Header Ads



வை.எம்.எம்.ஏ. ஏற்பாட்டில் 'எதிர்கால முஸ்லிம் தலைவர்கள்' செயலமர்வு (படங்கள் இணைப்பு)

'எதிர்கால முஸ்லிம் தலைவர்கள்' எனும் தொனிப்பொருளிலான மூன்று நாள் வதிவிட செயலமர்வு கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது.
 
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்துடன் இணைந்து அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்த வதிவிட செயலமர்வு ஆகஸ்ட் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு – 07 விஜயராம வீதியிலுள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
 
முஸ்லிம் பட்டதாரி இளைஞர் மற்றும் யுவதிகளைப் பயிற்றுவித்து சமூகத்தின் தலைமை பொறுப்புக்களை ஏற்கக்கூடியவர்களாக சமூகத்தின் உயர் பதவிகளுக்கு உருவாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இச்செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த செயலமர்வில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டத்தை பெற்றவர்கள் மற்றும் தற்போது இறுதி ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்  23 வயதுக்கும் 28 வயதுக்கும் உட்பட்ட 36 இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டனர்.
 
கிழக்கு, தென், ஊவா, வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இந்த செயலமர்விற்கான பயிற்சியாளர்கள் நேர்முக பரீட்சை ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
 
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.என்.ஜுனைட், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ், இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஏ.ஜே.எம்.சாதீக் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ விஜயவர்தன உட்பட சுமார் பயிற்றப்பட்ட ஆறு விரிவுரையாளர்களினால் இலங்கை நிர்வாக சேவை, இலங்கை வெளிநாட்டு சேவை, செயற்திட்ட அறிக்கை தயாரிப்பு, ஆளுமை விருத்தி, தலைமைத்துவ பயிற்சி உள்ளிட்ட பல தலைப்புக்களில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
 
அத்துடன், அமெரிக்காவை சேர்ந்த பயிற்சியாளர்களான ஹுமைரா கான் மற்றும் வஜகத் அலி ஆகியோரினால் நவீன ஊடகங்களின் முக்கியத்துவம் தொடர்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
 
இந்த வதிவிட செயலமர்வின் பிரதம அதிதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் விசேட அதிதியாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடக, கலாச்சார மற்றும் கல்வி விவகார பணிப்பாளர் கிரிஸ்டோபர் டில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இச்செயலமர்வில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இந்த வதிவிட செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையினால் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 








 
 
 

1 comment:

  1. உதென்ன, சோனகர்ற தலையில மிளகாய் அரைக்க தேவையான ஆட்கள உருவாக்குற வேலையே?
    பேந்து என்ன, அமெரிக்கன் எம்பசிக்காரன் வேற சோலி இல்லாமலே சோனகருக்கு எதிர்காலத் தலைவர் உருவாக்க உதவுறான்?

    சோனகன் எண்டாலே சுட்டுக் கொண்டு போடுற அமெரிக்கன், இங்காலை வந்து சோனகனுக்கு தலைவன் உருவாக்குறான் எண்டால், அவன் என்ன பேயனே?

    நல்ல கோடரிக் காம்பு எது எண்டு தேடுரானாயிருக்கும். எதுக்கும் கவனமாயிருங்கோ.

    ReplyDelete

Powered by Blogger.