Header Ads



யாழ் முஸ்லிம் இணையம் சமூகப்பணியை நிறைவேற்றி வருகிறது - கலாநிதி அனஸ்



(கலாநிதி எம். எஸ். எம். அனஸ்)

தலைவர் மெய்யியல் துறை  - பேராதனை பல்கலைக்கழகம்

யாழ் முஸ்லிம் இணையத்தள சஞ்சிகை அதன் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஊடகங்களின் தேவை அவசியமானதொரு காலகட்டத்தில் இவ் இணையத்தளச் சஞ்சிகை குறிப்பிடத்தக்க ஊடக மற்றும் சமூகப்பணியை நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கான நிரந்தர ஊடக வசதிகள் இல்லாத அல்லது மிகக் குறைவாக உள்ள சந்தர்ப்பத்தில் யாழ் முஸ்லிம் சஞ்சிகை உலக அளவில் முஸ்லிம் சமுதாயம் பற்றிய செய்திகளையும், முன்னேற்றத்திற்கு உதவக் கூடிய கருத்துக்களையும், அக்கறையோடு வெளியிட்டு வருவது திருப்தியளிக்கும் விடயமாகும். செய்திகள் மட்டுமன்றி செய்தி விவரணங்கள், கலந்துரையாடல்கள், நேர்காணல்கள், கருத்துத் தூண்டுதலுக்கு இடமளிக்கும் கட்டுரைகள் என்று பலதரப்பட்ட அங்கங்களை உள்ளடக்கிய யாழ் முஸ்லிம் சஞ்சிகை இன்னும் புதுமையானதாக அமைவதற்கு எனது வாழ்த்துகள்.

 நவீன செய்தி அமைப்பு, கருத்துக்களை வெளியிடும் புதிய மரபுகள், மக்களின் சமகால தேவைகளையும் விவகாரங்களையும் கவனத்தில் கொண்டு செற்படும் உணர்வு என்பவை யாழ் முஸ்லிம்; சஞ்சிகையில் காணப்படும் முன்னேற்றத்திற்கான அறிகுறியாகும். சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுப்பதும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு இடமளிப்பதும் மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவதும் என்ற உயர்ந்த ஊடகப்பண்பாட்டை யாழ் முஸ்லிம் சஞ்சிகை விரிவுபடுத்த வேண்டும். யாழ் முஸ்லிம் சஞ்சிகையின் அரசியல் விவரணங்களுக்கு ஓர் ஆதரவும், நம்பிக்கையும் வாசகர்களிடத்தில் இருப்பது உண்மை.  சமகால அரசியல் விடயங்களில் மக்களுக்குள்ள அக்கறையையும் அதே நேரம் அவர்களின் கருத்துக்களை மேலும் முதிர்ச்சியடையச் செய்வதற்குரிய பத்திரிகைப் பண்புகளையும் நிலை நாட்டுவது செய்திப் பத்திரிக்கைகளுக்கான கொள்கைகளாக மாறவேண்டும். 

அரசியல்க் கருத்துக்களும், செய்திகளின் நம்பகத்தன்மையும், சிறப்பான பகுப்பாய்வு முறையும் பின்பற்றப்பட வேண்டும். செய்தியைப் பொறுத்தவரை பக்கச்சார்பற்ற நிலைப்பாட்டை மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள். அது தர்மமுமாகும். அரசாங்கத்தின்  ஊதுகுழல் பத்திரிகைகள் போல் பொதுப் பத்திரிகைகள் இயங்குவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அந்நிலை தொடந்தால் அப்பத்திரிகையை மக்கள்  நிராகரிப்பார்கள். அல்லது மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு சரிவடையும். நிதிவளம் மட்டுமல்ல. மக்களின் நம்பிக்கை பத்திரிக்கையின் வளர்ச்சிக்குப் பிரதான ஊன்று கோலாகும். செய்திகளை குறிப்பாக செய்தி விவரணங்களை ஜனநாயக மதிப்பீடுகள், விசாரணை மற்றும் உண்மையயைத் துலக்கும் மனோபாவத்துடன் மக்களுக்கு வழங்குவது நவீன பத்திரிக்கையின் மிகப்பெரிய பொறுப்பாகும். 

இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான ஊடகங்கள் இல்லையென்ற குறைபாட்டிலிருந்து பார்க்கும் போது, யாழ் முஸ்லிம் சஞ்சிகை போன்ற புதிய வரவுகள் எமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருப்பது உண்மை. ஆனால், இலங்கையின் முக்கியமான சிறுபான்மை குழு என்ற வகையிலும் அரசியல் தனித்துவத்தை வலியுறுத்தி வரும் சமூகம் என்ற வகையிலும் முஸ்லிங்களின் தற்போதைய ஊடகப் பலம் எந்தளவு நம்பிக்கை தரக் கூடியதென்பது இன்னமும் கவலைக்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது. 

 1882 இல் வெளிவந்த 'முஸ்லிம் நேசன்' வாரப்பத்திரிகை செய்திப் பத்திரிகையாக பல வருடங்கள் வெளிவந்து வெற்றி கண்டது ஒரு பொற்காலமாகும். தொடந்து பல வாரப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் குறுகிய காலம் மட்டுமே நிலைத்திருந்த 'தினத்தபால்' என்ற தினசரி உட்பட சுதந்திரத்திற்கு முன்னரே பத்திரிகைத் துறையில் சாதனைகள் செய்யப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் குறிப்பாக அச்சு ஊடகத்துறையில் எமது சாதனைகள் என்ன? 

சிங்கள, தமிழ் மக்களிடையே உருவான ஊடகத் தாகமும், உணர்வும், அதற்கான முதலீட்டிற்கு அவர்கள் தயாரான வேகமும், திட்டமிட்ட செயற்பாடுகளும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தூரத்துக் கனவு போன்ற செய்திகளாகும். ஒருவகையான ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு நம்மை பழக்கப்படுத்திக் கொண்டோம். தலைப்புச் செய்திகளாக வரவேண்டிய எத்தனையோ செய்திகளும், கருத்துக்களும் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் கூட இடம்பெறாத நிலை பற்றி ஆதங்கப்பட்டதைத் தவிர முன்னேற்றத்திற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. ஏனைய நிறுவன ஏடுகளைப் பார்த்துக் குறை கூறிக் கொண்டிருப்பது புத்தி பூர்வமானதல்ல. சொந்தப் பலத்தில் பத்திரிகைகளை நடத்துவதில் உள்ள எந்த சுதந்திரமும், கௌரமும் வேறுவழிகளில் பெறக் கூடியதல்ல. 

19 ஆம் நூற்றாண்டின் கடைசி இரு தசாப்தங்கில் முஸ்லிம் சார்பான பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும், அரசியல் நெருக்கடிகளுக்கும் முஸ்லிம் நேசன் தான் தனித்து நின்று போராடியது.  ஒறாபி பாஷாவை ஆங்கில அரசு வீட்டுக்காவல் கைதியாக இலங்கையில் வைத்திருந்த போது 'ரைம்ஸ் ஒப் சிலோன்' உட்பட எல்லா ஆங்கில, சிங்கள தேசிய இதழ்களும் நாட்டில் குழப்பங்களையும் முஸ்லிம்கள் தலைமையில் புரட்சியையும் உருவாக்க இது சந்தரப்;பமாக அமையும் என்று வெறுப்பை உமிழ்ந்தன. ஆனால் முஸ்லிம் நேசன் எகிப்தியின் புரட்சி வீரர் ஒறாபி பாஷாவை 'உங்கள் வரவு நல்வரவு ஆகுக'' என்று வாழ்த்துரை கூறி வரவேற்றதுடன், ஏனைய பத்திரிகைகளின் பொறுப்பற்ற  பிரசரங்களுக்கும் தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தது. உனக்கொரு பத்திரிகை தேவை என்பதன் அர்த்தம் இதுதான். அக்காலத்தில் சித்திலெப்பை வீரத்துடன் எழுதிய எதிர்ப்புரைகளும், சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தச் சிந்தனைகளும் இன்றும் சுவடிக் கூடத்து இருட்டறைகளில் பிரகாசிக்கின்றன. அவை முஸ்லிம்களின் 19 ஆம் நூற்றாண்டு வரலாற்றின் மகத்துமான அத்தியாயங்கள் ஆகும்.

சிங்கள, தமிழ் மக்களிடையே உருவான ஊடகம் பற்றிய விரிவான கலங்துரையாடல்களையோ, குறிப்பிடத்தக்க முதலீடுகளையோ, ஊடகங்கள் சொந்தமாகத் தேவையென்ற உணர்வு பூர்வமான சிந்தனைகளையோ கருத்தில் கொள்ளாத ஒரு தேக்க நிலைக்கு முஸ்லிம் சமூகம் ஆளாகியிருந்தது. பத்திரிகைத் துறையில் மட்டுமல்ல இலங்கையில் வனொலி, தொலைக்காட்சி போன்ற புதிய ஊடகத்துறைகளில் ஏனைய சமூகத்தினர் ஆர்வத்துடன் செற்பட்ட காலத்தில் கூட முஸ்லிம்களின் கவனம் அவற்றை நோக்கித்; திரும்பவில்லை. அரச வானொலியில்  அரைமணி நேர அல்லது ஒரு மணிநேர ஒலிபரப்பு வரையறைக்குள் முழுத் திருப்தியடைய வேண்டியிருந்தது. வானொலியையோ, தொலைக்காட்சியையோ தமக்கான ஊடகமாகப் பெறுவதில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை.

பொதுவாக ஊடகத்துறையை அது அச்சு மற்றும் இலத்திரனியல்; சார்ந்த எந்த ஊடகமாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவதில் முஸ்லிம்கள் தமது முழு ஆர்வத்தையும் வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக பத்திரிகைத் துறையிலும், வானொலித்துறையிலும் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான தொகையினர்   சேவையாற்றி வருகின்றனர். அதாவது இந்தத் துறைகளில் முஸ்லிம்களின் ஆர்வத்ததையும் அதே நேரம் அவற்றில் பங்காற்றுகின்ற அவர்களின் ஆர்வத்தையும் இது வெளிப்படுத்துகின்றது.   தேசியளவில் தமக்கென எந்த முக்கியத்துவமான ஊடகத் தொடர்புகளும் இல்லாமலேயே  முஸ்லிம்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏனைய சமூகத்தவர் நிர்வகிக்கும் தேசியளவிலான ஊடகவியல் நிறுவனங்களுக்காகத் தமது சேவைகளை வழங்குவதும், ஏதாவது பயனுள்ள வழிகளில் அவற்றில் தமது தொடர்புகளைப் பேணுவதும் சிறந்த பணியேன்றே கருத வேண்டும். பல்லின சமுதாயத்தில் தேசியளவிலான இத்தகைய வாய்ப்புக்களை பயன்படுத்துவதில் காட்டப்பட்டு வரும் இந்த அக்கறையை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனால், சொந்தமாக ஊடகங்களை பெற்றிராத சமூகம் என்ற நிலையிலிருந்து இது எந்த வகையில் விடுதலை பெற்றுத் தரும் என்று தெரியவில்லை. தேசியளவிலான ஏனைய நிறுவனங்களில் கூட அந்த நிறுவனங்களை முகாமைத்துவம் செய்கின்ற அல்லது நெறிப்படுத்துகின்ற வல்லமை பெற்ற தொடர்பு முஸ்லிங்களிடம் உண்டா? என்பது முக்கியமான கேள்வியாகும். குறித்த பத்திரிகையோ, தொலைக்காட்சியோ, வானொலி நிலையமோ முஸ்லிம்களின் நிதி மற்றும் முகாமைத்துவ நிர்வாகத்துக்குள் இருந்து வருகின்றது என்று கூறுவது சாத்தியமா? அதவாது ஊடகத் துறையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை அல்லது ஆதிக்கத்தை முஸ்லிம்கள் பெற்றிருக்கவில்லை என்பதற்கு இவை போதுமான காரணிகள் ஆகும். 

50 ஒலிபரப்பாளர்களும்,  தொலைக்காட்சியில் பணிபுரிபவர்களில் 10 பேரும், 600 பத்திரிகை நிருபர்களும் ஒருசில வார-மாதப் பத்திரிகைகளும், குறிப்பிட்ட சில வட்டாரங்களுக்குள் சுழலும் சில சிறுபத்திரிகைகளும் மட்டும் என்ற  நிலையில் இலங்கை முஸ்லிங்களின்  ஊடகத்துறைச் சாதனை திருப்தியளிக்கக் கூடியதல்ல. 1882 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த சில தசாப்தங்களாக முஸ்லிம் முன்னோடிப் பத்திரிகையாளர்கள் நிகழ்த்திய சாதனைகளோடு ஒப்பிடுகையில் தற்போதயை வேதனைக்குரியதாகும். செல்வ வளமும், கல்வியும், அரசியல் விழிப்புணர்வும் முன்னரை விடப் பன்மடங்கு அதிகரித்திருந்த போதும் ஊடகத்துறையைப் பொறுத்தவரை முஸ்லிங்களின் கவனம் அதற்குரிய இடத்தை பெற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களின் ஊடகக் கலாசாரம் அல்லது ஊடகத் துறையில் அவர்களுடைய செல்வாக்கு என்பது முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் நடத்தும் ஒரு முஸ்லிம் ஊடகம் என்பது மட்டுமல்ல, அது பத்திரிகையாக, வானொலியாக, இணையத் தளமாக எதுவாக இருந்தாலும் இந்த நிலை விரிவான தளங்களுக்கு தேசியளவில் கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனெனில் செல்வாக்குள்ள தேசிய ரீதியில் ஆதிக்கத்தைப் பெறக் கூடிய ஊடகம் என்ற கருத்தை நோக்கி எமது கவனம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.  

ஊடகங்களை யாரும் உருவாக்கி, யாருக்காகவும் நடத்தலாம். அதற்கு சுதந்திரம் உண்டு. நாம் பேசுவது தேசியளவில் செல்வாக்குள்ள, கருத்துக்களை வன்மையுடனும் பரந்த மக்கள் பிரிவிற்கும் கொண்டு செல்லக் கூடிய பொதுத் தன்மையைக் கொண்ட அல்லது நடுநிலை போக்குடைய ஊடக ஆதிக்கம் அதுதான் இன்றைய தேவை. சரியோ பிழையோ அவரவர் சக்திக்கேற்ற வகையில் ஏனைய சமூகத்தவர்கள் தங்களுக்கான அதாவது தேசிய தன்மை கொண்ட ஊடகங்களை நவீன இலத்திரனியல் ஊடகங்கள் வரை உருவாக்கி நிர்வகித்து தேசிய நீரோட்டத்தில் தமது கருத்துக்களுக்கு ஒரு பெரிய செல்வாக்ககை உருவாக்கியிருப்பதை நாம் அவதானிக்கின்றோம்;;. மகாராஜா போன்ற தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்கள் அரசிற்கே சவாலாக இருக்கும் அளவு இயங்குவதையும், பல அலை வரிசைகளை செயற்படுத்தும் விதமும் முஸ்லிம்களுக்கு ஒரு முன்னுதாரணமாகும். உண்மையான ஊடகத்துறைக் கலாசாரமும், ஊடக உலகத்தின் செயற்பாடுகளில் தாம் பங்கேற்றிருக்கின்றோம் என்பதும், அதைக் கையாள்பவர்களாகவும், அந்த ஊடக வல்லமையில் தாமும் நேரடியாகப் பங்கு கொள்வதிலும் தான் தங்கியுள்ளது. 

அண்மைக் கால வரலாற்றை நோக்கும்போது, பத்திரிகைத் துறையிலும் ஏனைய ஊடகத் துறைகளிலும் முஸ்லிம்களின் கவனம் திரும்பியுள்ளதை நாம் மறுக்க முடியாது. குறிப்பாக இளைஞர்களிடத்தில் இந்த ஆர்வம் மிக வேகமாகச் செயல்படுகின்றது. ஊடகத் துறையின் உண்மையான பங்காளர்களாக மாற வேண்டும் என்றளவிற்கு ஒர் ஆர்வம் அவர்களிடம் இன்று காணப்படுகின்றது. ஆனால், ஒரு விரக்தியும், சோர்வும் இளைஞர்களை ஆட்கொண்டிருப்பதையும்; நாம் மறுக்க முடியாது. ஊடகத் துறையில் முதலீடு செய்ய யாரும் முன்வராத நிலையும், தமது ஆக்கங்களையும், தமது திறமைகளையும் வெளிப்படுத்த வாய்ப்புக்கள் இல்லையென்ற கவலையும் இன்று இளைஞர்களைப் பாதித்திருப்பதாகத் தோன்றுகிறது. 

கடந்த மாதம் அக்குறணையிலிருந்து வெளிவரும் 'நியூஸ்வீவ்' பத்திரிகைக்; குழுவினர் பொல்கொல்லையில் நடத்திய இளம் பத்திரிகையாளருக்கான செய்திப் பயிற்சியரங்கின் போது 25 முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். கண்டி மாவட்டத்தவர்களுக்கு மாத்திரமே நடத்தப்பட்ட இந்த பயிற்சியரங்கிற்கு 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள விருப்பந் தெரிவித்திருந்தனர். பயிற்சி முடிவில் இளைஞர்கள் கேட்;ட கேள்வியொன்று முக்கியமானது. 'எப்படி செய்திகளை எழுதுவது என்பதை இப்பயிற்சி மூலம் அறிந்துள்ளோம். இப்போது நாங்கள் யாருக்கு, எந்தப் பத்திரிகைகளுக்கு எமது செய்திகளை அனுப்பி வைப்பது?'

மாவட்ட ரீதியாக நோக்கினால் இவ்விதமான பயிற்சியரங்குகளுக்கு நிச்சயமாக 1000 பேருக்கு மேல் பங்கு கொள்ள முன் வருவார்கள் என்பது உறுதி. இது ஒரு வளர்ச்சியின் அடையாளமேயாகும். அதுபோல் தொலைக்காட்சி, வானொலித்துறைகளில் பயிற்சி பெறுவதற்கும், அவற்றில் சேவையாற்றுவதற்கும் தமது ஆக்கங்களை அவற்றினூடக வெளிப்படுத்துவதற்கும் இன்னொரு தொகை இளைஞர்கள் காத்திருக்கினறார்கள். 

இளைஞர்கள் மட்டுமல்ல, ஊடகத்துறையோடும் ஊடகக் கலாசாரத்தோடும் தொடர்பு கொண்டு தமது ஆக்கங்களையும், கலைத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் எல்லா வயது மட்டத்தினருக்கும் உண்டு. தொலைக்காட்சி என்ற கனவை நாம் ஒருபுறம் ஒதுக்கி நமக்கு கிடைத்த ஒரு மணிநேர (இலவச) இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இன்று அதில் நாம்; தோல்வியடைந்துள்ளோம். இஸ்லாமிய கீதம், நாடகங்கள், ஒலிச்சித்திரம், கிராம மக்களின் கலைகள், நாட்டார்ப் பாடல்கள், கலந்துரையாடல்கள் என்று பல்வேறு பரிணாமங்களில் அது மக்கள் மனங்களை வயது வித்தியாசமின்றி ஆட்சி செய்த காலமொன்றிருந்தது. எம்.எச்.குத்தூஸ் போன்றவர்களின் தலைமையில்; முஸ்லிம்களுக்கான ஒரு வானொலி கலாசார மரபையே கட்டியெழுப்பிய காலமது. பல கலைஞர்களை அது உருவாக்கியது. புகழ் பெற்ற கலைஞர்களின் முழுமையான சேவையைப் பெற்று தனக்கென ஒரு தனித்துவ கலாசாரத்தை அன்று அது பிரதிபலித்தது.

முஸ்லிம் நிகழ்;ச்சிப் பிரிவு, இன்று வர்த்தகர்கள் தீர்மானிக்கின்ற வர்த்;தக நோக்குடனான பல்வேறு வகையான பிரசங்கிகளின் மேடையாக மாறியுள்ளது. அதன் இலவச மகிமைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டடுள்ளது. அக்டோபர் மாத 'மீள் பார்வையில்' முஸ்லிம் நிகழ்ச்சியின் வேதனைக்குரிய இன்றைய நிலையை ஒரு வாசகரின் கடிதம் தெளிவாக காட்டுகின்றது. நீண்ட நாட்களாக இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எந்த மாற்றங்களுமில்லை. மாற்றங்களை ஆதரிக்கும் ஒலிபரப்புக் கலைஞர்கள் ஒரு சிலராவது அங்கிருப்பதை நாம் அறிவோம். எஸ்.எம்.ஹனிபா போன்ற அனுபவமுள்ள ஒலிபரப்புக் கலைஞர்களின் திறமைகளையும், புதியவற்றிற்கு இடமளிக்கும் அவர்களது பரந்த மனப்பான்மையையும் ஒலிபரப்புக் கலையகத்தில் நேரில் நான் பார்த்திருக்கின்றேன். எனினும் மந்தமான போக்கிலும்;, தர மேம்பாட்டிலும் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இது கையில் கிடைப்பதையும் சரியாகவும், அழகாகவும்;, தரமாகவும் நடத்த முடியாத நிலையிலிருந்து ஏற்படுகின்ற வீழ்ச்சியாகும். 

இதைப் பழைய நிலைக்கு மாற்றுவதற்கு என்ன செய்யலாம்? பொது மக்கள் சிந்திக்க வேண்டும். இது வானாலிக்கு மட்டும் குறிப்பிடும் செய்தியல்ல. எல்லா முஸ்லிம் ஊடகங்களையும் உள்ளடக்கிய ஒரு பொது நிலைப்பாடு இது. எங்களுக்கு ஊடகங்கள் இல்லையே என்ற கவலை ஒரு புறம் இருக்க, இருக்கின்ற வாய்ப்புக்களை நாம் சரியாகப்  பயன்படுத்துகின்றமா? என்பது அடுத்த பெரிய கேள்வியாக எழுகின்றது. இதில் எவரையும் குற்றம் சாட்டுவது நோக்கமல்ல. ஆனால் சம்பந்தப்ட்டவர்கள் தமது பொறுப்புக்களை செய்வதில் தவறு விடுகின்றார்களா? என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அழுத்தமும், ஆலோசணைகளும் பொது மக்களிடமிருந்தும் வந்து சேர வேண்டும். புத்தி ஜீவிகள் தமது பங்கை வழங்குவதற்கும், மாற்றங்களை உருவாக்குவதற்கும் முன்வர வேண்டும்.

பொதுவில் ஊடகத் தேவை என்பது முஸ்லிம்களை பொறுத்தவரை ஓர் எரியும் பிரச்சினை. நிறைவேறாத ஆசை என்றும் வர்ணிக்;க முடியும். ஊடக யுகமொன்றில் அதற்கு ஆயத்தமின்றி இருப்பது யுத்த களத்தில் எதிரியின் முன் ஆயுதங்களின்றி இருப்பதற்கு சமமாகும். தொலைக்ககாட்சி தலைப்புச் செய்தியை விட செய்திப் பத்திரிகையின் தலைப்புச் செய்திக்கு எப்போதுமே ஒரு தனிக் கவர்ச்சி உண்டு.

அதன் விவரண விசாரணை, வர்ணைக் கட்டுரைகள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தையோ, கருத்து பேதங்களையோ, கொள்கை மாற்றங்களையோ உருவாக்க சக்தி பெற்றவை. சமுதாயம் ஏன் பத்திரிகைத் துறையில் தன்னை ஈடுபடுத்த  வேண்டும் என்பதற்கு இது ஒரு ஆரம்ப உதாரணம் மட்டுமே. ஆனால் எமது கவனம் பல்துறை ஊடக பரிமாணங்களை நோக்கியும் பயணம் செய்ய வேண்டும். ஊடகப் பிரச்சினையில் நேரடியாக ஒரு கருத்தை கூறுவதாக இருந்தால் அது முதலீடு எனற விடயத்தில்த் தான் உண்மையில் முடங்கிப் போயுள்ளது என்று தெரிகின்றது. குறிப்பிட்டளவு நஷ்டங்களைப் பொறுப்பேற்றோ அல்லது வர்த்தக ரீதியில் வெற்றிகளைச் சாதித்தோ ஊடகத் துறையில் பங்கு கொள்ள முடியாத நிதிப் பற்றாக் குறையுள்ள சமூகமாக முஸ்லிம்களை கணிக்க முடியாது. ஆனால் இந்த துறையில் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற குறிப்பாக முலீட்டாளர் மத்தியில் இருக்கின்ற தயக்கத்தை அகற்றுவது எப்படி என்பது தான இப்போது உள்ள பிரச்சினை போல் தெரிகின்றது.

இவ்வாறான ஒரு ஊடக நெருக்கடி நிலையில் யாழ் முஸ்லிம் சஞ்சிகை அதன் இரண்டு வருடப் பயணத்தை வெற்றகரமாக நிறைவு செய்திருப்பது இந்தத் துறையில் ஆர்வமுள்ளவருக்கு உற்சாகத்தை வழங்கக் கூடியது என்பதில் சிறிதும் ஐயமில்லை. குறுகிய காலத்திற்குள் நாடுகள் கடந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவரக் கூடியதாக அதன் செயற்பாடுகள் அமைந்திருப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும். அதன் பணிகள் தொடர்வதற்கும் இன்னும் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களை கவர்வதற்கும் அது அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே எமது ஆவாவும் எதிர்பார்ப்புமாகும்.


No comments

Powered by Blogger.