'எவ்வாறு வாக்குகள் எண்ண வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிடும் நிலை விரைவில் வரும்'
அனைத்து பிரஜைகளுக்கும் சட்டம் சமத்துவமாகுவதை உறுதிப்படுத்தும் அரசியல் இயக்கமொன்றுக்கு தலைமை தாங்குவதற்கு தான் தயார் என ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ரி.எம். வராவெவ கூறியுள்ளார்.
அநீதிக்கு எதிரான தேசிய இயக்கத்தின் அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
'ஓய்வு பெற்ற பின்னர் நான் அரசியல் இலட்சியங்களை வளர்த்துக்கொண்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். ஆம், நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் அரசியல் இலட்சியங்களை வளர்த்துக்கொள்வதற்கான உரிமை எனக்கு உள்ளது. சட்டத்தின் ஆட்சி அருகி வருவதற்கு எதிராகவும், அமைதியான, சுதந்திரமான சமூகத்துக்காகவும், அனைத்து மனிதர்களும் சட்டத்தின் முன் சமமாக விளங்கும் சமூகத்தை உருவாக்குவதுமே எனது அரசியல் இலட்சியங்களாகும். இதற்காக எந்தவொரு அமைப்புக்கும் நான் தலைமை தாங்கி, இத்தகைய சமூகத்தை ஏற்படுத்துவேன்' என அவர் கூறினார்.
சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்கும் மக்கள், இன்றைய அரசியலில் பிரவேசிக்க முடியாது. தற்போது ரவுடிகள், திருடர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் போன்றோரே தற்போது அரசியலில் பிரவேசிக்க முடியும்' என அவர் கூறினார்.
18 ஆவது திருத்தச்சட்டத்தின் அமுலாக்கமானது சுதந்திரமான, சட்டத்திற்கு கட்டுப்பட்ட சமூகத்திற்கான மிகப்பெரிய தடங்கலாகும் என அவர் தெரிவித்தார்.
'17 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களானவை ஜனாதிபதிக்கு இடையூறாகும். ஏனெனில், அவர்கள் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றாற்போல் நாட்டை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், 18 ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்துவதற்கு உத்தரவிட தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. அந்த உத்தரவும் ஜனாதிபதியினாலேயே பிறப்பிக்கப்படுகிறது. எவ்வாறு தேர்தல் நடத்தப்பட வேண்டும், எவ்வாறு வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிடும் நிலை விரைவில் வரும்' என அவர் கூறினார்.
நாட்டில் சட்டம் இல்லை. பொலிஸாரை மக்கள் நம்புவதில்லை. அரசாங்கத்துடன் தொடர்புள்ள கொலைக்காரனோ ரவுடியோ விடுவிக்கப்படுகின்றனர்' என அவர் கூறினார்.

ஐயா கவனம். வெள்ளை வேன்.
ReplyDelete