யாழ்ப்பாணத்தில் பழைய இரும்பு குவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டெங்கு அபாயம்
நகரை அண்டிய பல பிரதான வீதிகளின் ஓரங்களில் பழைய இரும்புகள் குவியல் குவியல்களாக காணப்படுகின்றன. குடாநாட்டில் பழைய இரும்புகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதை அடுத்து கிராமப்புறங்களில் அவை சேகரிக்கப்பட்டு நகரை அண்டிய பகுதிகளில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இரும்பு குவிக்கப்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நின்று நுளம்பு பெருகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக யாழ். மனோகரா சந்திப் பகுதி, ஐந்து சந்திப் பகுதி ஆகிய இடங்களில் அதிக அளவில் இந்தப் பழைய இரும்புகள் குவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இரும்புகள் குவிக்கப்பட்டுள்ள இடங்களில் நுளம்பு பரவக்கூடிய ஏதுநிலை காணப்படுகின்ற போதும் சுகாதாரப் பகுதியினர் இது குறித்துக் கவனம் செலுத்தவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு இரும்புகள் குவிக்கப்படும் இடங்களில் டெங்கு பரவும் சூழல் உள்ளதால் அது குறித்து கவனம் செலுத்துமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
எனவே இந்த இரும்புக் குவியல்களை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளைச் சுகாதாரப் பகுதியினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Post a Comment