Header Ads



தேர்தலின் பின் இணைந்து செயற்பட ''அரசு - முஸ்லிம் காங்கிரஸ்'' உடன்படிக்கை - அமைச்சர் ஹெகலிய

TM

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்த செயற்படுவதான உடன்படிக்கையின் பிரகாரமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மேற்படி தேர்தலில் தனித்து போட்டியிடுவதான தீர்மானத்தை எடுத்துள்ளது என அரசாங்கம் இன்று அறிவித்தது.

தேர்தலைப் பொறுத்தவரையில் இவ்வாறான நடைமுறைகள் அடிக்கடி இடம்பெறுவது வழமையே. இந்நிலையில், தனியானதொரு அரசியல் பயணத்தை நோக்கிச் செல்வதற்காகவே தனித்துப் போட்டியிடுவதான முடிவுக்கு வந்தோம் என அக்கட்சியின் உறுப்பினர்கள் நேற்று அறிவித்திருந்தாலும், அந்த தீர்மானம் இன்று மாறியிருக்கிறது என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரிடம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் குறித்து கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய,

'தேர்தல் காலங்களின் போது தங்களது பிரதேசத்தினதும் அப்பிரதேச மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்வரும் அரசியல் கட்சிகள், பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது வழமை.

இருப்பினும் அரசாங்கத்துடன் இணைவதற்கு அக்கட்சிகள் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்ற போதிலும் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பு விதிக்கும் ஒரே நிபந்தனையாகும்.

அரசியல் கட்சிகளுக்குள் இடம்பெறும் சிக்கலான நிலைமைகளைப் பொறுத்தே அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் பயணத்தில் பல்வேறு விவாதங்கள் இடம்பெறுவது வழமை.

அந்தவகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்திருந்த போதிலும் தற்போது, தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்த செயற்படுவதான உடன்படிக்கையின் பிரகாரம் தனித்துப் போட்டியிடுவதான தீர்மானத்துக்கு வந்துள்ளது' என்று அமைச்சர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.