தம்புள்ளையில் பள்ளிவாசல் இருப்பதை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது..?
இன்று இலங்கை அரசு வாய்களை மூடிக் கொண்டிருந்தாலும் இன்னும் 15 வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என சம உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் அங்குரார்ப்பணம் அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றிய செயற்பாட்டாளர்கள் இதனை கூறியுள்ளனர்.
தற்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் கிராமங்களுக்கு சிங்கள பெயர்களை சூட்டுகின்றனர். விகாரைகளை அமைக்கின்றனர். வெசாக், பொசோன் பௌர்ணமி நாட்களில் தானம் வழங்குகின்றனர். நாம் முன்னர் இருந்த காலத்தில் இருந்த பெயர்கள் அந்த கிராமங்களில் இல்லை. சிங்களவர்கள் எவரும் இல்லாத கிராமங்களுக்கு சிங்கள பெயர்களை சூட்டுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமானால், விகாரைகளை அமைப்பதை ஏற்றுக் கொள்ளுமானால், தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது?.
அப்படியானால் அதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கு (தெற்கில்) போல் அல்ல வடக்கு கிழக்கில், அங்கு ஆட்சி செய்வது இராணுவம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், காவற்துறைக்கு அல்ல இராணுவ முகாமுக்கு சென்றே முறையிட வேண்டும். இராணுவத்தினால் தீர்க்க முடியாது போனால் மாத்திரமே காவற் துறையினரிடம் செல்ல வேண்டும்.
அடுத்தது, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் புகைப்படம் ஒன்றை எடுத்து வீட்டில் மாட்டி வைக்க வேண்டும். இராணுவ அதிகாரிவந்தால், அவர் எங்கே இவர் எங்கே என விசாரிப்பார். இந்த மக்கள் இவ்வாறு இருப்பதை விட வெளிநாடுகளுக்கு செல்வது மேலென நினைக்ககூடும்.
தற்போது, இந்த பிரச்சினையை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என தனித்தனியாக தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் இணைந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் என்னையும் அச்சுறுத்தக் கூடும். எனினும் நாங்கள் இதனை பேச வேண்டும்.
இன்று நாம் வாய்களை மூடி கொண்டிருந்தால், இந்த நிலைமை தொடரும். இன்னும் 15 வருடங்களில் நாங்கள் இருக்க போவதில்லை. அப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு விடுதலைப்புலிகள் யார் என்பது தெரியாது. போர் இருந்ததா என்பதை கூட அறிந்திருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினை தெரியாது. இன்று நாம் வாய்களை மூடிக் கொண்டிருந்தால், இன்னும் 15 வருடங்களில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகுவார்கள் எனவும் அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. UN

Post a Comment