Header Ads



நோர்வே தூதுவருடன் அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு (படங்கள்)



(முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப்பிரிவு)

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்ற தெரிவுக்குழுவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமென தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லொச்செனிடம் தெரிவித்தார்.  அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வுக்கான உத்தேச தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது மிகவும் அவசியமென தாம் கருதுவதாகவும் அவர் கூறினார். 

இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவர் கிறீட் லொச்சென், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன் கிழமை (17) மாலை அவரது இல்லத்தில் சந்தித்து இரு நாடுகள் தொடர்பான  முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

விடுதலைப்புலிகளுடனான ஆறு சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் தாம் பங்குபற்றியதாகவும் இனப் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை ஒரு முக்கிய தரப்பினரான முஸ்லிம்களுடைய பரிமாணம் தனியாக உள்வாங்கப்படாதது ஒரு பாரிய குறைபாடாக தொடர்ந்தும் இருந்து வருவதாகவும், இந்த பாரதூரமான குறைபாடு இனியும் தாமதிக்காமல் நிவர்த்திக்கப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகுமென்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். 

நோர்வே யுத்த நிறுத்த, சமாதான பேச்சுவார்த்தைகளில் முக்கிய ஏற்பாட்டாளராக இருந்து வந்துள்ளது. அந்த நிலைமையில் நோர்வே இப்பொழுது இல்லை. எரிக்ஸ் சொல்ஹெய்ம் நோர்வேயின் சார்பில் அதிகூடிய கவனத்தை இலங்கை விவகாரத்தில் செலுத்தியிருந்தார் எனக் கூறி, இப்பொழுது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் வினவிய பொழுது, அவர் தற்பொழுது அமைச்சராக இல்லை. அரச உயர் அதிகாரி ஒருவராக இருந்து வருகிறார் என தூதுவர் பதிலளித்தார். 

தாம் மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சுகளில் ஒன்றான நீதியமைச்சை ஏற்றிருப்பதாகவும் அத்துடன் இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப்பெற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருப்பதாகவும் ஹக்கீம் விளக்கினார். 

நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதில் நோர்வே தூதுவர் அதிக ஆர்வம் செலுத்தினார். அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து வரும் புதிய சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்கள் பற்றியும் அவர் கேட்டறிந்து கொண்;டார். நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டது குறித்தும் அவர் அமைச்சர் வினவினார். 

கற்றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் பற்றியும் தூதுவர் அமைச்சரிடம் கேட்டார். அந்த விதந்துரைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், செயலாளர் நாயகம் ஹஸன் அலி ஊடாக அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை முன்வைத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.  

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாதிருப்பது குறித்தும் அதுபற்றிய அமைச்சரினதும், அரசாங்கத்தினதும் நிலைப்பாடு குறித்தும் அவர் வினவியபொழுது, அதுபற்றி கேட்கும் போது தமக்கு வியர்த்துப்போடுவதாக நகைச்சுவையாகவும், புன்னகைத்தவாறும் கூறிய அமைச்சர், அதனால் தாம் அணிந்திருந்த கோர்ட்டை கழற்றியெடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார். 

மரண தண்டனை விவகாரம் உண்மையிலேயே மிகவும் பாரதூரமாக நோக்கப்பட வேண்டியது என கூறிய அமைச்சர் அதுபற்றி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தம்முடன் கலந்துரையாடியதாகவும் அதுபற்றிய ஆவணமொன்றை அனுப்பிவைத்திருப்பதாகவும் தெரிவித்ததோடு, அந்த விடயத்தில் ஜனாதிபதியின் தீர்மானமே இறுதியானதாகும் என்றார். மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் பலவருட காலங்களாக இருந்து வரும் கைதிகள் காரணமாக இடநெருக்கடி மற்றும் பற்றாக்குறை என்பன நிலவுவதாகவும் அமைச்சர் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். 

நோர்வே அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இலங்கைக்கு வழங்கி வந்த பல்வேறு உதவிகள் பின்னர் தடைப்பட்டுவிட்டதாக கவலை தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், புதிதாக அவ்வாறான உதவிகளையும், வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் யுத்த சூழ்நிலையில் பணியாற்றிய அனுபவம் தமக்கு இருப்பதாக தூதுவர் கிறீட் லொச்சென் தெரிவித்தார். 

இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான ராஜதந்திர, பொருளாதார மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த நல்லுறவுகள் நீடிக்குமென அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் நம்பிக்கை வெளியிட்டார். 

இச் சந்திப்பில் அமைச்சரின் இணைப்புச் செயலாளரான சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டார். 



No comments

Powered by Blogger.