என்னில் என்ன தவறு இருக்கிறது..? -கேட்கிறார் ரவூப் ஹக்கீம்
நூர் ஷிபா
எங்களது பாரம்பரிய வாழ்விடங்களில் உள்ளகச் சுயாட்சியைச் சுகிப்பதற்கும், அதனைப் பெறுவதற்கு துணைபோவதற்கும் ஏதாவது ஒரு தரப்பு முன்வருமானால் அதற்குத் தயாராவதில் என்ன பிழையெனக் கேட்கிறேன். ஏதாவது விசயத்தில் எங்காவது ஓர் இடத்தில் எதையாவது சொல்வதால் அது பயனளிக்குமென்றால் அதைப் பற்றிப் பேசுவதில் என்ன தவறு?
இவ்வாறு முஸ்லம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் செவ்வாய்க் கிழமை இரவு (04) காத்தான்குடியில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு தாவூத், மாகாண சபை மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் முபீன் ஆகியோர் பங்கு பற்றிய இக்கூட்டத்திற்கு பெருமளவிலானோர் சமூகமளித்திருந்தனர்.
அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தாவது,
யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த போது, சர்வதேச சமூகம் எங்களை கை விட்டு விடுமோ என்ற ஆபத்திருந்த பொழுதுஇ விடுதலைப்புலிகளின் தலைவரோடு நேருக்கு நேர் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்த பொழுது சமூகத்தின் நன்மைக்காக அந்த வாய்ப்பை நான் பயன் படுத்திக் கொண்டதில் அரச ஊது குழல்களான ஊடகங்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் என்னில் என்ன தவறு இருக்கிறது? என்ற கேள்வியை நான் எழுப்புகின்றேன்.
அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அதாவுல்லா போன்றவர்கள் என்னிடம் அடம் பிடித்தார்கள். பிரபாகரனுக்குப் பக்கத்தில் இருந்ததாக பத்திரிகைகளில் படம் வர வேண்டும் என்பதற்காக அதற்கு அதாவுல்லா ஆசைப்பட்டிருக்கலாம். நாங்கள் முக்கிய விடயங்கள் சிலவற்றைப் பேசி அவற்றில் உடன்பாடு கண்டு ஒப்பந்த ஆவணமொன்றிலும் கைச்சாத்திட்டோம். அது நிறைறேறப் படாதது வேறு விடயம். அதற்கு இன்று அரசாங்கத்திற்கு சரணாகதி அரசியல் செய்யும் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்து பிரதியமைச்சர் பிரதானிகள் தான் காரணம்.
அத்துடன் வெருகல் ஆற்றுப் படுகையில் நிகழ்ந்த படுகொலைகளின் பின்னணியில் சரணாகதி அரசியலுக்குப் போக வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. இன்று பெரும்பான்மையாக தமிழ் மக்களைக் கொண்டதாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகிறது. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதன் காரணமாகத்தான் இந்த மாவட்டத்தை வெற்றி கொள்ளும் நிலைமை தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் தப்பித் தவறி வெற்றிலையில் போய் சங்கமமாகியிருந்தால் அது சாத்தியப் படாது என்பது தமிழ்த் தரப்பிற்குத் தெரியும்.
ஆயினும் தமிழ்த் தரப்பு நிருவாக ரீதியாக இந்த மாவட்டத்தில் எங்களிற்கு எவ்வாறான நெருக்கடிகளைச் செய்கிறது என்பதும் அவர்களிற்குத் தெரியும். அண்மையில் பீச்சாப் பள்ளம் சிகரம் ஒல்லிக் குளம் மண் முனை போன்ற இடங்களிற்குப் போன போது அதுபற்றித் தெரிய வந்தது. அங்கு இருந்து இடம் பெயர்ந்து மீள் குடியேறிய மக்கள் படுகின்ற கஸ்டம் சாமான்யமானதல்ல. அவர்களுக்கான உதவிகளைச் செய்வதில் இழப்பீடுகளையும் கொடுப்பனவுகளையும் வழங்குவதில் அதிகாரிகள் ஓர் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். ஏன் அவ்வாறானதோர் மேலாதிக்கப் போக்கோடு மற்றொரு சிறுபான்மையினம் எங்களது மக்களைக் கையாள்கின்றது. இதற்கு நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
எனவே எங்களுக்கு இந்த மாகாணத்தில் ஆட்சி வேண்டும். நாங்கள் யாரோடு ஆட்சியமைக்கப் போகிறோம் என்பதுதான் அரசாங்கத்திற்குள்ள பிரச்சினை. முஸ்லிம் காங்கிரஸை அரவணைத்துக் கொண்டு ஆட்சி செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாராளமாகக் கூறிவருகின்றனர். அதைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனை அரசு ஓர் அபாய அறிவிப்பாகப் பார்க்கின்றது. பெரிய விபரீதமாகப் போய் விடுமே எனப் பயப்படுகிறார்கள்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது எங்களுக்கும் பொருந்தி வரும்.நாங்கள் விரும்பினால் அதைச் செய்யலாம். அதற்கான திராணி எங்களுக்கு உண்டு என்பதை திட்ட வட்டமாக இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்லி ஆகவேண்டும். வேண்டுமானால் தமிழர்களோடு சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு எங்களுக்கு அத்தனை உரிமைகளும் உள்ளன. அதற்காக எதையுமே பணயம் வைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் கூறியாக வேண்டும்.
ஏனெனில் தேவையில்லாத புரளி கிளப்பப்பட்டுள்ளது. நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது வடகிழக்கை மீண்டும் இணைப்பதற்காக என்று அரசாங்கத்தில் உள்ளவர்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
எங்களது பாரம்பரிய வாழ்விடங்களில் உள்ளகச் சுயாட்சியைச் சுகிப்பதற்கும் அதனைத் தருவதற்கு துணைபோவதற்கு ஏதாவது ஒரு தரப்பு முன்வருமானால் அதற்குத் தயாராவதில் என்ன பிழையெனக் கேட்கிறேன். ஏதாவது விசயத்தில் எங்காவது ஓர் இடத்தில் எதையாவது சொல்வதால் அது பயனளிக்குமென்றால் அதைப் பற்றிப் பேசுவதில் என்ன தவறு.
எனவே அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் விசனத்தை யதார்த்தத்தை சரிவரப் புரிந்து கொண்டு உரிய முறையில் கையாள அவர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
தமிழ் ஆயுதக் குழுக்களிற்கு முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமை சுயாட்ச, முஸ்லிம்களின் பாரம்பரிய நில புலங்கள் பற்றி சரிவர ஜீரணிக்க முடியாமலிருந்ததால் அவர்களுக்கு அரசியல் பக்குவம் இருக்கவில்லை. அவர்களது அந்த அரசியல் பற்றாக்குறையின் விளைவினாலேயே அவர்கள் சகோதர் முஸ்லிம் இனத்தவரைப் படுகொலை செய்தார்கள். முஸ்லிம்களுக்கான சுயநிர்ணய உரிமை பாரம்பரிய பூமி தனியான அரசியல் அதிகார அலகு எனபவற்றைப் பற்றி அவர்கள் எந்தவித கரிசனையையும் காட்ட வில்லை.
அரசியல் பற்றாக்குறை காரணமாக அவர்கள் அரசியல் ரீதியாக முஸ்லிம்களைக் கையாளாமல் இராணுவ ரீதியாக அணுகினார்கள். அதனால் நிலைமையை விபரீதமாக்கி விட்டார்கள். 1990களில் தான் முஸ்லிம்களின் மத்தியில் அச்ச உணர்வு உச்சக் கட்டத்திற்கு வந்தது. ஆனால் அதற்கு முன்னர் கல்முனை வாழைச்சேனை போன்ற இடங்களில் ஏற்பட்ட கலவரங்கள் பரஸ்பர விட்டுக் கொடுப்போடு முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் புரிந்துணர்வோடு செயல் பட்டு எங்களது பாரம்பரிய வாழ்விடங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் நாம் ஓரளவு முன்னேறியிருந்தோம்.
ஆனால் 1990களின் ஆரம்பத்தில் இருந்து எங்கள் மீது இராணுவரீதியாக முஸ்தீபுகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது நாங்கள் உசாரானோம். எங்களது சுயநிர்ணய உரிமை, அதிகார அலகு என்பன பற்றி மிக அழுத்தமாக நாங்கள் பேசத்தொடங்கினோம். இந்த விடயம் ஆளப் பதிந்து விட்டதாக எல்லோரது மனதிலும் இருக்கின்றது.
ஆனால் இந்தத் தேர்தலில் அதற்கான ஒரு சந்தரப்பம் கிடைத்திருக்கிறது. சுயநிர்ணயம் சுயாட்சி பற்றி பேசி அவற்றைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் போது அந்த சந்தரப்பத்தை நாம் தவறவிடக் கூடாது.
தனித்துப் போட்டியிடுவதென்று நாங்கள் எடுத்த முடிவினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து அவர்களைப் பாதுகாக்க எங்களால் முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தின் செல்வாக்கு எத்தகையது என்பதை அரசாங்கத்தில் உள்ளவர்கள் சரிவரப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்கள்.

Post a Comment