Header Ads



அமெரிக்காவில் பட்டம்பெற்றவர் எகிப்து பிரதமராக நியமனம்


எகிப்தின் புதிய பிரதமராக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஹிஷாம் கன்தில்லை ஜனாதிபதி மொஹமட் முர்சி நியமித்துள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கும் கன்திலுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மொஹட் முர்சி எகிப்து ஜனாதிபதியாக பதவியேற்று 25 தினங்கள் கழிந்துள்ள நிலையிலேயே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹிஷாம் கன்தில் தற்போதைய அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக செயற்படுகிறார். சுயாதீனமான நபர் ஒருவரை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்வது குறித்து நீண்ட ஆய்வுக்கு பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி முர்சியின் பேச்சாளர் யாசிர் அலி குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று கன்தில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு சிறப்பாக முகம்கொடுக்கக் கூடியவர் எனவும் யாசிர் அலி கூறியுள்ளார்.

50 வயதான கன்தில் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவில் பட்ட பின் படிப்பை தொடர்ந்தவராவார். அவர் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டு கலாநிதி பட்டம் பெற்றார். அவர் நீர்ப்பாசன மற்றும் பொறியியல் துறையில் பல பொது நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். அத்துடன் ஆபிரிக்க அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட முகாமையாளராகவும் கன்தில் செயற்பட்டுள்ளார்.

எகிப்தில் இராணுவத்திற்கும் புதிய ஜனாதிபதிக்கும் இடையில் அதிகார போட்டி தொடரும் நிலையிலேயே கன்தில் பிரதமராக நியமக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நல்லது நடக்கின்றதா இல்லையா என்று இதுவரை தெளிவாக தெரியாவிட்டாலும், நல்லது மட்டுமே நடக்கவேண்டும் என பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.