Header Ads



விகாரையையும், புத்தர் சிலையையும் அமைப்பதால் பிரயோசனம் இல்லை - விஜயதாஸ

நாட்டில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு குற்றச் செயல்களில் காவி உடை தரித்தவர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர் என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற பௌத்த பிக்கு  பல்கலைக்கழக திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

தற்போது நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டிருக்கும் பௌத்த பிக்கு பல்கலைக்கழக சட்டமூலம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பல குறைபாடுகள் உள்ளன. இச்சட்டமூலத்தை உயர்கல்வி அமைச்சும் பௌத்த சாசன அமைச்சும் ஒன்றிணைந்து கொண்டுவந்திருக்கவேண்டும். ஆனால், இது அப்படி நடக்கவில்லை. இச்சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்கர்களின் ஆலோசனைகள் உள்ளடக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு அவ்வாறு இடம்பெறவில்லை. அது ஒரு குறைபாடாகவுள்ளது. இச்சட்டமூலத்தை இவ்வாறு அவசர அவசரமாக நாடாளுமன்றுக்குக் கொண்டுவர முடியாது. இச்சட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இது முறைப்படி கொண்டுவரப்படவேண்டும்.

குழு நிலையில் இதை விவாதித்து பௌத்த பிக்குகளின் ஆலோசனைகளை உள்ளடக்கி இச்சட்டமூலத்தைக் கொண்டு வந்தால் அதற்கு நாம் எமது பூரண ஆதரவை வழங்குவோம்.
ஏனென்றால், இச்சட்டமூலத்தில் நல்ல விடயங்களைத் தவிர கூடாத விடயங்கள்தான் அதிகம் உள்ளன. அரசமைப்புக்கு முரணாக இச்சட்டமூலம் இருப்பதால் இதை சர்வஜன வாக்கெடுப்பு மூலம்தான் நிறைவேற்றவேண்டும்.

விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் அமைப்பதால் எதுவித பிரயோசனமும் இல்லை. மற்ற மதங்களையும் நாம் மதிக்கவேண்டும். இல்லாவிட்டால் பௌத்த மதத்தை ஏனையவர்கள் மனிதாபிமானமற்ற மதமாய்ப் பார்ப்பர்.

நாட்டில் இடம்பெறுகின்ற பாலியல் குற்றங்களில் அதிகமாக ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். அதைத் தொடர்ந்து காவி உடை தரித்தவர்களே உள்ளனர்.  இந்த நிலை மாற்றப்படவேண்டும். ஒழுக்கமான சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்.  வெறுமனே சட்டமூலங்களை நிறைவேற்றி மட்டும் பயனில்லை  என்றார்.

1 comment:

  1. he is a gentleman, he has just disclosed the facts.. Thanks sir, keep it up...

    ReplyDelete

Powered by Blogger.