Header Ads



சுவிஸில் இப்படியும் ஒரு கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)


மாடுகளுக்கு ‘காதல் மூடு’ எப்போது வருகிறது என தெரிந்துகொள்ளும் வகையில் சென்சார் கருவி ஒன்றை சுவிட்சர்லாந்து நிறுவனம் உருவாக்கியுள்ளது. டெம்பரேச்சர் அதிகமாகி, மாட்டுக்கு ‘மூடு’ வந்துவிட்டால் மாடு வளர்ப்பவரின் செல்போனுக்கு உடனே மெசேஜ் வந்துவிடும். சுவிட்சர்லாந்தில் விவசாயம், பண்ணை தொடர்பான எலக்ட்ரானிக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் ‘அனிமோன்’. மாடுகளுக்கான கருவி ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘அனிபாக்ஸ்’ என்பது இதன் பெயர். உடல் வெப்பநிலையை கணக்கிடும் சென்சார் ஒன்று மாட்டின் கருப்பை பகுதியில் வைக்கப்படும். கர்ப்பத்துக்கு பசு மாடு தயாராகும் நேரத்தில், கருப்பை பகுதியில் வழக்கத்தைவிட அதிக சூடு உண்டாகும். 

உடல் வெப்பநிலை உயர்வது, சென்சார் மூலம் உணரப்படும். இதுபற்றிய தகவல், பசுவின் கழுத்து பகுதியில் பொருத்தப்பட்டி ருக்கும் டிரான்ஸ்மிட்டர் கருவிக்கு வயர்லெஸ் முறையில் அனுப்பப்படும். டிரான்ஸ்மிட்டர் கருவியும் அனிமோன் நிறுவனத்தின் சர்வரும் செல்போன் சிப் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். பசுவின் கருப்பை வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு, டிரான்ஸ்மிட்டர் மூலமாக சர்வருக்கு அனுப்பப்படும்.  மாட்டின் அன்றாட செயல்பாடுகளில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிந்தாலும், அதுபற்றிய தகவலும் சர்வருக்கு அனுப்பப்படும். இது அனிமோன் நிறுவனத்தின் கம்ப்யூட்டரில் வரைபடமாக தொடர்ந்து பதிவாகும். வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை பதிவானால், பசு வளர்ப்பவரின் செல்போனுக்கு தானாக மெசேஜ் பறக்கும். 

பசுவை காளை மாட்டுடன் சேரச் செய்வது அல்லது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று செயற்கை கருவூட்டல் மூலமாக பசுவை கருவுற செய்யலாம். அதற்கு முன்பு, கருப்பையில் பொருத்தப்பட்ட சென்சாரை அகற்றிவிட வேண்டும். சென்சார் பேட்டரியில் சார்ஜ் குறைவது, சென்சார் மக்கர் செய்வது, செல்போன் சிப் வேலை செய்யாமல் இருப்பது போன்ற கோளாறுகள் இருந்தாலும் சர்வருக்கு தகவல் தானாக போய்விடும்.

மாடு வித்தியாசமாக கத்துவது, முரண்டு பிடிப்பது போன்ற செய்கைகள் மூலமாகவே, அது கர்ப்பத்துக்கு தயாராவதை மக்கள் தெரிந்துகொள்கின்றனர். சில நேரங்களில் நோய் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் மாடுகள் வித்தியாசமாக கத்தும், முரண்டு பிடிக்கும். இதை தவறாக கருதி, கருவூட்டல் செய்யும்போது மாடு கர்ப்பம் தரிக்காது. கருப்பை வெப்பநிலையை துல்லியமாக அறிந்து கருவூட்டல் செய்வதால் விவசாயிகள் தேவையற்ற செலவை தவிர்க்க முடியும் என்கின்றனர் அனிமோன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.


No comments

Powered by Blogger.