வடக்கு முஸ்லிம்களின் நெருக்கடி - மு.கா. தலையிடாத கொள்கையை கடைப்பிடிக்கிறதா..?
முசலியூர் கே.சி.எம். அஸ்ஹர்
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராகத் தொடரப்படும் சிலுவையுத்தம்
அண்மைக்காலமாக பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் எவ்வித அடிப்படையுமின்றி வெளிவருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதன் பின்னணியில் சமயத் தலைவர், தமிழ்க் கூட்டமைப்பின் இரண்டு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதவான், சில சட்டத்தரணிகள், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாற்றக்கருத்துள்ள சில முஸ்லிம் தலைமைகள் போன்றோர் ஒன்று இணைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
நன்கு திட்டமிட்ட ஒரு சிலுவை யுத்தம் அமைச்சர் றிசாத் மீது பல முனைகளிலும் தொடரப்பட்டுள்ளது.
அமைச்சர் றிசாட் மேல் இவர்கள் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கான காரணங்கள் பின்வருமாறு,
1- எம்மால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு முஸ்லிம் அமைச்சர் தோன்றுவதா? என்ற மனப்பாங்கு
2- வன்னியில் 03 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகி விட்டனரே என்ற பொறாமை
3- வஞ்சிக்கப்பட்ட மக்களைப் பற்றி அமைச்சர் அடிக்கடி சிந்திப்பது,
4- ஷஷவடக்கில் முஸ்லிம்களை சகல உரிமையுடன் குடியேற்றியே தீருவேன்|| என்ற அமைச்சரின் பலமான மனவுறுதி
5- முஸ்லிம்களுக்காக வீட்டுத்திட்டங்கள் உருவாக்கிக் கொடுத்தமை.
6- முஸ்லிம்கட்கு சட்டரீதியாக காணி பெற்றுக் கொடுத்தமை.
7- மறுக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தமை.
8- வட மாகாண ஆளுனருடன் நெருக்கமாகச் செயற்படுகின்றமை.
9- வடபுல முஸ்லிம்களைத் திரட்டி புத்தளம் ஆலம்குடாவில் ஜனாதிபதிக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுத்தமை.
10- ஜெனீவாப் பிரகடனத்திற்கெதிராக முஸ்லிம்களைத் திரட்டி எதிர்ப்புக் காட்டியமை.
11- மன்னார் பிரதேசத்திப் பெரியமடு, விடத்தல்தீவு முஸ்லிம்களுக்கான காணியை மீட்டுக் கொடுத்தமை.
12- வலயக்கல்விப் பணிப்பாளராக சியான் அவர்களை கொண்டு வந்தமை.
13- மேலும் சில திணைக்களங்களுக்கு முஸ்லிம் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கின்றமை. (விகிதாசாரப்படி பார்த்தால் மேலும் பல முஸ்லிம் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.)
14- வாய் பேசாமல் மௌனியாக இருக்காமல் முஸ்லிம்களிற்கு எதிரான பிரச்சினையென்றால் நேரடியாகக் களத்தில் இறங்கும் அமைச்சரின் அதிரடி வேகம்.
15- வடபுல முஸ்லிம்கள் மீளத் திரும்ப மாட்டார்கள் அவர்களின் சொத்துக்களை (குடியிருப்பில் குறைந்த விலைக்கு வாங்கியது போல) வாங்கிக் கொள்ளலாம் அல்லது அடாத்தாகப் பிடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வீழ்ந்த அடி.
16- மன்னார் அபிவிருத்தி தொடர்பாக தன்னிடம் வந்து அமைச்சர் வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும் என்ற சமயத்தலைவரின் எண்ணம். (ஒரு முஸ்லிம் தனிமனித வணக்கம் புரிய மாட்டாது,)
17- வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்துவந்து வடக்கு முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளை வெளிக்காட்டியமை.
18- ஜெனீவாக் கூட்டத்தில் முஸ்லிம் நாடுகள் அரசுக்கு சாதகமாக வாக்களித்தமை.
19- இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கைக் கோரியமை.
இவ்வாறு பல கருத்துக்களை நீட்டிக் கொண்டே போகலாம். ''எதிரியின் எதிரி நண்பன்'' என்ற வகையில் எதிர்கட்சி உறுப்பினர்கள், ஜோன் அமரதுங்க, ஜயலத் ஜயவர்த்தன போன்றோரும் மாற்றுக்கருத்துள்ள சில முஸ்லிம்களும் இக்கூட்டில் இணைந்து எப்படியாவது அமைச்சரை வீழ்த்தி விடலாம் என கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர்.
கடந்தகால சரித்திரத்தைப் புரட்டினால் தொடராக அமைச்சர் வென்றே காட்டியுள்ளார்.நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு வீதிக்கு அண்மையில் அருவியாற்றுக்கு வடக்கே அமைந்திருந்த 'அப்பா ஹபுறடி' என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தில் (முஸ்லிம் பூர்வீகப்பகுதி) காணியற்ற நொச்சுக்குளப் பிரதேச மக்களை குடியேற்ற அமைச்சர் காணியை அடையாளப்படுத்தியதும், பத்திரிகைகளில் இனவாத அறிக்கை விட்டனர். ஆர்ப்பாட்டங்கள் நடாத்தினர். அசத்தியம் ஒழிந்து சத்தியம் வென்றது. இப்பிரதேசத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஆதரவுடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயனாளிகட்கு வழங்கப்பட்டும் விட்டன.
சன்னார் பிரதேசத்தில் முஸ்லிம்கட்கு உரிய காணியில் மாவீரர் குடும்பத்தினர் (மலையக வம்சாவளியினர்) குடியேற்றப்பட்டனர். முஸ்லிம்கள் மீள்குடியேற வந்தபோது, பாரிய காணிப்பிரச்சினை உருவாகியது. இதனால் சமூக மோதலுருவாக வாய்ப்பேற்பட்டது. இதில் அமைச்சர் தலையிட்டு பல முயற்சிகள் செய்து மாற்றுக் காணியைப் பெற்றுக் கொடுக்க முயன்றபோதும் இதே குழுவினர் ஆர்ப்பாட்டம், பத்திரிகை அறிக்கை போன்றதை விடுத்தினர்.
அமைச்சின் உறவினர் பெறுமதியான மரங்களை வெட்டுகிறார். அவற்றைப் புத்தளத்துக்குக் கொண்டு செல்கிறார். 1000க்கு மேற்பட்ட ஏக்கர் காணியை அமைச்சின் உறவினர் பிடித்துள்ளனர் போன்ற செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன.
தலை மன்னார் வீதியில் முஸ்லிம்களுக்காக காணிகள் இனங்காணப்பட்ட போது பத்திரிகைகள் அமைச்சரின் தம்பி பல ஏக்கர் காணியை பிடித்து வைத்துள்ளதாக இனவாதம் கக்கின.
மன்னாரில் எப்பகுதியில் முஸ்லிம்களுக்கு காணி வழங்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்புக் குரல் முதலில் ஆயராலும் வன்னியின் இரு ஆ.P. மாராலுமே விடுக்கப்பட்டு வந்தது. இதைப் பொறுக்க முடியாமல்தான் ஷஷஎமது அமைச்சர் இதைப் பாராளுமன்றம்வரை கொண்டு சென்றார்|| அது மட்டுமன்றி என் உயிரைக் கொடுத்தாவது என் மக்களைக் குடியேற்றுவேன் எனச் சபதமுமிட்டார்.
இதன் பின்னர் ஊடகங்கள் எல்லாம் அமைச்சர் றிசாத் மன்னார் ஆயரை அவமானப்படுத்தி விட்டார். என்று கூப்பாடு போட்டன. ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டன. விடயம் வத்திக்கான் கரை சென்றது. அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வன்னித் தமிழ் mp மார் அறிக்கை விட்டனர். கடைசியில் என்ன நடந்தது. அசத்தியம் ஒழிந்தது. சத்தியம் வென்றது 'பாவம் ஆயர்' அவர் அறியாமல் இரண்டு தமிழ் mp மாரின் அரசியல் தேவைக்குப் பயன்படுதப்பட்டு வருகிறார்.
அமைச்சருக்கு எதிரான அடுத்த பாரிய யுத்தம் கோந்தைப்பிட்டி மீன்பிடித் துறைப் பிரச்சினையூடாக முன்வைக்கப்பட்டு உள்ளது. கோந்தைப்பிட்டி இறங்குதுரை பரம்பரை பரம்பரையாக உப்புக்குளம் முஸ்லிம் மீனவருக்குச் சொந்தமானது. 1990 வெளியேற்றத்தின் பின்னர் அங்கு விடத்தல்தீவு மீனவர் தற்காலிகமாக தொழில் செய்து வந்தனர். முஸ்லிம்கள் மீள் வருகையின் பின்னர் இறங்கு துறை தொடர்பான பிரச்சினை உருவாகியது. விடயங்கள் அலசப்பட்டு விடத்தல் தீவு மீனவருக்கு வேறு இடத்தில் துறை ஒதுக்கப்பட்டது. அங்கு சென்றவர்கள் அங்கு ஒரு பிரச்சினை ஏற்பட மீண்டும் கோந்தைப் பிட்டிக்கு வருகை தந்தனர். இதனால் சிறு மோதல் ஏற்பட்டு விடயம் நீதி மன்றம்வரை சென்றது. நீதிமன்றில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகக் கூறி உப்புக்குளம் முஸ்லிம்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். நீதிவான் வீதிக்கு இறங்கி பொலிஸாரைக் கொண்டு தாக்குதல் நடத்த கட்டளை இட்டதுடன் ஆர்ப்பாட்டம் எல்லைமீறிச் சென்றதில் நீதிமன்றக் கட்டிடத்திற்கும் சிறு சேதம் ஏற்பட்டது. சில பொலிசாரும் காயப்பட்டனர். நான் அறிந்தவரை நீதிமன்றத்திற்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியது இதுவே முதற் தடவையாகும். நமக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதே என்ற ஆதங்கமே இவர்களை வழிநடாத்திச் சென்றிருக்கும். இம்மக்கள் சற்று அமைதியான முறையில் இவ்வார்ப்பட்டத்தை கொண்டு சென்று இருக்கலாம். (அதுதான் ஜனநாயக மரபு)
அக்கரைப்பற்றில் நீதிமன்ற வழக்கின் போது எதிரிக்கூண்டில் நின்ற கைதி சுட்டுக் கொல்லப்பட்ட போது இன்று நீதித்துறையைக் காப்பாற்ற வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்வோர் அப்போது என்ன செய்தனர் என்பது சிந்திக்கத்தக்கது. ஏன் நீதித்துறையைக் காக்க நீதித்துறையைச் சார்ந்தோர் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
மீனவர் கூட்டத்தில் மன்னாரில் உள்ள எந்தவொரு தமிழ் மீனவர் சங்கமும் விடத்தல்தீவு மீனவருக்கு துறை கொடுக்க முன்வரவில்லை. இறுதியாகக் கிடைத்த தகவலின்படி இவர்கட்கு தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையோடும் தொடர்புபடுத்தி அமைச்சருக்கெதிராக பல கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. அவையாவன:
1. அமைச்சர் நீதிபதியை அச்சுறுத்தினார்
2. தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து கொண்டு ஆர்ப்பாட்டக்காரரை வழிப்படுத்தினார். (செய்தி இணையம்)
இவை பற்றி அலச வேண்டியது எமது கடமையாகும்.
* அமைச்சர் நீதிபதியை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டை அவதானிக்கும்போது இதில் பாரிய ஐயம் எழுகின்றது. அப்படி நடந்திருந்தால் ஏன் விடயத்தை உடன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. வெள்ளி பிற்பகல்தான் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இணையச் செய்திகள் கூறுகின்றன. இதில் எங்கேயோ ஏதோ இடிக்கிறது.
* ஒரு சிரேஷ்ட அமைச்சர், இராஜதந்திரி, ஒழுங்கு முறைகள், அனுபவங்கள் நிறைந்த ஒருவர், ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு உரியவர், சிங்கள மக்களால் நேசிக்கப்படக் கூடியவர். சாதாரண தமிழ் மக்களால் நன்றியுணர்வுடன் நோக்கப்படுபவர் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டவர், ஒரு கல்வித் தகைமை நிறைந்த ஒருவர், வெளிநாட்டுத் தலைவர்களால் மதிக்கப்படுபவர் இவ்வாறு சிறுபிள்ளைத் தனமாக நடத்திருப்பர் என நாம் எண்ணவில்லை.
* தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க அடைக்கல நாதனுக்கும், வினோதனுக்கும் முடியுமென்றால் ஏன் முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்க றிசாத் பதியுதீனுக்கு முடியாது. இது ஒரு ஜனநாயக நாடு.
* அமைச்சர் றிசாட் தனது மக்களின் பிரச்சினையை அறிந்தவுடன் பதுங்காமல் ஒழியாமல் பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டு சொப்பர் ஒன்றைப் பெற்று வான்வழியாக தள்ளாடி இராணுவ முகாமில் வந்து இறங்கினார் என்பதற்காக தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து அமைச்சர் ஆர்ப்பாட்டக்காரர்களை வழிநடாத்தினார் என்ற குற்றச்சாட்டு பிழையானது. இராணுவக் கட்டமைப்பைப் பற்றி அறியாதவர்களின் மடமைத்தனமான வாதமாக இதை நாம் பார்க்கிறோம்.
* ஆகவே இம்மீனவர் பிரச்சினையுட்பட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை ஜனாதிபதி அவர்கள் அமைக்க வேண்டும்.
* அமைச்சர் றிசாத் அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்கு தீயசக்திகள் எடுக்கும் முயற்சிகளை ஜனாதிபதியவர்கள் உடைத்தெறிய வேண்டும்.
* உயர் நீதிமன்ற பிரதம நீதிபதி அவர்களும். நீதி அமைச்சரும் மன்னார் சென்று இந்த இறங்கு துறை விடயத்தில் முஸ்லிம்கட்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாவென்று ஆராய வேண்டும்.
* வடபுல முஸ்லிம்களின் நெருக்கடி விடயங்களிலே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தலையிடாத கொள்கையை கடைப்பிடிப்பதாக வடபுல முஸ்லிம்கள் குற்றம் சுமத்துகின்றனர். தமிழருக்கு ஒரு பிரச்சினை என்றால் எல்லா இயக்கங்களும் எல்லாக் கட்சிகளும் ஒருங்கே குரல் கொடுப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வேளை வரலாற்றைத் திருப்பி பார்த்து வடபுல முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகளையும் சீர்தூக்கி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களின் முஸ்லிம் விரோதப் போக்கு போன்றவற்றையும் கருத்திற் கொண்டே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுகளை எடுக்க வேண்டும் என வடபுல முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





முஸ்லிம் காங்கிரசாகட்டும் ஏனைய முஸ்லிம் கட்சிகளாகட்டும் - எல்லாமே முஸ்லிம்களின் பிரச்சனைகளில் எதோ ஒரு வகையில் தலையிடுகின்றன.
ReplyDeleteகூத்தமைப்புடன் சகோதரர் ரவூப் றகீம் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு நிச்சயம் முஸ்லிம்களுக்கு எதிராக மாறும் என்பது வெகு தூரத்தில் இல்லை. முஸ்லிம்களுக்கு இந்த புரிந்துணர்வு எதுவுமே தெரியாது.
அண்மைக்காலமாக கூத்தமைப்பின் ஊதுகுழலாக நீதி அமைச்சர் செயல்படுகிறார். இது முஸ்லிம்களுக்கு குழிபறிக்கும் செயல்.
சகோதரர் ரிஷாத் பதியுதீன் மட்டுமல்ல, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் ஒன்றிணைந்து மன்னார் முஸ்லிம்களின் அவல நிலையைப் போக்குவதற்கு முன் வரவேண்டும்.