மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத்தின் நூல் அறிமுக விழா
கவிஞரும் பிரபல எழுத்தாளரும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் நன்கு அறியப்பட்ட இலக்கியவாதியும் பன்னூல் ஆசிரியருமான மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத்தின் 'தமிழ் மொழியின் பூர்வீக வரலாறு, செம்மொழி அந்தஸ்து சீர்த்திருத்தங்கள் எனும் ஆய்வு நூலின் அறிமுக விழா சென்னையில் மண்ணடியில் அமைந்துள்ள இந்திய முஸ்லிம் லீக் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் செம்டம்பர் 5ம் திகதி மாலை நான்கு மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வுக்கு கவிக்கோ அப்துல்; ரஹ்மான் தலைமை தாங்குகிறார். இலங்கை இந்திய இஸ்லாமியத் தமிழ் கலை இலக்கியவாதிகளின்; இணைப்பாளரும் எழுத்தாளருமான கவிஞர் எம். ஜலாலுதீனின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வில் கவிஞர் மு. மேத்தா தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் நாடு இந்திய முஸ்லிம் லீக் முக்கியஸ்தர்களும்;; சிறப்பதிதிகளாக பேராசிரியர் ராஜகோபால், பேராசிரியர் காதர் முஹைதீன், வடக்கு கோட்டையார் வ.மு. செய்து அகமது ஆகியோரும் கலந்துக்கொள்கின்றனர். பேராசிரியர் காதர் முஹைதீன் நூல் முதற்பிரதியை ஆலிம் முகமது சாலிஹ் இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் கே.வி. ஜமாலுதீனுக்கு வழங்கி வைப்பார். தமிழ் நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பேரவை இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்குகின்றது. நூலாசிரியர் மருதூர் ஏ மஜீத் ஏற்புரை வழங்குவார்.
மணிப்புலவர் மருதூர் மஜீதின் 15வது வெளியீடாகிய இந்நூல் அவரது முதலாவது மொழிபற்றிய ஆய்வு நூலாகும். இந்நூல் ஏற்கனவே கொழும்பில் எதுவித பரபரப்பும் இல்லாமல் ஒரு சிறிய நிகழ்வின் மூலம் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ் மொழி பற்றிய இதுவரை அறியப்படாத பல தகவல்கள் இந்நூல் மூலம் அறியக் கூடியதாகவிருக்கிறது.

Post a Comment