர்ணயம் என்பன செய்யப்படும் என சிறுபான்மையின அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்த பின்பே இந்த புதிய சட்டமூலத்துக்கு தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்திருக்கின்றனர்.
இந்த வாக்குறுதியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் வட்டாரங்கள் வகுக்கப்பட வேண்டும். குறிப்பாக தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்களதும் மத்திய மலைநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களதும் பிரதிநிதித்துவம் சில நேரங்களில் தேர்தல் வட்டாரங்களை முறையாக வகுக்காவிடின் கேள்விக்குறியாகி விடும்.
எனவே, இந்த இரு பிரிவினரும் தமது மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக மாவட்ட மட்டத்தில் இயங்கும் தொகுதி நிர்ணய ஆணைக்குழுக்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் பிரேரணைகளை முன் வைக்க வேண்டும். இது குறித்து தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
தம் பிரதேசங்களில் வாழும் சனத்தொகை விபரங்களை திரட்டி வரைபடங்களைத் தயாரித்து எப்படி தம் சமூகங்களுக்கு பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கலாம் என்பது குறித்து இந்த ஆணைக்குழுக்கள் முன் பிரேரணைகளை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்லிம் பிரதேசங்களை பொறுத்த வரையில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைகள் இது விடயமாக தலைமைத்துவம் வழங்கி தம் பிரதேசத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவம் என்பது தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானது. அரசாங்கத்தின் அதிகார அலகாக எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களே இருக்கப் போகின்றன. அரசாங்க அபிவிருத்திப் பணிகள் இந்த மன்றங்களினூடாகவே கூடுதலாக மேற்கொள்ளப்படலாம். எனவே இங்கு இந்த இரு சமூகங்களினதும் பிரதிநிதித்துவம் இருப்பது முக்கியமானதாகும். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற ஏ.ஸி.எஸ். ஹமீத் ஒரு முறை குறிப்பிட்டது போன்று கேக்கினை ருசி பார்த்து உண்பதற்கு அதனை வெட்டும் கத்தி எங்கள் கையில் இருப்பது அவசியமென்று சுட்டிக்காட்டியிருந்தார். இல்லையென்றால் மற்றவர் வெட்டித் தரும் கேக் துண்டை மட்டுமே எங்களால் உண்ணக் கூடியதாக இருக்கும். இந்தக் கூற்று உணர்த்தும் அர்த்தம் மிகப் பாரதுரமானது.
இன உணர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் மும்முரமடைந்து வரும் நிலையில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் என்பது மிக முக்கியமானது. எனவே, வட,கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் இது குறித்து இப்போதிருந்தே கூடுதலான கரிசனை காட்டி தம் சமூகங்களின் எதிர்கால பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென நவமணி வலியுறுத்திக் கூறுகின்றது.
தேசத்தை கட்டியெழுப்பும் கட்சியின் முன்னாள் செயலாளர் ரவி திசாநாயக்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட இந்த குழுவில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தி இது போன்ற பல தெரிவுக்குழுக்களில் அங்கம் வகித்து அனுபவம் மிகு ஏ.எம். நஹியா மற்றும் தேவராஜ் ஆதவனும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் இக்குழுவில் அங்கம் வகிக்கும் இவர்களிருவரதும் பொறுப்பு மிக முக்கியமானது என்பதையும் குறிப்பிட்டு வைக்க விரும்புகின்றோம்.

Post a Comment