Header Ads



ஆஸாத் குடும்பத்துடன் தப்பியோடுவாரா..? - சலபிகளும் நேரடி தாக்குதலில் குதிப்பு

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு பதவி விலகும்படி அரபு லீக் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். எனினும் சிரியாவில் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்று வருகிறது.

இதில் தலைநகர் டமஸ்கஸ்ஸின் புறநகர் பகுதியான பர்சா மற்றும் மெஸ்ஸா பகுதிகளை அரச படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி பஷர் அல் அஷாத்தின் சகோதரர் மஹர் அல் அஸாத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய இராணுவத்தின் 5 வது பிரிவு வீரர்கள் ஹெலிகொப்டர் மூலம் தலைநகரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு தாக்குதல் நடத்தி அவர்களை பின்வாங்கச் செய்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக கிளர்ச்சியாளர்கள் டமஸ்கஸ் நகரில் அரச படைக்கு எதிராக கடும் தாக்குதல்களை நடத்தி வந்தனர். டமஸ்கஸ்ஸின் வடக்கு பகுதியான பர்சாவில் மஹர் அல் அஸாத்தின் இராணுவ பிரிவு பல இளைஞர்களையும் கொன்று குவித்ததாக சம்பவத்தை நேரில் கண்டோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் டமஸ்கஸ்ஸில் இராணுவம் பலப்படுத்தப்பட்டு ள்ளதாகவும் நகருக்குள் செல்லும் பிரதான பாதையில் மற்றுமொரு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டி ருப்பதாகவும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் சிரியாவின் மிகப் பெரிய நகரான அலப்போவின் உளவுப் பிரிவு தலைமையகத்திற்கு அருகில் மோதல் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் அலப்போ நகரில் மோதல் மோசமான கட்டத்தை எட்டியிருப்பதாக அங்கிருக்கும் செயற் பாட்டாளர் ஜாத் அல் ஹலாமி குறிப்பிட்டுள்ளார். ‘நான் சலாஹுத்தின் நகருக்கு சென்றபோது அங்கு கட்ட டங்கள் வீதிகள் எங்கும் கிளர்ச்சியாளர் களின் கொடிகளே பறக்கவிடப்பட்டி ருந்தன. அதேபோன்று அங்கு அதிகமான சிரிய சுயாதீனப் படை வீரர்கள் இருந்தனர்’ என்று அவர் தொலைபேசி மூலம் அல் ஜkரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சிரிய விவகாரம் குறித்து அவசரக் கூட்டத்தை கூட்டிய அரபு லீக் அமைப்பு ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை பதவி விலகுமாறு கோரியுள்ளது.

கட்டாரில் நேற்று முன்தினம் நடந்த இந்த கூட்டத்தில் அஸாத் உடன் பதவி விலக வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினரை சிரியாவில் இருந்து பாதுகாப்பாக வெளியேற வழிவகை செய்யப்படும் என்றும் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோன்று சிரிய எதிர்த்தரப்பினர் இடைக்கால அரசை அமைக்கவும் அரபு லீக் கோரியுள்ளது. இதேவேளை சிரிய நாட்டு எல்லை பகுதிகளுக்கு துருக்கிய, தரையிலிருந்து விமானங்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை பட்டரிகளை அனுப்பி வைத்துள்ளது.

சிரியாவின் துருக்கி எல்லைப் பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையிலேயே துருக்கி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த ஏவுகணை பெட்டரிகள் புகையிரதம் மூலம் துருக்கியின் தென்கிழக்கு எல்லைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு அங்கிருந்து எல்லைப் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக துருக்கி இராணுவம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே துருக்கியின் ஜெட் விமானம் ஒன்றை சிரிய இராணுவம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து துருக்கி தனது எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. சிரிய கிளர்ச்சியாளர்கள் துருக்கி மற்றும் ஈராக் எல்லைப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் சிரிய அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்கள் பல பிரிவுகளாக செயற்படுவதாக சிரியாவில் இருக்கும் பி. பி. சி. செய்தியாளர் தகவல் அளித்துள்ளார். இதில் சிரிய சுயாதீனப் படை தனியாக போராடுவதோடு கடும் போக்கு இஸ்லாமியவாதிகளான சலபிக்கள் வேறாக பிரிந்து அரசுக்கு எதிராக போராடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சலபிக்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஆயுதம் மற்றும் நிதியுதவிகள் அதிக அளவில் கிடைப்பதாக பி. பி. சி. செய்தியாளர் கூறியுள்ளார்.

1 comment:

  1. அஸதே , நீ ஈரானுக்குத் தப்பியோடித் தொலைந்து போ.

    ReplyDelete

Powered by Blogger.