மியன்மார் படுகொலைகள், என்னதான் நடக்கிறது..?
முஸ்லிம் சீயென் வலையமைப்பு
“இது போன்ற மோசமான நிலைமையை நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம் மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது.” பர்மாவில் இயங்குகின்ற மனித உரிமை ஆர்வலர் அமைப்பொன்று இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கிறது.
பர்ம முஸ்லிம்கள் மீது கடந்த சில நாட்களாக அந்நாட்டின் பௌத்த இனத்தவர்களால் வன்முறைகளும், படுகொலைகளும் இடம்பெற்றுக்கொண்டிருப்பதும், அவற்றை எந்தவொரு சர்வதேச மேற்கு ஊடகமும் கண்டும் காணாதிருப்பதைப் பற்றியும் பல செய்திகள் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
சமூக வலைத்தளங்களிலும் சரி, தனியார் ப்ளாக்குகள் இணையத்தளங்களிலும் சரி இது பிரதானமானவொரு பேசு பொருளாக மாறியிருப்பினும் கூட அவை வெளியிடும் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் மற்றும் தகவல்களால் இது தொடர்பான புரிதல் இல்லாமையும் உண்மையில் என்ன நடந்தது அல்லது நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமையும் மிகத் தெளிவாகவே புலப்படுகிறது.
பர்ம (மியான்மார்) சனத்தொகையில் 89 வீதமாக பௌத்தமும் 4 வீதம் கிரிஸ்தவமும் 4 வீதம் இஸ்லாமும் ஏனையவை ஏனைய சிறுபான்மைகளாக இருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் அறிவிக்கின்றன. பௌத்த ஆதிக்கமே இந்நாட்டில் மேலோங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பத்து வருடங்களுக்குள் குறிப்பாக கிழக்கு பர்மாவில் 3000க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இனவாதக் காரணங்களுக்காக
அழிக்கப்பட்டிருக்கின்றன.
200 000 க்கும் அதிகமான வங்காள முஸ்லிம்கள் புலம்பெயர்ந்து பங்களாதேசுக்குள் குடியேறியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலாளோர் அங்கும் அகதி வாழ்வு மறுக்கப்பட்டு நாடற்று வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்நாட்டில் உள்நாட்டு இன மோதல் என்பது ஆட்சியாளர்களின் உதவியோடு சிறுபான்மை இனங்கள் மீது தொடர்ந்தும் இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இது பற்றி இதுவரை பெரிதாக அலட்டிக் கொள்ளாத முஸ்லிம் ஊடகங்களும் அமைப்புக்களும் அண்மைய சம்பவங்களை மாத்திரம் தூக்கிப்பிடிப்பதையோ அல்லது அரபு நாடுகளின் ஒரு சிறிய உள்நாட்டு அசைவையும் கூட ஊதிப் பெரிதாக்கும்
மேற்கு ஊடகங்கள் இச் சம்பவத்தினை முஸ்லிம் பெயர்தாங்கி வந்ததால் கணக்கிலெடுக்காது விட்டிருக்கின்றன என்பது பற்றியோ நாம் கவனத்திலெடுத்தே இச்சம்பவத்தினையும் ஒப்பிடவேண்டியிருக்கிறது.
அதற்காக வாசகர்களின் நலன் கருதி பின்வரும் விடயங்களைத் தொகுத்துத் தருகிறோம்.
இவ்வருடம் ஜூன் மாதம் இராகின் இனத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பௌத்த பெண் ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்ககுள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
இச்சம்பவம் நாட்டினுள் ஒரு பெரும் பிரளயமாக உருவெடுத்ததோடு ராகின் இனத்து பௌத்தர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவங்களின் பின்னாலுள்ள குற்றவாளிகளை இரண்டு மூன்று நாட்களாகத் தேடி வந்தனர்.
அதில் மாட்டிக் கொண்ட குற்றவாளிகள் மூவரும் வங்காள முஸ்லிம்களாகும்.
அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டாலும் கூட பௌத்தர்களிடையேயிருந்த ஆத்திரம் குறையவில்லை.
இச்சம்பவத்துக்கென அனைத்து வங்காளிகளையும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
நாட்டினுள்ளே இன வன்முறையைத் தூண்டும் துண்டுப் பிரசுரங்களும் வங்காள முஸ்லிம்களின் மீது வன்முறைகளைத் தூண்டும் பிரச்சாரங்களும் பௌத்தர்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
வங்காளிகளை குறிக்கும் வசைச் சொல்லான “காலர்கள்” (கருப்பர்கள்) என்று குறிப்பிட்டு “மியான்மரை விட்டு காலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” என்று ராகின் மக்களை வன்முறையின்பால் இவை தூண்டிவிட்டன.
ஆரம்பத்தில்இ இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம் இரண்டு பகுதியிலும் 29 பேர் இறந்தனர்.
2500 வீடுகள் எரிக்கப்பட்டன.
ஒன்பது விகாரைகளும் ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன.
அரசும் இராணுவமும் பக்கபலமாக ராகின் பௌத்த வன்முறையாளர்களுக்குத் துணைநின்றதன் காரணமாக ஓரிரு தினங்களிலேயே அனைத்தும் பௌத்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
கலவரத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி முஸ்லிம்களை வீடுகளுக்குள் முடக்கிய இராணுவம் ராகின் பௌத்த கலவரக்காரர்களை நடமாட விட்டதோடு அவர்களைத் தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட துணைநின்றன.
இச்சம்பவங்களில் கொல்லப்பட்ட வங்காள முஸ்லிம்களின் எண்ணிக்கையோ விபரங்களோ இதுவரைக்கும் வெளியிடப்படாது மறைக்கப்பட்டிருக்கின்றன.
வங்காள இன மக்கள் வாழும் அரகான் மாநிலப் பிரதேசம் இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வங்காளிகளின் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு அங்கே பௌத்த-பர்மியர்கள் குடியேற்றப் படுகின்றனர்.
ரோஹிங்கியா வங்காளிகள் இராணுவத்தினரால் கட்டாய வேலை வாங்கப் படுகின்றனர். பாதைகள் செப்பனிடவும்இ பாலங்கள் போடவும் வேறு பல கட்டுமானப் பணிகளிலும் வங்காளி அடிமை உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
இராணுவத்தினரால் வங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்தகைய நிலையில் இதுவொரு உள்நாட்டு இனக்கலவரம் என்பதும் இது பர்ம நாட்டு இன வரலாறுடன் தொடர்புபட்டது என்பதும் தெளிவாகின்ற ஒன்று.
தனிநபர் மற்றும் அரசியல் சம்பவங்கள் கலவரங்களாகி இனக்கலவரங்களாகின்ற போது அவற்றுக்கான உண்மையான தன்மைகளைப் புரிந்து கொள்வதனூடாக மட்டுமே அவை அணுகப்பட முடியுமானவை.
அதன்போதே அவற்றைத் தீர்ப்பதற்கான மிகச் சரியான செயன்முறைகளை மேற்கொள்ள முடியும்.
தவறான தகவல்கள் மற்றும் தேவையில்லாத உணர்ச்சியூட்டல்கள் என்பன பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மறைமுகமாகச் செய்யும் உபத்திரவமாகவே அமைந்துவிடும் அபாயம் இருக்கிறது.
இருந்த போதிலும் யார் மீதுதான் வன்முறையோ அத்துமீறலோ நிகழ்த்தப்படுகின்ற போதிலும் அதற்கெதிராகக் குரல்கொடுக்க வேண்டியதும் பாதிக்கப்படும் அனைவருக்காகவும் தார்மீக அடிப்படையில் நேர்மையாக செயற்பட வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகும்.
இவ்விடயத்தைப் பொறுத்தவரை உண்மையான செய்திகளை மாத்திரம் சொல்வதும், தேவையில்லாத உணர்ச்சியூட்டும் தொடர்புபடுத்தல்களால் அமைதியைக் கலைக்காதிருப்பதுமே இவ்விடயம் தொடர்பாக நாமெல்லோரும் செய்ய முடியுமான முதற் படிப் பங்களிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தார்மீகப் பொறுப்புடன் செய்யத்தவறிய ஊடகங்களில் ஒன்றாக முஸ்லிம்சீ என்னும் இருக்க விரும்பாததால் இத் தகவல் அறிக்கையினை வாசகர்களுக்காகப் பிரசுரிக்கிறோம்.
அவசியமில்லாத உணர்ச்சிவசப்படுதலை விட்டுவிட்டு ஆக்கபூர்வமா சிந்திக்கவும் செயற்படவும் அனைவரையும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் யார்?
ReplyDeleteமுஸ்லிம் சீஎன் வலையமைப்பை யார் இயக்குகின்றார்கள்?
இதன் பின்னணியில் யார் உள்ளனர்?
இவற்றையெல்லாம் தேடித் பார்த்த பின்னர்தான் யாழ் முஸ்லிம் மேற்படி கட்டுரையை பிரசுரித்ததா?
கட்டுரை என்ன சொல்ல வருகின்றது?
கட்டுரையின் உள்நோக்கம் என்ன?
அவர்கள் பாட்டுக்கு ஆயிரக் கணக்கில் செத்து மடியட்டும், நாம்
நமது வேலையைப் பார்ப்போம் என்றா சொல்ல வருகின்றது?
வலையில் மாட்டிய நெத்தொலி மீன்கள் போல கடற்கரையில் குவிக்கப் பட்டிருக்கும்
முஸ்லிம்களின் உடல்கள்......... நம்பவேண்டாம் என்கின்றதா?
எனக்குத்தான் புரியவில்லையோ தெரியவில்லை,
யாருக்காவது புரிந்தால், தயவு செய்து விளக்குங்களேன்....