கல்முனை மாநகர சபையின் விஷேட கலந்துரையாடல் (படங்கள்)
(சௌஜீர் ஏ முகைடீன்)
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசணையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசிய மன்றம் நடைமுறைப் படுத்திவரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் – 2013 தொடர்பிலான ஆலோசனைகள் மற்றும் வருமான அதிகரிப்பு குறித்த விஷேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (18.10.2012) மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.
மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் மாகாண திறை சேரியின் பணிப்பாளர் ஜனாப் ஐ.எல்.எம்.அக்ரம், ஆசிய மன்ற பிரதிநிதிகள், சீடோ மற்றும் நேசம் ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
மாநகர சபையின் கடந்தகால வருமானங்கள், செலவீனங்கள், மாநகர சபையின் 2013ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் மற்றும் புதியவருமான மூலங்களை இனம் கண்டு அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தல் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திண்மக் கழிவுகளை கொண்டு சென்று கொட்டுவதற்கான செலவானது அதிகரித்து காணப்படுவதாகவும் இதற்கு மாற்று வழியாக மாநகர சபை எல்லைக்குள் அக்குப்பைகளை கொட்டுவதற்கு சபை நடவடிக்கை எடுக்கின்றபோது மாநகர சபையின் செலவில் பெரும்பகுதியை கட்டுப்படுத்த முடியும் எனவும், மக்கள் மாநகர சபைக்கு வரியினை செலுத்துகின்றபோதே அவர்களுக்கான சேவையினை சிறப்பாக செய்யமுடியும் அத்தோடு அவர்கள் வரியினை செலுத்துகின்றபோதுதான் மாநகர சபையின் சேவையினை கேட்டுப் பெறுவதற்கான உரிமையினை பெறுகின்றனர் எனவே இவற்றை வீடு வீடாக சென்று அறவீடு செய்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மக்கள் பங்கேற்புடனான வரவு செலவுத்திட்டத்தினை தயாரிப்பதில் மாநகர சபையுடன் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்ட நேசம், சீடோ ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களின் அபிப்பிராயங்களை பெறுவது தொடர்பான செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளனர்.
புதிதாக மாநகர சபைக்கு தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் மற்றும் வேறு திணைக்களங்களில் இருந்து அல்லது புதிதாக நியமிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்கள் மாநகர சபை நடைமுறைகள் தொடர்பான விளங்கங்களை பெறும்வகையில் வருமான மூலங்களை சீரமைப்பது, உள்ளூராட்சி மன்றங்களின் உப விதிகள் தயாரித்தல், உள்ளூராட்சி மன்றங்களின் அலுவலக நடைமுறைக் கோவைகள், மக்கள் பங்கேற்புடன் வரவு செலவுத்திட்டம், பிரஜைகள் அட்டவணை, உள்ளூராட்சி மாகாண சபையின் கொள்கைப் பிரகடனங்கள் மற்றும் நகல் திட்டங்கள் போன்றவற்றை தயாரிப்பது தொடர்பான புத்தகங்களை மாநகர சபையின் வைப்பகத்தில் ஆவணப்படுத்தும்வகையில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் வலீத், மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் இந்நிகழ்வின்போது கையளித்தார்.
Post a Comment