துருக்கியில் பேட்ரியட் ஏவுகணைகளுடன் களமிறங்கியுள்ள அமெரிக்க இராணுவம்
சிரியா தாக்குதல் மிரட்டலை தொடர்ந்து துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்க படை விரைந்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொது மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக புரட்சி படையினர் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு துருக்கி ஆதரவளிக்கிறது. சிரியா அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சிரியா ஸ்கட் ஏவுகணைகள் மூலம் துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலைமையை சமாளிக்க துருக்கிக்கு அதன் நட்பு நாடான அமெரிக்கா ஆதரவு கரம் நீட்டியுள்ளது. அதன் எதிரொலியாக அமெரிக்க படைகள் துருக்கி நாட்டுக்கு விரைந்துள்ளன. அதற்கான உத்தரவில், அமெரிக்க ராணுவ மந்திரி லியான் பெனேட்டா கையெழுத்திட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள 400 அமெரிக்க வீரர்கள் துருக்கி செல்கின்றனர். இவை தவிர 2 கம்பெனி பேட்ரியாட் ஏவுகணைகளும் துருக்கிக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஏவுகணை சிரியா ஏவும் ஸ்கட் ஏவுகணையை தடுத்து தாக்கி அழிக்கவல்ல சக்தி படைத்தது. எனவே, துருக்கி செல்லும் அமெரிக்க வீரர்கள் பேட்ரியாட் ஏவுகணைகளை செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதற்கிடையே, அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜெர்மனி 400 ராணுவ வீரர்களையும், நெதர்லாந்து 360 வீரர்களையும் துருக்கிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளன.

Post a Comment