Header Ads



இலங்கை - பாகிஸ்தான் நாடுகள் நெருங்கிச் செயற்பட இணக்கம்

 
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக, இஸ்லாமாபாத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு உற்பத்திகள் மற்றும் பயிற்சிகள் குறித்து இந்தப் பேச்சுகளில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சின் செயலர் லெப்.ஜெனரல் சகீட் இக்பாலுக்கும், இலங்கை இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் ரி.என்.ஜெயசூரியவுக்கும் இடையில், பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சில் நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.
 
இந்தச் சந்திப்பின்போது இராணுவ மட்ட ஒத்துழைப்பை விருத்தி செய்து கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
இருநாடுகளுக்கும் அனுகூலத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தி அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், எல்லா வழிகளிலும் இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவிகளை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தச் சந்திப்பின்போது. இராணுவப் பயிற்சி, போர் ஒத்திகைகள், புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள், தீவிரவாத முறியடிப்பு போன்ற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
 
அதேவேளை, இலங்கைக்கும் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதற்கு பாகிஸ்தானுக்கு பிரிகேடியர் ஜெயசூரிய நன்றி தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.