மிக சவாலான கட்டத்தை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் - ரவூப் ஹக்கீம் (படங்கள்)
மிக சவாலுக்குரிய கட்டத்தை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். இந்த சமூகத்தின் அடுத்த தசாப்தத்திற்கான அரசியல் இந்தத் தேர்தலில் நிர்ணயிக்கப்பட உள்ளது. இக்கட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் அதேவேளையில், வெற்றி பெற்ற பிறகு வேட்பாளர்கள் சிலர் கட்சிமாறி தோல்வியைத் தேடித் தந்துவிடுவார்களா என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மருதமுனை கடற்கரையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மாபெரும் இப்தார் நிகழ்வை தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன,
இந்த மாகாண சபை தேர்தலை அண்மைக் காலமாக நடந்த ஏனைய தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது அவை திரிவுபடுத்தப்பட்டனவாகவே இருந்தன என்பதை வேட்பாளர் துல்கர் நயிம் இங்கு கூறினார். சென்ற மாகாண சபைத் தேர்தல் மோசடி நிறைந்ததாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயாகும். அது நேர்மையாக நடந்திருந்தால் அதில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். அண்மைக் காலமாக நடந்த எந்தத் தேர்தலும் இயல்பு நிலையில் நடைபெறவில்லை. தேர்தல்களின் மோசடிகளால் மாத்திரமல்ல, அந்தத் தேர்தல்களில் இந்த கிழக்கு மாகாண மக்களின் அதிகபட்ச ஆணையை பெற்ற அரசியல் கட்சிகள் போட்டியிடவில்லை என்ற நம்பகத்தன்மையிலும் குறைபாடிருந்தது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பற்றுதல் கடந்த தேர்தலில் இருக்கவில்லை.
நடந்த எந்த மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சி சார்ந்த எவருமே அந்தத் தேர்தல்களில் போட்டியிடவில்லை என்ற நம்பகத் தன்மையின் குறைபாடு இருந்தது.
இந்தத் தேர்தல் அவற்றைவிட வித்தியாசமானது. சர்வதேசம் இதனை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என நோக்குகின்றது. ஒரு சுமுகமான பின்புலத்தில் இத்தேர்தல் நடைபெறும் என ஓரளவு எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழர் தரப்பின் அங்கீகரிக்கப்பட்ட தரப்பினரும் ஆட்சிக் கதிரைகளில் வந்து அமரப் போகின்றனர் என்பது முக்கியமான விஷயம். முன்னர் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்களை அரச தரப்பில் உள்வாங்கி, அடாவடித்தனங்களையும், அட்டகாசங்களையும் பண்ணினார்கள். இன்று ஆட்சியிலேயே இருக்கும் அமைச்சர்கள் பண்ணிய மோசடிகள் பற்றி இங்கு பேசப்பட்டது. அத்தகைய சூழ்நிலைதான் கடந்த மாகாண சபை முடிவுகளின் சமன்பாட்டை கேள்விக் குறியாக மாற்றியது.
ஆனால் அடுத்த மாகாண சபைத் தேர்தல் அப்படி இராது என்பதற்கான பின்புலம் இப்பொழுது அமைந்துள்ளது. பெரிய கெடுபிடிகளில் எவையும் நடைபெறமாட்டா என ஓரளவு நம்பக்கூடிய அளவில் விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குள் கெடுபிடிகள் நடக்கக்கூடிய அபாயம் உள்ளன என்ற சாத்தியக் கூறுகள் இருந்தாலும் கிழக்கு மாகாணம் முழுவதிலும் கடந்த முறை போன்று பாரிய தில்லு முல்லுகளை நடத்தி அதனை கேள்விக்குறியாக மாற்றுவதற்கு அரச தரப்பில் எந்த ஜாம்பவானுக்கும் அது சாத்தியமாகப் போவதில்லை. புதிய தேர்தல் ஆணையாளர் கண்டிப்பானவர் என்பதை அறிக்கைகள் மூலமாக அறிய முடிகிறது.
எனவே இப்படியான ஒரு தேர்தலின் பெறுபேறும் அதில் முஸ்லிம்களின் தலைவிதியும் மிக முக்கியமானவை. அதனூடாக எங்களை மேலும் சரி செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் பற்றி கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் உணர்வுபூர்வமாக இத்தேர்தலை நோக்கும் சந்தர்ப்பத்தில்தான் மருதமுனை மண்ணில் ரம்மியமான கடற்கரை சூழலில் இக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என மேற்கொண்ட முடிவினால் அரசாங்கம் கலங்கிப் போயுள்ளது என்பதை அவர்கள் அரச ஊடகங்களைக் கையாலும் விதத்திலிருந்து தெரிகிறது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இனவாதப் போக்குடையவர் எனக்காட்ட எத்தனிக்கப்படுகின்றது. எங்கிருந்தோ கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை, நாட்டின் நீதியமைச்சரை சிங்கள பௌத்த சமூகத்தின் விரோதியாகக் காட்டுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. அதைப்பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், இதனுடாக சரிந்து போகும் சிங்கள வாக்கு வங்கியினை நிமிர்த்திக் கொள்ளலாம் என்பது அவர்களது உபாயமாக இருக்கலாம்.
ஆனால் ஏற்கனவே நாங்கள் எங்களது வாக்கு வங்கியை நிப்புவதற்கு இனவாதம் பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் தலைப்பட்டது கிடையாது. இந்த நாட்டின் தேசிய நலன்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகின்றது என்ற பாங்கிலும் இன்று ஒலிபரப்பு ஊடகங்களில் நேயர்களின் கருத்துக்களின் ஊடாக செய்யப்படுகின்ற முயற்சியினை பர்க்கும் போது அவ்வாறான பிரசாரங்களால் மக்களை தவறாக வழி நடத்திவிட முடியாது. இவற்றின் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு சொல்லப்படும் செய்தி என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்.
முதலாவது இணைந்த வட கிழக்கு மாகாண சபையில் எமது செயலாளர் நாயகம் ஹசன் அலி, சேகு இஸ்ஸதீன் போன்றோர் எதிர்க்கட்சியில் 17 பேர் இருந்த பொழுது எமது தேசிய நலன்களுக்கு எதிராக அதில் திடீரென தனிநாட்டு பிரேரணையை கொண்டு வர எத்தனித்த போது நாம் எடுத்த நிலைப்பாட்டை சிங்கள கமூகத்திற்கு சொல்லியாக வேண்டும்.
எமது உறுப்பினர்கள் அந்தப் பிரேரணையை எதிர்த்துப் பேசியது மாத்திரமல்ல, நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக ஒரே நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வை மாத்திரம்தான் எதிர்பார்க்கின்றோம் எங்களுக்கு தனியலகு ஒன்று அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் நாம் இந்தச் சபையில் எங்களது அரசியல் போராட்டத்தை மேற்கொள்கின்றோம். ஒரு தனி நாட்டுப் பிரேரணையை நாம் அங்கீகரிக்க மாட்டோம் என மிகக் காட்டமாக எங்களது அணியினர் சொன்னார்கள், அதைத் தொடர்ந்து அவர்கள் வெளிநடப்புச் செய்தார்கள்.
எல்லா வேட்பாளர்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பதவிகளுக்கு சோரம் போகின்ற கட்சியாக இக்கட்சி இருந்து விடக் கூடாது.
மிக சவாலுக்குரிய கட்டத்தை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். இந்த சமூகத்தின் அடுத்த தசாப்தத்திற்கான அரசியல் இந்தத் தேர்தலில் நிர்ணயிக்கப்படும் என்பதால் தலைமை கூட மீண்டும் இங்கு வந்து களமிறங்கினால் என்ன என சிந்திக்கப்பட்டது.
ஆனால் இன்று மக்களின் உணர்வுகளை பார்க்கின்ற பொழுது இக்கட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் அதேவேளையில் வெற்றி பெற்ற பிறகு வேட்பாளர்கள் சிலர் கட்சிமாறி தோல்வியைத் தேடித் தந்துவிடுவார்களா என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
வெற்றி பெற்ற மறுகணமே வெறும் அதிகாரக் கதிரைகளுக்காக கட்சியிலிருந்து நீங்கி அவ்வாறு துரோகமிழைத்து விடுவார்களோ என்ற நிலைமையும் உள்ளது. அவ்வாறான தகவல்கள் தலைமைக்கு தெரியாதனவல்ல. முன்னரும் இவ்வாறு நடந்திருக்கின்றது. படாடோபமாக நாங்கள் வாகண வசதிகளோடு பவணி வருவதைக் கூட மக்கள் ஏளனமாகத்தான் பார்க்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியினரும், சிவப்புத் தொப்பிக்கார கட்சிக்காரரும் சொல்வதைப் போல அரசாங்கத்திலிருந்து எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்து விட வேண்டும் என்பதையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் அரசோடு சில காரணங்களுக்கு இணைந்து கொண்டதை மக்கள் ஜீரணித்துக் கொண்டார்கள். அதை அங்கீகரித்தார்கள் என நான் சொல்லத் தலைப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் இணைவை ஜீரணித்துக் கொண்டவர்கள், இந்தத் தேர்தலுக்குப் பின் ஏற்படலாம் எனத் தெரியவரும் கட்சி தாவக் கூடிய விபரீதத்தை ஏற்றுக் கொள்வார்களா? இது பற்றி இன்று வெளிப்படையாகப் பேசப்படுகின்றது.
இதைப்பற்றி தலைவரும் தொட்டுப் பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கள் மத்தியில் அந்தக் கேள்வி எழுகின்றது. ஏனென்றால், இந்த இயக்கம், இந்த இயக்கத்திலுள்ள தனிநபர்கள் சோரம் போன வரலாறு எங்களை வாட்டி வதைக்கின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து மீண்டும் வடகிழக்கு இணைப்புக்கு நாம் கபட நாடகமாடுவதாக அமைச்சர் அதாவுல்லா முட்டுக்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகின்றார்.
இந்தத் தேர்தல், இதைத் தொடர்ந்து வரும் முடிவுகள், அதைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள முடிவுகள் என்பன இந்த சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியவையாகும்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தமதுரையில் குறிப்பட்டார்.
இந் நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி, எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி, பைஸல் காஸிம் எம்.பி ஆகியோர் உட்பட அம்பாறை மாவட்ட வேட்பாளர்களும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment