Header Ads



மாகாணசபைத் தேர்தலும், முஸ்லிம் சமூகமும்

                                                  முசலியூர் கே.சி.எம். அஸ்ஹர்

கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம், சப்ரகமூவ மாகாணம் போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் மிகுந்த அவதானத்துடன் தமது வாக்கை அளிக்க வேண்டிய நிலையுள்ளது. முஸ்லிம் வேட்பாளர்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சைக் குழுக்கள் என்று பல்வேறு கட்சிகளில் களத்தில் குதித்து உள்ளனர். இதனால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு வேறு சில சமூகத்தினருக்கு வாய்ப்பானதாக மாறவும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்த காலத்தில் மாகாண சபைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்த பிரதேசங்கள் இம்முறை மாகாண சபைப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது.

  பள்ளிவாசல்கள், சமூக அமைப்புகள், கழகங்கள், சங்கங்கள், இளைஞர்கள் போன்றோர் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்ய மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கை முஸ்லிம்களிடத்தில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய மகான்களாக பின்வருவோரை நாம் பார்க்கிறோம். சேர் ராசிக் பரீத், டீ.பி. ஜாயா, அறிஞர் சித்திலெவ்வை, அராபிபாஷh பதியுதீன் முஹம்மத், ஆ.ர்.ஆ. அஸ்ரப் குறிப்பாக முன்னாள் அமைச்சர் அஸ்ரபின் அரசியல் வருகைக்குப் பின்னர் முஸ்லிம் பெண்களிடம் அரசியல் புத்துணர்ச்சி ஏற்பட்டதை நாம் அறியக் கூடியதாயுள்ளது.

  தற்போது முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் என்பதால் முஸ்லிம் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கவில்லை. மாறாக துண்டுப்பிரசுரமும், சுவரொட்டி போன்ற செயற்பாடுகளுமே இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. வேட்பாளர்கள், எதிராளியினரை விமர்சிப்பதை விட்டுவிட்டு இங்கிதமான முறையில் தமது எதிர்காலச் செயற்றிட்டங்களை முன்வைக்க வேண்டும். மோசமான விமர்சனங்கள், வன்முறை போன்றவற்றை வாக்காளர் வெறுக்கின்றனர். இதனை வேட்பாளர்கள் தமது மனதில் கொள்ள வேண்டும்.

  தாம் விரும்பிய ஒருவருக்கு வாக்கு அளிப்பது வாக்காளர் ஒவ்வொருவரினதும் ஜனநாயக உரிமையாகும். இவ்வுரிமை எம் மூதாதையர்களால் போராடிப் பெறப்பட்ட ஒன்றாகும். எமது நாட்டில் ஆரம்பத்தில் படித்த வர்க்கத்தினருக்கும், பின்னர் மத்திய தர வர்க்கத்தினருக்கும், அதன் பின்பு சகல ஆண்களுக்கும் இறுதியாக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

  இவ்வாறு பல சிரமங்கட்கு மத்தியில் கிடைத்த இவ்வாக்குரிமையின் பெறுமதியை எம் சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் அறியாமலுள்ளனர். 'இவர்கள் இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? அல்லது கூடவந்த குரங்கு ஆண்டாலென்ன? என்ற மனப்பாங்கில் செயற்படுகின்றனர். இக்குழுவில் படித்த அரச ஊழியர்கள், வயதான ஆண்கள், வயதான பெண்கள், சில சமய ஈடுபாடுடைய இளைஞர்கள், ஹஜ், உம்ரா போன்ற சமயக் கடமையை முடித்த சிலரும் அடங்குகின்றனர்.

  இவர்கள் வாக்களிப்புத் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிப்பதில்லை. இதனால் இவர்களின் வாக்கு வீணாகிறது. ஆனால் தமிழ், சிங்களப் பிரதேசங்களில் நிலைமை மாற்றமாகவுள்ளது. இப்படி முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிப்பு விகிதம் குறைந்தால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

  கடந்த காலங்களில் விட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு இம்முறை நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்சுச் சென்று வாக்கு அளிப்போமாக. வாக்கு என்பது வெறும் ஒர ஓ புள்ளடி அல்ல. அதன் பின்னால் உள்ள தாற்பரியத்தையும் நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நம்மால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதி நிதி சிறந்த மக்கள் சேவை செய்து பெயர்பெற்று வந்தால் அதன் நன்மையில் நமக்கும் பங்கு உண்டு.

  மாறாக எம்மால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி அடாவடி, பாரபட்சம், அநீதி, ஊழல் போன்ற பாவச் செயல்களில் ஈடுபடுபவராக இருந்தால் அதன் பங்கும் (பாவமும்) எமக்கும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  நாம் ஒருவருக்கு வாக்களிக்க முன்பு பின்வரும் விடயங்களை பற்றியும் சற்று யோசித்து முடிவு செய்வது சாலச் சிறந்ததது என்பது எனது பணிவான ஆலோசனையாகும்.

 கல்வி கற்றவரா?
 உண்மை, நேர்மை உள்ளவரா?
 மக்களால் இலகுவாக அணுகப்படக் கூடியவரா?
 சமூகம் பற்றிய அக்கறை உடையவரா?
 சமூக சேவையில் ஈடுபட்டவரா?
 சவால்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளவரா?
 ஊழல்களில் ஈடுபட்டிருக்காதவரா?
 வாக்குறுதியை கடைப்பிடிப்பவரா?
 சமய, சமூக விழுமியங்களை மதிப்பவரா?
 பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவரா?
 குடும்ப ஆதிக்கத்தை விரும்புபவரா?
 சிறந்த சமூகம் பற்றிய தூரநோக்கு உடையவரா?
 ஊடகங்களுடன் தொடர்புடையவரா?
 சமூக அநீதியைத் தட்டிக் கேட்பவரா?
 சிறந்த குரல்வளமும், பேச்சு வன்மையும் உடையவரா?
 உரிமைகளைப் போராடிப் பெற்றுத்தரக் கூடியவரா?
 உரிய அரசியல் கட்சிக்கு விசுவாசமாக நடப்பவரா?
 இன்று எமது சமூகத்திற்கெதிராக தொடுக்கப்படும் ஊடக யுத்தத்தை எதிர்கொள்ளக் கூடியவரா?
 தனிப்பட்ட ஒழுக்கத்தில் சிறந்தவரா?
 நலிவடைந்த மக்களுக்கு உதவுபவரா?
 அவரின் மொழியறிவு எப்படிப்பட்டது?
 மாற்றுச் சமூக்தினருடன் ஆரோக்கியமான தொடர்புகளைப் பேணக் கூடியவரா?
 சமூகம் எதிர்கொள்ளும் துன்பத்தைத் தாங்கக் கூடியவரா?
 கடந்த காலங்களில் தனது மாகாணப் பிரதிநிதித்துவத்தின் மூலம் சேவை புரிந்தவரா?

  இவற்றையெல்லாம் மனதில் நிறுத்தி சிந்தித்து எமக்குரியவருக்கு எமது வாக்கை அளிப்போம். ஆனால் வாக்களிக்காமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.

1 comment:

  1. pakkasaarfatra niyaayamaana katturai, aanaal neengal sonna thahuthi enda arasiyal waathikkum illai enpadhu naadarintha unmai

    ReplyDelete

Powered by Blogger.