இலங்கை குழந்தைகளை வாட்டும் இதயநோய்..!
இலங்கையில் வருடாந்தம் 2500இற்கும் மேற்பட்ட குழந்தைகள் இதய நோய்களுடன் பிறப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதய நோய்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தற்போது காணப்படும் வசதிகள் போதுமானதாக இல்லை என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ரிஜ்வே வைத்தியசாலையில் இதய நோய்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
தற்போது வருடாந்தம் 1600 தொடக்கம் 1700 வரையிலான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே தமது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். எனினும், இந்த எண்ணிக்கையை விட அதிகமான குழந்தைகள் இதய நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் வைத்தியசாலையில் இல்லை என அவர் கூறினார்.
இதற்கமைய சுகாதார அமைச்சினால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, வசதிகள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மேலும் அதிகளவிலான குழந்தைகளுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment