பல் துலக்கும் "பிரஷ்' மூலம் சர்வதேச விண் நிலையத்தில் பழுது நீக்கம்
விண்ணில் உள்ள சர்வதேச ஆராயச்சி நிலையத்தில் ஏற்பட்ட பழுதை, பல் துலக்கும் "பிரஷ்'சை பயன்படுத்தி, விஞ்ஞானிகள் சரி செய்துள்ளனர்.
பூமியில் இருந்து, 400 கி.மீ., தொலைவில் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, சூரியசக்தி மூலமாகவே மின்சாரம் பெறப்படுகிறது. சூரிய சக்தியை கிரகிக்க, விண்வெளி நிலையத்தின் மேலே, எட்டு அடுக்குத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒரு அடுக்கில் இருந்து விண்வெளி நிலையத்துக்கு உள்ளே வரும் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதை சரி செய்யும் பணியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க "நாசா' விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி அகிஹிகோ ஹோஷிடே ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.இப்பணிக்காக, விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து, இரு விஞ்ஞானிகளும் விண்வெளியில் நடந்து, கோளாறை கண்டுபிடித்தனர். சூரிய சக்தியை, நிலையத்துக்கு உள்ளே கடத்தும் இணைப்பு ஒன்றில் பொருத்தப்பட்ட "போல்ட்'டின் நடுவே, விண்துகள் இருப்பதால், "சப்ளை' பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், "போல்ட்'டில் இருந்த தூசிகளை அகற்ற முடியாமல், கடந்த வாரம் எட்டு மணி நேரத்துக்கும் மேல் சுனிதாவும், சக விஞ்ஞானியும், அந்தரத்தில் நின்ற படி சிரமப்பட்டனர்.
தூசிகளை அகற்ற, சரியான கருவி கிடைக்காத நிலையில், பல் துலக்கப் பயன்படும் மூன்று "டூத் பிரஷ்'களை உபயோகப்படுத்தி, தூசிகளை அகற்றி, "போல்ட்'ஐ, மீண்டும் பொருத்தும் பணியை சுனிதா வில்லியம்சும், அகிஹிகோ ஹோஷிடேவும் வெற்றிகரமாக செய்து முடித்தனர்."நாசா' கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறியாளர்களுக்கும், விண்வெளியில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் இடையே நடந்த நீண்ட நேர ஆலோசனைக்குப் பின், இந்த "ஐடியா' உதித்ததாக, "நாசா' வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment