ரவூப் ஹக்கீமும், முஸ்லிம் ஊடகங்களும்..!
(சித்தீக் காரியப்பர்)
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் தோன்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கிழக்குத் தேர்தல் தொடர்பிலும் தனது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்தும் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தார். தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பில் பெரும்பாலான ஊடகங்கள் தனது கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருவதாகத் தெரிவித்தார். விசேடமாக, அவர் தமிழ் ஊடகங்கள் மீதே இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
கிழக்குத் தேர்தலின் பின்னரான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடுகள் தொடர்பில் தனது கட்சியினதோ அல்லது தனதோ கருத்துகளை உள்வாங்காத நிலையிலேயே ஊடகங்கள் செயற்பட்டன என்ற பொருள்பட அவர் கருத்துகளை முன்வைத்திருந்தார். அத்துடன் தனது தரப்பு நியாயங்களை வெளிக்காட்ட ஊடகம் ஒன்று இல்லாமையே இதற்கெல்லாம் காரணம் எனவும் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்.
தனது தரப்பு நியாயங்களை வெளியிட ஊடகங்கள் இல்லை என அவர் தெரிவித்திருப்பதனை இரண்டு வகையில் பார்க்க வேண்டியுள்ளது. முதலில் தனது கட்சியிடம் ஓர் ஊடகம் இல்லை என்று அவர் சொல்ல வருவதாகக் கொள்ள முடியும். இவ்வாறானதொரு குறைபாடு நிலவுமானால் அதனைக் கட்சி மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ள முடியும். இதனை வெளியாரிடம் கூறி எதுவும் நடக்கப் போவதில்லை.
ஆனால், இந்த நாட்டில் வெளியாகும் ஊடகங்கள் தங்களது கருத்துகளை உள்வாங்குவதில்லை என அவர் தெரிவித்திருந்தால் அந்த நிலைக்கான பொறுப்பினையும் முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடுகள் தொடர்பில் அறிந்து கொள்ள காங்கிரஸ் தலைமையுடனும் ஏனைய முக்கியஸ்தர்களுடனும் ஊடகங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அனைவரும் தங்களது தொலைபேசிகளை மூடி விட்டு இருந்தனர். சிலர் இருந்து கொண்டே இல்லை சொல்லுமாறும் தங்களது உதவியாளர்களுக்குக் கூறினர். தப்பித் தவறி சில வேளைகளில் பதில் கிடைத்தாலும் என்ன விடயம் என ஊடகவியலாளர்களிடம் கேட்டறிந்து விட்டு இது சம்பந்தமான பதிலை நீங்கள் தலைவரிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்ற நலுவல் போக்குடனும் சிலர் நடந்து கொண்டனர். இவ்வாறான வெறுக்கத்தக்க சூழ்நிலைகளையும் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டிருந்தனர். ”நாங்கள் ஊடகங்களுக்கு விடயங்களைச் சொல்வதில்லை என்று உலமாக்களிடம் சத்தியம் செய்துள்ளோம் நீங்கள் எமது தலைவரையே கேளுங்கள்“ என்று பதில் வந்த பல சந்தர்ப்பங்களும் உண்டு.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் ஊடகங்கள் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தால் அவரது தொலைபேசி அலறும். ஆனால், பதில் கிடைக்காது. இந்த நிலைக்கும் ஊடகவியலாளர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது ஆங்கில ஊடகங்களுடனும் வெளிநாட்டு ஊடகங்களுடனும் (பி.பி.ஸி உட்பட) தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. அதேவேளை, தமிழ் ஊடகவியலாளர் தொடர்பு கொள்ளும் போது அத்தலைமை தமிழ் ஊடகங்களை குப்பை மேட்டுக் கீரையாக நினைத்துப் புறந்தள்ளுகிறது. இவ்வாறானதொரு நிலையில் உள்ளுர் ஊடகங்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்ற மு.கா தலைமைத்துவத்தின் குற்றச்சாட்டு நிராகரிக்கத்தக்கது.
குறித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முஸ்லிம் ஊடகங்கள் இல்லாத குறையையும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக் காட்ட முயற்சித்திருப்பாராயின் வெளியாகிக் கொண்டிருக்கக் கூடிய சில முஸ்லிம் பத்திரிகைகளின் வளர்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்விதமான பங்களிப்பினை வழங்கி அவற்றுக்கு உதவியுள்ளன என்றும் ஆராயப்படவேண்டும்.
Post a Comment