முஸ்லிம் முதலமைச்சர் பேரப்பேச்சில் கம்பீரம் இழக்கப்பட்டுள்ளதா..?
அப்துல் ரஸாக்
இம்முறை நடக்க இருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கூட்டமைப்பிலுள்ள முஸ்லிம் தோழமைக் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்துடன் இணைந்தே தேர்தலில் குதிக்க வேண்டி வரும் என்றே அரசியல் அவதானிகள் எதிர் பார்க்கின்றனர். ஏனெனில் இம்முறை கிழக்கில் நடக்கப் போவது ஒரு தேர்தல் அல்ல; அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடக்கப் போகும் ஒரு தர்ம யுத்தமாகவே அரசாங்கம் இதைக் கருதுகிறது.
"மழை நின்றும் தூவானம் விடவில்லை" என்பது போல் "தமிழ் ஈழம்" வேண்டியவர்கள் அழிக்கப்பட்டும் "தமிழ் தேசியம்" பேசுவோர் இன்னும் இருந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் உணர்கிறது. இந்த தமிழ் தேசிய உணர்வை எடுத்துச் செல்கின்ற ஒரு அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே இருப்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். இந்தியா முதல் மேற்குலக நாடுகள் வரை; சங்கர் மேனன் முதல் ஹிலாரி கிளிண்டன் வரை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசுவதென்றால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையே நாடிவருகின்றனர். அண்மையில் ஜெனீவாவில் அமெரிக்காவின் முன் மொழிவுடன் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையின் பின்னணியில் தமிழ் கூட்டமைப்பே இருந்தனர் என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை. இதனால் ,அரசாங்கம் சர்வ தேச மட்டத்தில் பாரிய சிக்கல்களுக்குள் மாட்டியுள்ளது. பொதுவாகச் சொல்லப் போனால் உள்நாட்டுக்குள் நடக்கின்ற தமிழ் தேசியத்துக்கு குந்தகமான விடயங்களை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்கின்ற ஊடக அமைப்பாகவே அரசாங்கம் இக் கூட்டமைப்பைக் கருதுகிறது.
ஆகவேதான், இப்படியே இந்த கூட்டமைப்பை வளரவிட்டால் அது படிப்படியாக தமிழர்களின் உள்ளங்களில் தடம் பிடித்து மீண்டும் இலங்கையின் பந்தோபஸ்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்று அரசு அஞ்சுகின்றது. எனவே எதிரே வருகின்ற கிழக்குத் தேர்தலில் தமிழ் கூட்டமைப்புக்கு சாவு மணி அடித்து அதனை பலவீனப் படுத்துவதற்கு அரசாங்கம் தருணம் பார்த்து நிற்கிறது. இதனால் எடுத்த எடுப்புடனேயே வடக்கில் தேர்தலை நடத்தாமல், கிழக்கில் வைத்து தமிழ் கூட்டமைப்பை மட்டம் தட்டி அந்த மட்டம் தட்டலோடு அடுத்த கணமே வடக்கில் தேர்தலை நடாத்தி அங்கு அரச ஆதரவாளர் அணிக்குரிய தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கி அங்குள்ள முள்ளிவாய்க்காலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக நல்லடக்கம் ஒன்றைச் செய்வதற்கும் அரசாங்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாக புலம்பெயர் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த உச்சக் கட்ட அரசாங்கத்தின் காய் நகர்த்தல்களுக்கு மு.கா.உட்பட அரசாங்கத்தின் முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் முஸ்லிம் முதலமைச்சர் கோஷத்துடன் சறுக்கி நிற்கப் பார்ப்பார்களாயின் அவர்கள் அரசாங்கத்திடமிருந்து பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்றே தெரிகிறது. அமைச்சுப் பதவிகளுக்காகவே மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற ரிசாத் பதியுதீன் அதே (முதல் ) அமைச்சர் பதவிக்காக மீண்டும் மு.கா.வுடன் இணைந்து செயலாற்றப் போகின்றார் என்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் அரசாங்கம் ஒரு போதும் அவியாது என்றே நிலவரங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. அமைச்சுப் பதவிகளுக்காகப் பிரிந்தவர்கள் அதே அமைச்சுப் பதவிகளுக்காக இணையப் போகின்றோம் என்று சொவதை முஸ்லிம்கள் வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்வார்கள் அவரகளுக்கு மிக மிக அருகில் உள்ள அரச அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்புவார்களா என்பது பெரும் கேள்விக்குறியே.
இதில் முக்கிய தோழமைக் கட்சியான தேசிய காங்கிரஸ் மட்டும் ஒரு வித்தியாசமான போக்கில் அதாவது இந்த முஸ்லிம் முதலமைச்சர் கயிறு இழுத்தல் போட்டிக்கெல்லாம் தன்னை உள்வாங்கிக் கொள்ளாது தனது அரசியல் பயணத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவர் அதாவுல்லாஹ் அம்பாறை மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறொருவர் முதலமைச்சராகவோ அல்லது இன்னுமொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவோ வருவதை ஒரு போதும் விரும்பி இருப்பவரல்ல. தனது கட்சிக்கு நல்ல மனிதராக இருக்கா விட்டாலும் ஜனாதிபதிக்கு ஒரு நல்ல பிள்ளையாகவே இருக்க அவர் அதிகப் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆதலால், தேசிய காங்கிரசை பேசி நேரத்தை வீணடிப்பதை விட்டு விட்டு இனி விசயத்துக்கு வருவோம்.
ஒரு யுத்த களத்திலே இருக்கின்ற தளபதியின் முதற் பாய்ச்சல்தான் எதிரியின் இருப்பை நிலை குலைய வைக்கும் பாய்ச்சலாகும். "முதற் பாய்ச்சலே ஒரு படையின் வெற்றிக்கான விடிவுப் பாய்ச்சலாகவும் " அமையும் . இதனை நமது பாஷையில் சொல்வதாக இருந்தால் "முதற் கோணல் முற்றும் கோணல்" என்றும் சொல்லலாம். கடந்த மாகான சபைத் தேர்தலின் போது, அதற்கான முதல் சந்தர்ப்பம் ஹிஸ்புல்லாஹ்வை முதலமைச்சராக்குவதட்காக அரசாங்கம் பின் வாங்கிய போது இந்த அரசாங்கத்துக்கு எதிராக இன்று சவால் விடுகின்ற அல்லது அச்சுறுத்தல் விடுக்கின்ற அரச தோழமைக் கட்சிகள் அன்றே ஒரே பாய்ச்சலில் பாய்ந்து இருந்தால் இன்று இந்த அரசாங்கம் முதலமைச்சர் பதவியை அல்ல முதலமைச்சர் மண்டலங்களையே தருகின்ற அளவுக்கு அடி பணிந்திருக்கும் என்றே பலரும் கருதுகின்றனர் .
அது மட்டுமா ? தம்புள்ள, தெகிவள , ஆரிய சிங்கள பள்ளிவாயல் பிரச்சினைகள், காலியில் முஸ்லிம் கடைகள் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு ஒரு அமைச்சரவை விசேட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் இன்றேல் மாற்று நடவடிக்கை அல்லது அவசர முடிவுகளை எடுக்க வேண்டிவரும் என்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சீற்றம் இன்னும் முடிவில்லாமல் கிடப்பில் கிடக்கின்ற போது ,இந்த முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சமூக நலன்கருதி ஒன்று படப்போகின்றார்கள் என்ற அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கம் அடி பணியாது என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
அரசாங்கக் கூட்டமைப்புக்கு எதிராக தேர்தலில் குதிக்கும் எந்த நடவடிக்கையையும் பங்காளி முஸ்லிம் தோழமைக் கட்சிகள் எடுக்குமாயின் அவர்களுடைய பாதுகாப்புகள், அமைச்சுப் பதவிகள் ,அதிகாரங்கள், செல்வாக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படும் என்று அரசு அச்சுறுத்துமாயின் யாரோ ஒருவருக்கான முதலமைச்சர் பதவிக்காக தாம் ஏன் தமது அமைச்சுப் பதவிகளை இழக்க வேண்டும் என்றே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கருதுவார்கள் என பலராலும் எதிர்பார்க்கப் படுகின்றது. ஆதலால், இந்த முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்காக தாம் அரசாங்கத்துடன் முரண்பட்டு நிற்கின்றோம் என்று காட்ட முட்படுவதெல்லாம் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கான "பம்மாத்து" வேலை என்றே கிழக்கு முஸ்லிம்கள் கருதுகின்றார்கள். ஏற்கனவே, முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளுக்கு பாடம் கற்பிக்க தமது பதவிகளைத் துறக்க முடியாத முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கக் கூட்டமைப்புக்கெதிராக தேர்தலில் குதிக்கப் போகின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் கிழக்கு மக்கள். இதை " யானைக்கு ஓடாத கால் இனி பூனைக்கு ஓடி என்ன புண்ணியம்" என்றும் சொல்கின்றார்கள் அவர்கள் .
ஆகவே, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன அரசாங்கத்தின் பார்வையில் ,அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு செல்லும் முஸ்லிம் முதலமைச்சர் பேரம் பேசலுக்கான எல்லா கம்பீரத்தையும் இழந்து நிற்கின்றார்கள் என்றே கருதுகின்றது. அரசாங்கம் இந்த பேரம் பேசலுக்குப் பகரமாக தன்னுடைய வளங்களையும் மத்திய அமைச்சுப் பதவிகளையும் கொடுத்தாவது முஸ்லிம் தோழமைக் கட்சிகளை சமாளிக்கலாம் என்றே அரசாங்கம் இவர்களுடைய கம்பீரத்தை இனம் கண்டு வைத்துள்ளது.
ஆகவே, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன அரசாங்கத்தின் பார்வையில் ,அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு செல்லும் முஸ்லிம் முதலமைச்சர் பேரம் பேசலுக்கான எல்லா கம்பீரத்தையும் இழந்து நிற்கின்றார்கள் என்றே கருதுகின்றது. அரசாங்கம் இந்த பேரம் பேசலுக்குப் பகரமாக தன்னுடைய வளங்களையும் மத்திய அமைச்சுப் பதவிகளையும் கொடுத்தாவது முஸ்லிம் தோழமைக் கட்சிகளை சமாளிக்கலாம் என்றே அரசாங்கம் இவர்களுடைய கம்பீரத்தை இனம் கண்டு வைத்துள்ளது.
இதனால், முஸ்லிம் தோழமைக் கட்சிகள் தம்முடைய கட்சிக்கு, சுதந்திர கூட்டமைப்பின் மூலம் முதலமைச்சர் பதவி கிடைப்பது ஒருபக்கம் இருக்கட்டும், அரசாங்கக் கூட்டமைப்பை விட்டு விலகி தனியே தேர்தலில் குதிக்கக் கூடிய திராணி இருக்குமா என்பதையாவது நிரூபிக்க முடியுமா என்று கோருகின்றார்கள் கிழக்கு மக்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Post a Comment