இவரை எந்தச் சிறையில் அடைப்பது..?
'அமெரிக்க சிறையில், ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டு உள்ளவருக்கு, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தின், பாஸ்டன் நகரை சேர்ந்தவர், மிச்செல் கோசிலெக். 1990ம் ஆண்டு, மனைவியைக் கொலை செய்த வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அங்குள்ள ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறப்பில் ஆணாக இருந்த போதும், ஹார்மோன் சிகிச்சை பெற்று, அவர் பெண் மனோபாவத்துடன், ஆண்கள் சிறையில் காலம் கடத்தி வந்தார்.
இந்நிலையில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி கோரி, கோசிலெக், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அதற்கு சிறைத்துறை அதிகாரிகள், "கோசிலெக், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால், சிறையில், அவர் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்' என, எதிர்ப்புத் தெரிவித்தனர்.இதை ஏற்க மறுத்த, அமெரிக்க மாவட்ட நீதிபதி, கோசிலெக்குக்கு, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அவர் பிறப்பித்த, 126 பக்கத் தீர்ப்பில், "கோசிலெக்குக்கு, தீவிரமான மருத்துவத் தேவை உள்ளது. அதனால், அவருக்கு உரிய மருத்துவ வசதியை வழங்க வேண்டும். மேலும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், அவரை எந்த சிறையில் அடைப்பது என்பது குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment