கொழும்பில் பள்ளிவாசலை அகற்றினால் பிரச்சினை வெடிக்கும் - ரஷ்ய தூதுவருக்கு ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை
பாஸி பஹ்ஜான்
கொழும்பு 7 எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும், அதன் அருகில் உள்ள சில குடியிருப்புகளையும் அங்கிருந்து, வேறு இடத்துக்கு அப்புறப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அது பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். என நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட ஜும்மா பள்ளிவாசலும், அதன் அருகில் அமைந்துள்ள வீடுகளும் நீண்டகாலமாக அங்கு இருந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், கொழும்பு கொம்பனித்தெரு போன்ற இடங்களிலிருந்து மக்கள் குடியிருப்புகளை அகற்றி அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக பாரிய பிரச்சினைகள் தலை தூக்கியதாகவும் கூறினார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலாடிமிர் பீ. மிக்ஹெலோ அமைச்சர் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடிய போதே, அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
பிரஸ்தாப பள்ளிவாசலுக்கும் அதன் அருகிலுள்ள குடியிருப்புக்கும் பக்கத்தில் உள்ள காணியில் ரஷ்யாவின் புதிய தூதரக கட்டிடம் அமையவுள்ளதாகவும், நான்கு மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கபடவுள்ள அக்கட்டடம் நவீன வசதிகள் அனைத்தையும் உடையதாக அமையவிருப்பதாகவும் தூதுவர் கூறினார்.
இருபது குடும்பங்கள் வரை வசிக்கும் அங்குள்ள வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளவை என்றும் அவற்றின் எல்லை வேலிகள் உத்தேச ரஷ்ய தூதரக கட்டிடத்திற்கு மிகவும் நெருக்கமாகவுள்ளதால் பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏனைய அசௌகரியங்களும் ஏற்படும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.
பள்ளிவாசலை வேறு இடத்தில் அமைப்பதற்கும், தமது வசிப்பிடங்களை இழப்போருக்கு வேறிடத்தில் அவற்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதுவர் கூறியபோது, விசனம் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் கொம்பனித்தெரு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சி பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்தாக தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு செயலாளர் திரு. கோதபாய ராஜபக்ஷவுடன் தாம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தூதுவர் கூறினார்.
எவ்வாறாயினும், அந்தப் பள்ளி வாசலின் நிருவாகிகளுடனும், அங்கு வாழும் மக்களுடனும் கலந்துரையாடாமல் எந்த விதமான முடிவுக்கும் வரக்கூடாது என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்தப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக எம்.எம்.எம். அஷ்ரப் மாவத்தையில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாது, இப்பிரதேசத்திலும், ஏனைய இடங்களிலும் இருந்து முஸ்லிம்கள் தொழுகையை நிறைவேற்ற அங்கு அதிகளவில் வருவதாகவும் அமைச்சர் தூதுவரிடம் கூறியதோடு பல வருடங்களுக்கு முன்னர் தமது தந்தையாரும் அப்பள்ளி வாசல் நிருவாக சபையில் உறுப்பினர் ஒருவராக இருந்ததாகவும் சொன்னார்.
இந்த விவகாரம் பற்றி சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களுடனும் விரிவாக ஆராயப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன பற்றி தமது நாடு அதிக கரிசனையுடன் செயல்பட்டு வருவதாக கூறிய தூதுவர் சிறுபான்மை மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தமது நாடு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் சொன்னார்.
ரஷ்யாவில் இருபது மில்லியன்களுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகவும், சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்துசென்று தனித்தனியாகவுள்ள நாடுகள் சிலவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகின்றனர் என்றும் தூதுவர் கூறினார்.
ரஷ்யா முப்திமார் கவுன்சில் பற்றியும், ரஷ்யாவின் ஐரோப்பிய புறத்திலுள்ள முஸ்லிம் சமய சபையின் தலைவர் ஷேய்க் ரவில் கெய்னுடீன் பற்றியும் தூதுவர் எடுத்துக் கூறியதோடு, அத்தகைய இஸ்லாமிய அமைப்புகளோடும், தலைமைத்துவங்களோடும் பயனுள்ள தொடர்புகளை இலங்கை முஸ்லிம்கள் சார்பில் ஏற்படுத்திக் கொள்வது பெரிதும் நன்மை பயக்கும் என்றும் கூறினார். உரிய முகவரிகளையும் அவர் அமைச்சருக்கு வழங்கினார்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் பற்றியும் அவர கவலை தெரிவித்தார்.


தலைவா u r Great
ReplyDelete''ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன பற்றி தமது நாடு அதிக கரிசனையுடன் செயல்பட்டு வருவதாக கூறிய தூதுவர் சிறுபான்மை மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தமது நாடு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் சொன்னார்''.?????
ReplyDeleteஅப்படியானால் சிரியாவில் ரஷ்யாவின் பங்கு என்ன?
தலைவர் இப்படித்தான் சப்தம் போடுவார் பிறகு அப்படியே மங்கிவிடுவார். தம்புள்ளை பிரச்சினை இதற்கு முன்மாதிரி.
ReplyDeleteWell said Hon Minister!!
ReplyDelete