ஜனநாயகத்தை பாதுகாக்கும் சிறந்த நாடு இலங்கை - மஹிந்த ராஜபக்ஸ பெருமிதம்
எம். எஸ். பாஹிம்
மோதலின் பின்னரான இலங்கையின் உண்மையான நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை நல்லிணக்கத்தின் மூலமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் வழங்கும் முன்னுரிமையினூடாக தெரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இலங்கை குறித்து வேண்டுமென்றே திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் பரப்பப்படும் நிலையில் பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டினூடாக அது குறித்த உண்மை நிலைகளை நேரில் கண்டுகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
58 ஆவது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டை மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக கலையரங்கில் செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைத்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் சிறந்த நாடு இலங்கை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதாக கூறிய அவர் அடுத்த வருடம் வடக்கில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி தொடர்ந்து கூறியதாவது,
பொதுநலவாய பாராளுமன்ற ஆரம்ப உறுப்பு நாடுகளில் ஒன்றான இலங்கையில் மூன்றாவது தடவையாக பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டை நடத்துவது குறித்து பெருமையடைகிறோம். உலகில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பை அண்மையில் தோற்கடித்ததினூடாக எமது ஜனநாயக முறையையும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க முடிந்தது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் சிறந்த நாடு இலங்கை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம்.
இலங்கையில் ஜனநாயகம் சவாலை எதிர்நோக்கி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்க முடியும் என்பதை நாம் முழு உலகிற்கும் காண்பித்தோம். இதனூடாக 30 வருடங்களாக ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் 3 மாகாணங்களுக்கு நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட்டன. மக்கள் அவ்வளவு சுதந்திரமாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர் என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
இலங்கையில் நீண்ட காலமாக பேணப்படும் ஜனநாயக வழியிலான தேர்தல் முறை மூலம் அரசாங்கங்கள் கூட மாற்றப்பட்டுள்ளன. அரசியல் யாப்புகள் கூட மாற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கிழக்கிலும் தேர்தல் நடத்தப்பட்டது. இதேபோன்று அடுத்த வருடம் நாம் வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக்கள் மீள குடியேற்றப்பட்டுள்ளதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இவ்வாறான மோதல்கள் ஏற்படாதிருப்பது தடுப்பது தொடர்பில் ஆராய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் ஏற்கெனவே அமுல்படுத்தப்பட்டுள்ளன.

பிள்ளையையும் கில்லி தொட்டிலும் ஆட்டும் மகா பெரும் நடிகர்... பேரினவாத துட்டகைமுனு.. ஜனநாயகம் பற்றி பேசுகிறது.. நம்பிக்கொண்டு மீண்டும் அவருக்கே வாக்களியுங்கள்...
ReplyDelete