இலங்கையில் தமிழ் மொழியும், மொழி உரிமையும்
எம்.எம்.ஏ.ஸமட்
உலகின் இயற்கை எழில் கொஞ்சும் நாடுகளின் பட்டியலில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் மற்றும் ஏனைய இனத்தினர்கள் என பல்லின இனத்தையும் சேர்ந்த ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களில் 74 வீதமானோர் தாய்மொழியாகச் சிங்களத்தையும் 18வீதத்தினர் தாய் மொழியாகத் தமிழையும் எஞ்சிய 8 வீதமானோர் ஆங்கிலம் உட்பட பிற மொழிகளையும் பேசுகின்றனர்.
மொழி ஒரு சிறந்த ஊடகமாகும். இம்மொழிதான் மனித நாகரியத்தின் முதன்மைக் காரணியும் மனித விருத்தியின் அச்சாணியுமாகும். ஐக்கிய நாடுகள் தகவல் நிலையத்தின் தகவல்களின் படி 700 கோடி மக்கள் வாழம் உலகில் ஏறக்குறைய 6000 மொழிகள் உள்ளன. இவற்றில் 3000 ஆயிரம் மொழிகள் உலகைவிட்டும் மறைந்து விடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
தாய் மொழிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யுனஸ்கோ அமைப்பினது பொதுச் சபை மகாநாட்டின் போது ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ஆம் திகதியை சர்வதேச தாய் மொழி தினமாக பிரகடப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் நிமித்தம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழித் தினமாக உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
உலகில் பேசப்படுகின்ற மொழிகளுள் மிகமும் பழைமை வாய்த் மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் நம் தாய் மொழி தித்திக்கும் இன்பத் தமிழ் மொழியும் ஒன்றாகும். இந்தத் தமிழ் மொழியை உலகளாவிய ரீதியில் ஏறக்குறைய 70 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், மியன்மார், தாய்லாந்து. இந்தோனேசியா, பிஜி, மொரிசியஸ் போன்ற நாடுகளில் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதனால் இந்நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகின்றது. அரச கரும மொழியாக தமிழ் மொழியானது இலங்கையில் மாத்திரமின்றி இந்தியா (தமிழ் நாடு) மற்றும் சிங்கப்பூரிலும் அரச கரும மொழியாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இலங்கையில் அரச கரும மொழியாகவுள்ள தமிழ் மொழிக்கு எத்தகைய உரிமை, முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது அல்லது வழங்கப்பட்டு வருகிறது என்பதற்கான புதிய ஆய்வொன்று மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.
மொழி உரிமை
எல்லோருக்கும் அடிப்படை உரிமை பொதுவானதாகும், அதனை அனுபவிப்பதற்கான உரிமையுமுண்டு. எல்லா மனிதர்களும் சுதந்திரமாகப் பிறந்துள்ளனர். கௌரவம், உரிமை அடிப்படையில் எல்லோரும் சமமானவர்களே. இன, நிற, மத, ஆண், பெண், மொழி அல்லது Nவுறு காரணிகள் இனரீதியான அல்லது சமூக ரீதியான, சொத்து, பிறப்பு ஆகிய எந்தவிதமான முக்கியத்துவமும் இன்றி எல்லா அடிப்படை உரிமையும் சகலருக்கும் உரித்தானவை என மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனம் குறிப்பிடுகிறது. இந்த உரிமைகள் எந்தளவுக்கு உலக நாடுகளில் வழங்கப்படுகிறது. இலங்கையில் எந்த நிலையில் காணப்படுகிறது என்பதெல்லாம் ஆய்வு செய்யப்பட வேண்டியதொன்றாகும். இலங்கையில் வாழும் மூவின சமூகத்தினதும் மொழி உரிமை தொடர்பில் இலங்கை அரசியலமைப்பு எவ்வாறு குறிப்பிட்டுள்ளது என்பதை இந்நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் சகலரும் அறிந்திருபபது நமது கடமையாகும்.
இலங்கையின் அரசிலமைப்பின் நான்காவது அத்தியாயம் மொழிக்காக வகுக்கப்பட்டுள்ளது. 18 தொடக்கம் 25 வரையும் உள்ள உறுப்புரைகள் மொழியையும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் விபரிக்கிறது.
இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியென 18வது உறுப்புரையும் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகள் என 19வது உறுப்புரையும் குறிப்பிடுகின்றது. இருப்பினும் அரசியலமைப்பிற்கான 13வது திருத்தின் மூலம் 18(i) என்ற உறுப்புரையின் பிரகாரம் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழிகளாகும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகும் எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உலகில் இரு மொழிகளை தங்களது நாடுகளின் அரச கரும மொழிகளாக ஆக்கிக் கொண்ட நாடுகள் வரிசையில் பின்லாந்து, பெல்ஜியம், தென்னாபிரிக்கா, கனடா, அயர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன.
மொழியை அடிப்படையாகக் கொண்டு எவரும் பாகுபாடு காட்டக்கூடாது. இது ஓர் அடிப்படை உரிமையாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, மாகாணசபை உறுப்பினரொருவருக்கு அல்லது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு முறையே பாராளுமன்றத்தில் அல்லது குறித்த மாகாண சபையில் அல்லது உள்ளுராட்சி மன்றத்தில் தேசிய மொழிகள் இரண்டில் எம்மொழியிலேனும் தனது பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உரிமையுண்டு. இதேபோல், இந்நாட்டின் ஒரு பிரஞை தேசிய மொழிகள் இரண்டில் எம்மொழியிலேனும் கல்வி கற்க முடியும் என முறையே அரசிலமைப்பின் 20வது மற்றும் 21வது உறுப்புரைகள் குறிப்பிடுகிறது.
சிங்களமும் தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும.; அத்துடன் வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன் பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும் பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும்.
ஆயினும், உதவி அரசாங்க அதிபரின் பிரிவொன்றை (தற்போது உதவி அரசாங்க அதிபர் பிரிவு பதம் பாவிக்கப்படுவதில்லை) உள்ளடக்கும் கூறு எதுவும் மொத்தச் சனத்தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத்தொகை என்ன விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற்கொண்டு சிங்கள, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தில் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்படும் மொழி தவிர்ந்த ஒரு மொழி அத்தகைய இடப்பரப்பிற்கான நிர்வாக மொழிhயகப் பயன்படுத்தலாம்.
தமிழ் மொழியானது நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்படும் ஏதேனும் இடப்பரப்பில் அலுவலர் என்ற தன்மையில் செயலாற்றும் அலுவலரொருவர் அல்லாத ஏதேனும் ஆளொருவர், ஒன்றில் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் அலுவலர் என்ற தன்மையில் எவரேனும் அலுவலரிடமிருந்து கடிதத் தொடர்புகள் பெறுவதற்கும் அவ்வலுவலருடன் தொடர்பு கொள்வதற்கும் உரித்துடையவராவார். ஏதேனும் அலுவலக முறையான இடாப்பை. பதிவேட்டை, வெளியீட்டை அல்லது வேறு ஆவணத்தைச் சோதனை செய்வதற்கு அல்லது அவற்றிலிருந்து பிரதியொன்றை அல்லது மொழிபெயர்ப்பொன்றை பெறுவதற்கும் அல்லது விடயத்துக்கேற்ப ஒன்றில் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பொன்றைப் பெறுவதற்கும் உரித்துடையவராவார்.
ஏதேனும், அலுவலக முறையான இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைச் சோதனை செய்வதற்கு அல்லது அவற்றிலிருந்து பிரதியொன்றை பெறுவதற்கு அவருக்குள்ள உரிமையை சட்டம் ஏற்றுக்கொண்டால் ஒன்றில் சிங்களத்தில், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பெற்றுக் கொள்ள உரித்துடையவராவார்.
ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் எல்லாக் கட்டளைகளும் பிரகடனங்களும் விதிகளும் துணை விதிகளும் அறிவிப்புக்களும் ஏதாவது அரச நிறுவன மொன்றினால் அல்லது மாகாணசபை, உள்ளுராட்சி மன்றத்தினால் பிரசுரிக்கப்படும் சுற்றறிக்கைகளும் மாதிரிப் படிவங்களும் எல்லா அலுவலக முறையான ஆவணங்களும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சிங்களத்தில் அல்லது தமிழில் பிரசுரிக்கப்படல் வேண்டும்.
பகிரங்க சேவைக்கு, நீதித்துறை சேவைக்கு, உள்ளுராட்சிமன்ற சேவைக்கு, அரச கூட்டுத்தபானத்துக்கு அல்லது நியதிச் சட்ட நிறுவனத்துக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்கான ஏதேனும் பரீட்சையில் ஆளொருவர் ஒன்றில் சிங்களம் மூலம் அல்லது தமிழ் மூலம் அல்லது அவர் தெரிந்தெடுக்கும் மொழியொன்றின் பரீட்சிக்கப்பட உரித்துடையவராவார்.
எல்லாச் சட்டங்களும் துறைநிலைச் சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் சட்டமாக்கப்படுதலும் அல்லது இயற்றப்படுதலும் வேண்டும். அவை ஆங்கில மொழிபெயாப்;பையும் கொண்டிருத்தல் வேண்டும்.
சிங்களமும் தமிழும் நீதிமன்றங்களின் மொழியாக இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் இருத்தல் வேண்டும். எவரேனும் கட்சிக்காரர் அல்லது விண்ணப்பதாரர் அல்லது அத்தகைய கட்சிக்காரரின் அல்லது விண்ணப்பதாரரின் பிரதிநிதியாக இருப்பதற்குச் சட்டப்படி உரித்துடைய எவரேனும் ஆள், ஒன்றில் சிங்களத்;தில் அல்லது தமிழில் வழக்குத் தொடரலாம்.. வழக்குரைகளையும் ஏனைய ஆவணங்களையும் சமர்பிக்கலாம். பங்குபற்றலாம்.
நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழியை அறிந்திராத எவரேனும் கட்சிக்காரர் அல்லது விண்ணப்பதாரர் அரசினால் வழங்கப்படும் வரைவிலக்கணத்தையும் சிங்கள அல்லது தமிழ் மொழிபெயர்ப்பையும் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவராவார் என்பதுடன் சட்;டத்துக்கிணங்க அவர் பெறுவதற்கு உரித்துடையவராகயிருக்கக் கூடிய பதிவேட்டின் அத்தகைய ஏதேனும் பாகத்தை அல்லது அதன் மொழிபெயர்ப்பை பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவராவார்.
இவ்வாறு, மொழி உரிமை தொடர்பாக அரசியலமைப்பின் 4ஆம் அத்தியாயத்தின் உறுப்புரைகள் குறிப்பிடுகின்றவேளை, 25வது உறுப்புரையானது 18வது உறுப்புரையிலிருந்து 24வது உறுப்புரை வரையிலும் விபரிக்கப்பட்ட விடயங்களை பயன்படுத்துவதற்கான சகல விதமான வசதிகளையும் ஏற்பாடுகளையும் அரசாங்கமே எற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்பதையும் விபரிக்கிறது.
மொழி உரிமைகள் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டங்கள் காத்திரமாகக் கூறியிருக்கின்றபோதிலும் அச்சட்டங்கள் சரியான விதத்தில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விடயமாகும். இலங்கையில் தமிழ்மொழிக்கான உரிமையும் அதற்கான அந்தஸ்தும் வழங்கப்படுவது அவசியமாகும்.
மும்மொழி இலங்கைச் சமுதாயம்
இந்நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவேண்டுமாயின் இந்நாட்டில் வாழுகின்ற மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதோடு. ஒருவரின் கருத்தை மற்றவர் மதித்துச் செயற்படுதல் வேண்டும். ஒரு சமூகத்தின் பிரச்சினையை மற்றைய சமூகம் விளங்கிக்கொண்டு, விட்டுக்கொடுப்புடனும் இதயசுத்தியுடனும் அவற்றைத் தீர்த்து வைப்பதற்காகச் செயற்படு மனித நாகரிகமாகும். இத்தகைய செயற்பாடுகளை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வருவதற்கு முக்கிய தடையாக இருப்பது பல்மொழியறிவின்மையாகும். ஒருவர் பேசுகின்ற மொழி மற்றொருவருக்கு புரியாமையாகும். இந்நாட்டில் பாவனையிலுள்ள சகல மொழிகளையும் இந்நாட்டுப் பிரஜைகள் சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அந்தவகையில் சிங்களவர்கள் தமிழையும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களத்தையும் கற்றுக் கொள்வதோடு ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வதன் ஊடாக சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வுக்கான பாதையைத் திறந்து நிரந்தர சமாதானத்துக்காக பயணிக்க முடியும். வெறுமனே பதவி உயர்வுகளுக்காகவும் கொடுப்னவுகளைப் பெறுவதற்காகவும் சிங்களத்தையும் தமிழையும் கற்றுக் கொள்வதைத் தவிர்த்து, இதய சுத்தியுடன் ஒரு இனம் மற்றுமொரு இனத்தைப்; புரிந்து கொண்டு வாழ்வதற்காக மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களினதும் முன்னுள்ள கடப்பாடாகும்.
எரிகின்றன விறகில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தால் நெருப்பை அணைக்க முடியாது. நிகழ்கின்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து கூறிக்கொண்டும் எழுத்திக் கொண்டுமிருப்பதனால் எதுவும் ஆகிவிடாது. மாறாக அப்பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும், அதற்காக எத்தகையை முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பது பற்றிச் சிந்திப்பதும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவதும் இந்நாட்டில் வாழுகின்ற சமூகங்களினதும் அரசியல் தலைமைகளினதும் அதிகாரத் தரப்பினரதும் பொறுப்பாகும். இந்நாட்டின் சகல சமூகங்களையும் சார்ந்த எதிர்கால சந்ததியினர் புரிந்துணர்வுடன் வாழ வேண்டுமாயின் பழைய கசப்புணர்வுகள் மறக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் தங்களது மனப்பாங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒரு சமூகம் எதிர்நோக்கும் பிரச்சியினையின் யதார்த்தத்தை உணர்ந்து அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அடுத்த சமூகத்தின் மத்தியில் ஏற்படாதவரை இந்நாட்டில் எத்தகைய திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் எத்தகைய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும், எத்தகைய பேச்சுவார்த்தைகள் நடந்தேரினாலும் அவை சாத்தியப்படுவது முயல்கொம்பு நிலைதான்.
சாதாரண குடிமகன் முதல் நாட்டின் அதிகாரத்தில் உள்;ளோர் வரை மனப்பாங்கில் மாற்றத்தை எற்படுத்தப்படுவது அவசியமாகும். குறிப்பாக மொழி தொடர்பான பிரச்சினைகள் எழாமல் தவிர்க்கப்பட வேண்டுமேயானால் மொழியுரிமை தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பில் குறிப்படப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்தும் மனப்பாங்கு குறிப்பாக அரச நிறுவனங்களில் கடமை புரியும் கீழ் மட்ட ஊழியர் முதல் உயர்மடட்ட ஊழியர் வரையில் ஏற்பட வேண்டும். மனப்பாங்கு மாற்றமே நாடடின் சுபிட்சத்திற்கான வழியைத் திறக்கும்.
'நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள், இந்த நாடு எம் அனைவருக்கும் சொந்தமானது எங்களுக்குள் இன,மத பேதம் இல்லை. வடக்கு மக்கள் தெற்குக்குச் செல்லலாம், தெற்கு மக்கள் வடக்குக்குச் செல்லலாம்' என்று ஜனாதிபதி அடிக்கடி பேசுவது வெறுமனே தட்டிக்களிக்கப்படக் கூடாது. இந்த எண்ணக்கருக்களை, இந்த இலக்கை அடைவதில் உறுதி வேண்டும்.
இந்நாட்டில் வாழுகின்ற இளம் பராயத்தினர் எதிர்காலத்தில் ஒரு சுபிட்சகரமான வளம் நிறைந்த இலங்கையைக் காண வேண்டுமாயின் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்பும், ஒத்துழைப்பும் நல்ல மனப்பாங்கும் உருவாக வேண்டும். அதற்கு மொழிகளின் அவசியம் இன்றியமையாதது.
தேசிய ரீதியாக ஒன்றிணைந்து சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளை சிறந்த முறையில் கையாளுகின்ற இலங்கைச் சமுதாயமொன்றை உருவாக்கும் பெரும் நோக்கத்தை வெற்றி கொள்ளும் மும்மொழி இலங்கைச் சமுதாயமொன்றுக்கான பத்தாண்டு வேலைத்திட்டம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், 2012ஆம் ஆண்டானது மும்மொழி இலங்கைக்கான ஆண்டாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இவ்வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கதொன்றாகும். ஏனெனில் இந்நாட்டில் வாழுகின்ற ஒரு சமூகம் பேசுகின்ற மொழி மற்றய சமூகத்துக்கு விளங்காததன் காரணத்தினால் ஒரு சமூகம் மற்றய சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலையை இல்லாமல் செய்யும். இத்திட்டமானது இந்நாட்டில் வாழுகின்ற மூவின மக்களையும் சிங்களத்தையும் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்கச் செய்வதன் மூலம் மொழி விளங்காமல் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதோடு பல துறைகளிலும் முன்னேற்றமடைவதற்கு வழிவகுக்கும். இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பணிகள் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, உயர் கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு என்பவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்திட்டம் வெற்றியடைய அனைவரினதும் ஒன்றுபட்ட உழைப்பு அவசியமாகும்.
இந்நாட்டிலுள்ள மக்களுக்கு பயன்தரக் கூடிய எத்தகையை திட்டங்கள் வகுக்கபட்டாலும்; அத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இந்நாட்டுப் பிரஜைகளட என்ற வகையில் நம்முன்னுள்ள பொறுப்பாகும்.. அத்திட்டங்களின் இலக்குகளை வெற்றி கொள்வதற்கான நேர்ச்சிந்தனையான மானப்பாங்கு நாட்டு மக்களிடமும் அத்திட்டங்களுடன்; சம்பந்தப்பட்டவர்களிடமும் உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகாத வரை சுபிட்சமான இலங்கை என்ற கனவு நனவாவது கடினமானது. ஆசியாவின் ஆச்சரியம் என்ற இலக்கின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள மும்மொழி இலங்கைச் சமுதாயம் என்ற திட்டத்தின் இலக்கை ஜனாதிபதி என்ற தனி மனிதனால் மாத்திரம் அடையமுடியாது. அனைத்து இன மக்களினதும் அனைத்துச் சமூகங்களினதும் மதத்தலைவர்களினதும் அனைத்து அரசியல் தலைமைகளினதும், புத்திஜீவிகளினதும், ஒவ்வொரு துறைசார்ந்தவர்களினதும் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் அவசியமானது.

Post a Comment