Header Ads



திவிநெகுமவும் முஸ்லிம் காங்கிரஸும்


(இன்றைய விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)

மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மேலும் குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை நேற்று முன்தினம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.இச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமயம் ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இதற்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. 

சமுர்த்தி அதிகார சபை, தெற்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றை இல்லாதொழித்து ‘திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம்’ எனும் புதிய கட்டமைப்பை கொண்டுவருவதன் மூலமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்க இச் சட்ட மூலம் வழிவகுக்கிறது. 

அத்துடன் மேற்படி அதிகார சபைகளில் புரளும் நிதியினை கையாளும் விதத்தில் வெளிப்படைத் தன்மையை இல்லாதொழிக்கவும் இச் சட்டமூலம் வழிவகுப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இதுவரை காலமும் மாகாண சபைகளின் அதிகாரத்தில்தங்கியிருந்த மேற்குறித்த அதிகார சபைகளை மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரின் கீழ் கொண்டு வருவதானது மாகாண சபைகளின் அதிகாரத்தைப் பறிப்பதாகவே அமைந்துள்ளதுடன் இந்த நாட்டின் அதிகாரப் பரவலாக்கலையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஏலவே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போதாது எனும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில் இருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட தட்டிப்பறிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் செயற்படுவதானது கவலைக்குரியதாகும்.இவ்வாறு மத்திய அரசாங்கம் செயற்பட்டாலும் அதற்கு மாகாண சபையானது கண்ணை மூடிக் கொண்டு அங்கீகாரம் வழங்குவதானது அதிகாரப் பரவலாக்கல் குறித்த அக்கறை எவருக்கும் இல்லை என்பதையும் மாகாண சபைகளின் இருப்பை கேலிக்குரியதாக்குவதையும் புலப்படுத்தி நிற்கிறது.அதிலும் குறிப்பாக சிறுபான்மையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மாகாண சபையிலேனும் திவிநெகும சட்டமூலம் தோற்கடிக்கப்படலாம் அல்லது திருத்தங்களுடன் மீண்டும் விவாதிக்கப்படலாம் என பலரும் எதிர்பார்த்தபோதிலும் அந்த எதிர்பார்ப்பும் வீண்போயுள்ளது.

துரதிஷ்டவசமாக இச் சட்டமூலத்திற்கு எந்தவித ஆட்சேபனையுமின்றி முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபையிலும் கிழக்கிலும் அங்கீகாரம் வழங்கியிருப்பதானது அக் கட்சியின் உறுப்பினர்களுக்கு சமூக நலன்களைப் பார்க்கிலும் தனிப்பட்ட நலன்களே முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

கட்சியின் தலைவரினதோ அல்லது செயலாளரினதோ அல்லது பிரதிச் செயலாளரினதோ சம்மதமோ அறிவுறுத்தலோ இன்றி கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்திருப்பதானது அக் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் அக் கட்சிக்குள் தலைமைத்துவக் கட்டுக்கோப்பு இல்லை என்பதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்த தகவல் வெளியானவுடன்  நாம் கட்சியின் செயலாளர் ஹஸன் அலி எம்.பி.யைத் தொடர்பு கொண்டபோது, அவ்வாறான ஒரு தகவலையே அவர் அறிந்திருக்கவில்லை என்பது எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது.ஒரு கட்சியின் செயலாளருக்கே தெரியாது அக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த அதிகாரப் பரவலாக்கல் சட்டமூலம் ஒன்றுக்கு ஆதரவளித்திருப்பதானது உண்மையில் மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும்.

இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தருணத்தில் கட்சியின் தலைவர் வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதானது இங்கு நடக்கின்ற விடயங்கள் தொடர்பில் அவர் கொண்டிருக்கும் அக்கறையை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைந்துள்ளது.முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் கோஷங்களை முன்வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டு இன்று எந்தவித சமூக நலனையும் கருத்திற்கொள்ளாது, குறித்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்களை கால அவகாசம் எடுத்து விளங்கிக் கொள்ளாது அதற்கு ஆதரவளித்துள்ளமையானது கவலைக்குரியதாகும்.கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களாகப் பதவியேற்று முதலாவது சபை கூடிய மறுகணமே முஸ்லிம் உறுப்பினர்கள் இவ்வாறு மக்களை மறந்து நடக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றால் இன்னும் சில மாதங்கள் கடந்தால் அவர்கள் எவ்வாறு நடக்க முற்படுவார்கள் என்பதை இப்போதே எம்மால் ஊகிக்கக் கூடியதாகவுள்ளது. மக்கள் இந்தத் தருணத்திலாவது சிந்திக்கத் தலைப்படுவார்களா? 



No comments

Powered by Blogger.