ஊடகவியலாளர் நூறுல்ஹக் விருதுபெறுகிறார்..!
(அஸ்லம் எஸ்.மௌலானா)
சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய 'அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்' எனும் நூல் கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய படைப்புகளில் 11 சிறந்த நூல்களுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் திருமலையில் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண கலை இலக்கிய விழாவில் இதற்கான விருது வழங்கப்படவிருக்கிறது.
இவ்விருதுக்கு தெரிவாகியுள்ள 'அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்' எனும் படைப்பின் நூலாசிரியரான எம்.எம்.எம்.நூறுல்ஹக் இதற்கு முதல் தீவும் தீர்வுகளும் (1998), சிறுபான்மையினர் சில அவதானங்கள் (2002), முஸ்லிம் பூர்வீகம் (2006), ஈமானியப் பேரொளிகள் (2009) ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
அத்துடன் 'அல்ஹுதா' காலாண்டு இதழின் பிரதம ஆசிரியராகவும் 'பார்வை', 'சங்கமம்', 'இடி', 'முஸ்லிம் குரல்' ஆகிய வாரப் பத்திரிகைகளின் உதவி ஆசிரியராக கடமையாரியுள்ள இவர் தற்போது 'எழுவான்' பத்திரிகையின் பிரதி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அதேவேளை ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர் தேசிய பத்திரிகைகளில் அரசியல், சமூக, சமய ஆய்வுக் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்.
சிறந்த எழுத்தாளரும் முற்போக்கு விமர்சகருமான நூறுல்ஹக், அதற்காக பல பரிசுகளையும் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக இஸ்லாமிய ஆய்வு நிலையமும் தென்கிழக்கு ஆய்வு மையமும் இணைத்து வழங்கிய 'இளம் படைப்பாளருக்கான விருது', வெற்றி மாத இதழின் 'ஆக்க நினைவு விருது', சாய்ந்தமருது அபாபீல்கள் கவிதா வட்டத்தின் 'ஹாதிபுள் ஹுதா - நேரிய எழுத்தாளர் எனும் பட்டம்' வார உரைகல் வாரப் பத்திரிகையின் பொன் மலர் வெளியீட்டு விழாவில் 'கௌரவப் பதக்கம் அணிவித்து கௌரவம்', சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் கழகத்தின் 'நினைவு விருது' போன்ற பல விருதுகளையும் கௌரவங்களையும் இவர் பெற்றிருக்கிறார்.
ஊடக, கலை, இலக்கிய மற்றும் சமூக சேவைகளில் முன்னிலை வகித்து வருகின்ற நூறுல்ஹக் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் மருதம் கலை இலக்கிய வட்டம், ஹுனுப்பிட்டிய இலக்கிய வட்டம், சாய்ந்தமருது முன்னேற்றப் பேரவை ஆகியவற்றின் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
இவர் மர்ஹும்கலான அல்ஹாஜ் மௌலவி ஐ.எல்.முத்து (பஹ்ஜி), ஐ.எல்.பாத்தும்மா தம்பதியரின் கனிஷ்ட புதல்வராவார்.

Post a Comment