மத்ரஸாக்களும், பள்ளிவாசல்களும் பயங்கரவாதத்தைப் பரப்பும் இடமல்ல - அஸ்வர்
TN
மர்லின் மரிக்கார்
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் சதிகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
ஒபேசேகரபுர மத்ரஸா என்றாலும், மன்னார் சம்பவம் என்றாலும் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். அதனால் முஸ்லிம்கள் மிகவும் விழிப்பாகவும், தூரநோக்கோடும் செயற்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அல்-குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு ஒலிப்பேழை இறுவட்டு வெளியீட்டு வைபவத்தில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (ஜம்இய்யதுஷ் ஷபாப்)தின் ஏற்பாட்டில் இந்த ஒளிப்பேழை அதன் தலைமையகத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் அஸ்வர் எம்.பி. தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாம் புனித ரமழான் மாதத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். மனிதனது உள்ளகத்தில் ஏற்படுகின்ற தவறான எண்ணங்களை களைந்து அவனை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் முழுமையாகப் புடம்போட்டு எடுப்பதுதான் நோன்பு. இதன் மூலம் மனித ஆன்மா தூய்மையடைகின்றது.
இஸ்லாமானது மனிதனின் தூய வாழ்வுக்குரிய வழி காட்டல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் பெளத்த மதமும் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளது. பெளத்த மத தேரர்கள் அணிவதோ காவி உடை. இதே போன்றுதான் முஸ்லிம்கள் ஹஜ், உம்றா கடமைகளை நிறைவேற்ற செல்லும் போது வெள்ளை நிற இஹ்ராம் ஆடை அணிகின்றார்கள். இங்கு நிறம் மாத்திரம் தான் வித்தியாசம்.
நாம் முஸ்லிம் என்றும், கிறிஸ்தவர் என்றும், பெளத்தர் என்றும், இந்து என்றும் இருந்தாலும் எல்லோரும் ஆதம் (அலை), ஹவ்வா (அலை) அவர்களின் பிள்ளைகளே. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுவது அவசியம்.
மத்ரஸாக்களும், பள்ளிவாசல்களும் பயங்கரவாதத்தைப் பரப்பும் இடமல்ல. அவை அல்லாஹ்வை வழிபடுவதற்கான இடங்கள். அந்த இடங்களில் பயங்கரவாதம் பரப்பப்படுவது என்பது சுத்த அபத்தமான பொய். அவ்வாறான நடவடிக்கை இடம்பெற்றால் அவற்றை நாமே தலைமை தாங்கி முடிவுக்கு கொண்டு வருவோம். எமது ஜனாதிபதி அவர்கள் நாட்டில் தலை விரித்தாடிய முப்பது வருட கால பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டின் எந்த இடத்திலும் அச்சம், பீதியின்றி வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஒபேசேகரபுர மத்ரஸா சம்பவம், மன்னார் சம்பவம் போன்ற சம்பவங்களின் ஊடாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சதி செய்கின்றார்கள். அதனால் முஸ்லிம்கள் இந்த சதி குறித்து மிக விழிப்பாக இருப்பது அவசியம். ஒபேசேகரபுர சம்பவம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது என்றார்.

அஸ்தவ்பிர்லாஹ், அஸ்தவ்பிர்லாஹ், அஸ்தவ்பிர்லாஹ்.....
ReplyDeleteஇஹ்ரமும், காவியும் ஒன்றாம், நிறம் மட்டும்தானாம் வித்தியாசம்!
இலங்கை முஸ்லிம்களை முதலில் A.H.M.அஸ்வரின் தீங்குகளிலிருந்து அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
A.H.M.அஸ்வர், அஜந்தா, சுமங்கள, சிரியவதி, அன்டனி, பெயர் மட்டும்தான் வித்தியாசம், மற்றப் படி எல்லாமே ஒன்றுதானோ???
பள்ளிவாயல்கள் சுற்றி வாளைக்கப்படுவது ஒன்னும் சர்வதேச சதி அல்ல. அது அரசாங்கத்துக்குள் உள்ளே உள்ள சில விசமிகளால் அரச ஆதரவுடன் அது அரங்கேறுகிறது. சதி காரர்கள் உலகமே அறிந்திருக்க அஸ்வர் கொய்யாவுக்கு தெரியாமல் போனது கவலையாக இருக்கிறது. சதிகாரர்களை அரசு கைது செய்யாமல் விட்டு வெளிநாட்டு சதி என்று வாய் கூசாமல் பொய் சொல்லி வெளிநாட்டு நரியாக முயல வேண்டாம்.
ReplyDeleteமுஸ்லிம்கள் அமைதியாக தொழுவதை தடுக்கும் சில இனவாதிகள் அவர்கள் என்னத்தை செய்ய விரும்புகிறார்கள். முஸ்லிகள் தொழுவதை தடுத்து நிறுத்தினால் அவர்கள் கொலை கொள்ளை போன்ற பாவச் செயல்களில் ஈடுபடக் கூடும். அதை இந்த நாடு தாங்குமா என்று கேளுங்கள் அமைச்சரே. அருகருகே பள்ளிவாசல்கல் இருப்பதட்கு காரணம் அவர்கள் ஐந்து நேரம் தொழவேண்டி இருப்பதால் ஒரு நாளைக்கு ஐந்து வேலை பள்ளிவாசலுக்கு செல்லவேண்டும். தூரமாக இருந்தால் அங்கு செல்வது சிரமமாக இருக்கும். அதனால் தான் அண்மையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஐந்து வேலை பள்ளி செல்வதால் அவர்களுக்கு நாட்டுக்கோ மக்களுக்கோ எதிரான திட்டங்கள் தீட்ட நேரம் நேரம் கிடைப்பதில்லை. அதனைத் தடுக்கும் பொது சும்மா இருக்கும் நேரத்தை புரட்சி பற்றி சிந்திக்க செலவிடலாம். எனவே முஸ்லிம்களை இப்படியே விட்டுவிடுங்கள். வம்புக்கு இழுக்காதீர்கள் என்று கூறுங்கள் அமைச்சரே.
ReplyDelete