Header Ads



சமய நல்லிணக்கத்துக்கு உழ்ஹிய்யாவை பயன்படுத்துவோம்..!


எம்.ஜே.எம். தாஜுதீன்

ஹஜ் பெருநாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ‘உழ்ஹிய்யா’வை நிறைவேற்றுவது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஓர் அச்ச உணர்வு மேலோங்கியிருப்பதை எவரும் மறுத்திடமுடியாது.

கடந்த காலங்களில் உழ்ஹியா தொடர்பில்  முஸ்லிம்கள் அனுபவித்த கசப்பான சம்பவங்களே இதற்கான காரணங்களாகும்.

முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாள் காலத்தில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கு மகா சங்கத்தினரோ- பெளத்த மத குருமாரோ எதுவிதமான இடைஞ்சல்களையும் செய்ய மாட்டார்கள் என்று ஜனாதிபதியின் பெளத்த மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலகம தம்ம ரன்ஸி தேரர்  அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.


எனினும் கண்டி மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள- கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இறைச்சிக்காக ஆடு மாடுகளை அறுப்பதை தடை செய்யும் பிரேரணை முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதே நடவடிக்கையை இலங்கையின் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் பின்பற்றினால் முஸ்லிம்களின் உழ்ஹிய்யா- அகீகா- நேர்ச்சை போன்ற சமயக் கடமைகளை நிறைவேற்றுவது  கேள்விக்குரியாகிவிடும்.

இதன் காரணமாக முஸ்லிம்கள் தமது சமயக் கடமைகளை நிறைவேற்றும் உரிமைகள் கோரி நீதி மன்றங்களை நாடவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம்.

முன்னேப்போதும் இல்லாத அளவில் இன்று முஸ்லிம்களுக்கு இனரீதியான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. அவர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்படுகின்றன. சில ஊடகங்கள் கண்மூடித்தனமாக முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பொய்ப்பிரசாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றன. 

இவ்வாறான கால கட்டத்தில்தான் முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். திடீரென உணர்ச்சிவசப்பட்டு முன்யோசனையற்ற செயல்களில் இறங்கி பிரச்சினைகளை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடாது.

ஹஜ் பெருநாள் தினங்களில் நாம் நிறைவேற்றும் உழ்ஹிய்யாவை பிறமத்தவர்கள் வெறுப்புடன் நோக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளையொட்டி குர்பான் கொடுக்கும்போது சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாற்று மதத்தவர்களுக்குத் தொல்லைகள் ஏற்படும் விதத்தில் ஆடு-மாடுகளை பொது இடங்களில் வைத்து அறுத்தல்- அவற்றின் கழிவுகளைப் பொது இடகளில் வீசுதல்- ஆடு- மாடுகளை சட்டவிரோதமாக ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் போன்ற விடயங்கலால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிவாசல் நிருவாகிகள் இது விடயத்தில் அதிக கவனம் செலுத்தி தமது பிரதேச மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏனைய மதத்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில் இஸ்லாமிய ஒழுக்க முறைகளைப் பேணி இம்முறை முஸ்லிம்கள் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற வேண்டும்.

ஏனைய மதங்களில் உள்ளதுபோல் இறைவனின் பெயரால் மிருகங்களை அறுத்துப் பலியிடும் நடைமுறை இஸ்லாத்தில் இல்லையென எவரும் கூறிவிட முடியாது.

ஹஜ் கடமைக்காக 30 லட்சம் மக்கள் புனித மக்காவில் கூடினார்கள் என்றால் அங்கு ஏறக்குறைய அதே லட்சக் கணக்கில் மிருகங்கள் அறுத்துப் பலியிடப்படவேண்டும்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தாம் கண்ட கனவை உண்மைப்படுத்துவதற்காக தம் மகனையே இறைவனுக்காக அறுத்துப் பலியிடத் துணிந்தபோது இறைவன் சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டை இறக்கிவைத்து அதனை அறுத்துப் பலியிடுமாறு உத்தரவிட்டான்.

எனவே அல்லாஹ்வுக்காக மிருகங்களை அறுத்துப் பலியிடுவது இறை கட்டளையாகும். அதனை இறைவனே மனிதருக்கு கற்பித்தான். இதனை இறைவன் திருக்குர்ஆனில் -

“ உமது றப்புக்காக தொழுது- அறுத்துப் பலியிடுவீராக!” (108:02) 

“ அதன் மாமிசங்களோ- அதன் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைந்துவிடுவதில்லை. எனினும் உங்களுடைய (பரிசுத்தத் தன்மையும் ) பயபக்தியும் தான் அவனை அடையும” (22:37) என்று கூறுகிறான்.

இந்த இறை கட்டளைப்படி நாம் நிறைவேற்றும் உழ்ஹிய்யாவை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கக் கூடாதென்ற ஒரு நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. எனினும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இதற்கான ஆதாரங்களைக் காண முடியவில்லை.

இது பற்றித் திருக்குர்ஆன் குறிப்பிடும்போது:

“அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு.மாடு. ஒட்டகம் முதலிய) கால்நடைப் பிராணிகளை அவனது திருநாமத்தைக்கூறி- குறிப்பிட்ட நாட்களில் அறுப்பதற்காகவும் அங்கு வருவார்கள். ஆகவே அவ்வாறு அறுக்கப்பட்டவைகளில் இருந்து நீங்களும் புசியுங்கள். ஏழைகள்- தரித்திரர்கள் முதலியவர்களுக்கும் கொடுங்கள்”. (22:28)

ஊழ்ஹிய்யாவைப் பொறுத்தளவில் அதன் இறைச்சியை இன்னார் இன்னாருக்கத்தான் கொடுக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. மாற்றமாக –  அதனை மற்றவர்களுக்கும் - கஷ்டப்பட்டவர்களுக்கும்- வறியவர்களுக்கும்- கேட்டவர்களுக்கும்-கேட்காதவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றது.

இறைச்சி கொடுபடக்கூடிய கஷ்டப்பட்டவர்கள்  வறியவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருக்கவேண்டும் என அல்லாஹ்வின் தூதர் நிபந்தனை விதிக்கவில்லை.

உழ்ஹிய்யா கொடுக்கப்படும் இடத்துக் ஒரு காபிர் வந்து இறைச்சி கேட்டால் அவருக்கு அதைக் கொடுக்கவேண்டும்.

“ அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதனைக் கேட்வர்களுக்கும் கேட்காதவர்களுக்கும் கொடுங்கள்- (அல் குர்ஆன் - 22:36)

கஷ்டப்படக்கூடிய ஒருவர் பிர மதத்தைச் சார்ந்தவரராக இருந்தால் என்ன காபிராக இருந்தால் என்ன அனைவருக்கும் கொடுக்கலாம் என்பதையே மேற்கூறிய ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நெருப்பை நெருப்பால் அனைக்க முடியாது. தண்ணீர் கொண்டுதான் அனைக்கமுடியும். அதுபோல் தீமையை தீமையைக் கொண்டல்ல- நன்மையைக் கொண்டு தடுத்துக்கொள்ள திருக்குர்ஆன் இப்படி வழிகாட்டுகின்றது.

'நன்மையும் தீமையும் சமமாகிவிடா.(ஆதலினால் நபியே தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் உமக்கும் அவருக்குமிடையே உள்ள பகைமை மாறி உம்முடைய (கொடிய) விரோதி (அதே சமயத்தில்) உம்முடைய மெய்யான ( மிக நெருக்கமான) சினேகிதராகி விடுவார். (41:34)

புனித ரமழான் மாதத்தில் இப்தார் நிகழ்வுகளுக்கு  நாம் பிற மதத்தவர்களையும் அழைத்து அவர்களை கௌரவித்து இன நல்லுறவையும் சமய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயற்சித்துள்ளோம். இன்றைய கால கட்டத்தில் இது வரவேற்கத்தக்கது. இதே அனுகுமுறையை நாம் உழ்ஹிய்யாவின் போதும் பின்பற்றலாம்.

இறைச்சி உண்ணக்கூடிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உழ்ஹிய்யாவை பகிர்ந்தளிப்பதன்மூலம் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வையும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்.


No comments

Powered by Blogger.