Header Ads



அரசியல்வாதிகளினால் பிரதேச ஊடகவியலாளர்கள் அவமானப்படுத்தப்படுவதற்கு கண்டனம்



அனுப்பியவர் என்.எம். அமீன்

அரசியல்வாதிகளினால் பிரதேச ஊடகவியலாளர்கள் அவமானப்படுத்தப்படுவதை வன்மையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் பிரதேச ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்நோக்கிய கசப்பான அனுபங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்க வேண்டும் எனவும் முஸ்லிம் மீடியா  போரம கோரிக்கை விடுததுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் எம்.ஏ.எம்.நிலாம் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடக நிறுவனங்களில் பிரதேச ஊடகவியலாளர்களே மிக முக்கியமானவர்களாவர். அவர்களினாலேதான் கிராமப் புறங்களிலுள்ள செய்திகள் அறிக்கை செய்யப்படுகின்றன. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் குறித்த செய்திகளை உலகறிய செய்ய வைப்பவர்கள் பிரதேச ஊடகவியலாளர்களே.
மறைந்து கிடக்கும் பல செய்திகளை உலக நாடுகள் திரும்பி பார்க்கும் அளவிற்கு கொண்டும்வரும் பெருமை பிரதேச ஊடகவியலாளர்களையே சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பிரதேச ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளினால் தாக்கப்பட்டுள்ளதுடன் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனினும் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை உரியவர்களினால் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான நிலையிலேயே கிழக்கு, வட மத்தி மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் பிரதேச ஊடகவியலாளர்களினாலேயே அறிக்கையிட வேண்டியுள்ளது.
இந்நிலையில் பிரதேச ஊடகவியலாளர்கள் மீது அரசியல்வாதிகள் தாக்குதல் அல்லது அச்சுறுதல்களை மேற்கொண்டால் அவர்கள் செய்தி சேகரிப்பதை பகிஷ்கரிப்பு செய்ய நேரிடும். இதனால் மக்களுக்கு உண்மையான தகவல்கள் கிடைக்காமல் போகும்.

பிரதேச ஊடகவியலாளர்களது பணி குறித்து பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பாக ஆசிரிய பீடத்துடன் தொடர்பு கொண்டு முறையிட முடியும். மேலும் இது தொடர்பாக செயற்படும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
அப்படியிருக்க வன்முறைகளை மேற்கொள்வதினை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிவாக வேண்டுகின்றோம். அத்துடன் கடந்த இரு வாரங்களிற்குள் முஸ்லிம் காங்கிரஸினால் கல்முனை மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு பிரதேச ஊடகவியலளர்களுக்கு உத்தியோகபூர்மாக உரியவர்களினால்
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சி தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கிப்பட்டிருந்தது. எனினும் குறித்த இரண்டு ஊடகவியலாளர்கள் மாநாடுகளும் இறுதி நேரத்தில் எவ்வித முன்னறிவித்தலின்றி இரத்து செய்யப்பட்டன.
எனினும் இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. பல அசௌகரியங்களுக்கு மத்தியில் கடமையை நிறைவேற்ற வந்த ஊடகவியலாளர்கள் வெறும் கையுடன் திரும்பிச் சென்றுள்ளனர். இங்கே ஊடகவியலாளர்களுக்கு உரிய மதிப்பும் கௌரவமும் அளிக்கப்படவில்லை இதனால் குறித்த ஊடகவியலாளர்கள் மனகிலேசமடைந்துள்ளனர். இவ்வாறு பிராந்திய ஊடகவியலாளர்களை தொடர்ச்சியாக அவமதிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகினறன.

இந்த அவமதிப்பினால் பிராந்திய ஊடகவியலாளர்கள் உள ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்களின் ஆணி வேரான பிரதேச ஊடகவியலாளர்களை அரசியல்வாதிகள் அவமதிப்பு செய்யும் செயற்பாடு கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
இவ்வாறான விடயங்களில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளதென்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க அரசியல்வாதிகள் மிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுக்கின்றது.

No comments

Powered by Blogger.