Header Ads



எமது வயல் நிலங்களை ஆக்கிரமிக்காதீர் - கிண்ணியா விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர்

BBC

மூதூர் முதல் குச்சவெளி வரையில் புதிய நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இத்திட்டம் தொடர்பான அரசாங்கத்துடைய வர்த்தமானி அறிவித்தலின் நகலொன்றை சட்டமா அதிபரிடம் இருந்து கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் கோரியுள்ளது.

கிண்ணியா பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தை எதிர்த்து நீதிதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். மூதூர்-குச்சவெளி நெடுஞ்சாலை திட்டத்துக்காக தமது நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த ஆரம்பித்திருப்பதாக விவசாயிகள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நெடுஞ்சாலை திட்டத்தின் காரணமாக கிண்ணியா விவசாயிகள் பலர் தமது காணிகளை இழக்க நேரிடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பூர் வர்த்தக வலயத்துக்கான சாலை போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காகவே இந்த நெடுஞ்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

கிண்ணியா வழியில் அல்லாமல் வேறு வழியாக இப்பாதையை அமைக்கும் சாத்தியம் உள்ளது என கிண்ணியா விவசாயிகள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பை பரிசீலித்த பின்னர் இந்த மனுவை விசாரிப்பது பற்றி தீர்மானிக்கப்படும் என கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.