குத்துச் சண்டை வீரர்களும், குழந்தைகளும்
TN
சுட்டிக் குழந்தைகள் தங்களின் ஒருநாள் சேட்டைக்கு செலவழிக்கும் சக்தி குத்துச்சண்டை வீரர்கள் தொடர்ந்து 4 மணி நேரம் செலவழிக்கும் எனர்ஜிக்கு சமம் என்கிறது இங்கிலாந்து ஆராய்ச்சி.
நடக்கத் தொடங்குகிற வயதில் இருக்கும் குழந்தைகளின் செயல்பாடுகள் தொடர்பாக இங்கிலாந்தில் ‘பர்ஸ்ட் ஸ்டெப் ரிசர்ச்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மழலைகளின் வழக்கமான செயல்களான வீடுகளில் செய்யும் சேட்டைகள், ஓட்டம், மணலில் அவர்களின் விளையாட்டு, பூங்காவில் விளையாட்டு, மாடிப்படி ஏறுதல் இப்படி பல வேலைகளுக்கும் அவர்கள் செலவழிக்கும் கலோரிகள் குறித்து விலாவாரியாக அலசப்பட்டது. இதில் தெரியவந்த தகவல்கள் குறித்து உணவியலாளர் டாக்டர் கேரி ரக்சியான் கூறியதாவது,
வயது ஏறஏற குழந்தைகளின் சேட்டைகள் விதவிதமாக இருக்கும். அவர்களை பார்த்துக் கொள்ள முடியாமல், அவர்களது சேட்டையை கட்டுப்படுத்த முடியாமல் தாய்மார்கள் திணறுகிறார்கள். 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதும் ஏறுவதும் குதிப்பதும் பார்க்க அழகாக இருக்கும். ரசிக்க வைக்கும். ஆனால் அவர்கள் இதற்காக செலவிடும் எனர்ஜி குறித்து யாரும் யோசிப்பதில்லை.
குத்துச்சண்டை வீரர்கள் சுமார் 4 மணி நேரம் அல்லது 83 ரவுண்டுகளில் இழக்கும் எனர்ஜியை குழந்தைகள் தங்கள் சேட்டை மூலம் ஒரு நாளில் இழக்கின்றனர். இது 48 கி.மீ. தூரம் ஓடுவதற்கு அல்லது 130 கி.மீ. தூரம் சைக்கிளில் செல்வதற்கு சமம்.
குழந்தைகள் பூங்காவில் விளையாடுவதும், மாடிப்படியில் ஏறி ஓடுவதும் பெரியவர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் மலைப்பாதையில் ஏறுவதற்கு சமம். தொடர்ச்சியாக 3 கால்பந்து போட்டிகளை ஆடி முடிப்பதால் ஏற்படும் எனர்ஜி இழப்பை, குழந்தைகள் ஒருநாள் சேட்டையில் இழக்கின்றனர்.
இந்த பருவத்தில் அவர்களுக்கு அதிக சத்தான, ஊட்டச்சத்துள்ள உணவுகள், உரிய இடைவேளையில் அளிக்க வேண்டும். கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதுடன் உணவின் தரம் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதிசெய்வதாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.

Post a Comment