ஊடக தர்மங்களை கடைபிடியுங்கள் - அரசாங்க தகவல் திணைக்களம்
சுதந்திர ஊடகத்தை பொறுப்பு இன்றி தம்முடைய குறுகிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி, செய்திகளைப் பிரசுரிக்கும் ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்களால் விடுக்கப்படும் கோரிக்கையை நிராகரிக்க பொறுப்புமிக்க அரசினால் முடியாது.
தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகலவின் கையொப்பத்துடன் வெளியான அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இருக்க வேண்டிய தவறின்றியும், பொறுப்புடனும் செய்திகளை சமர்ப்பிக்கும் ஊடக ஒழுக்க நெறிகளை கடந்து இணையத் தளங்கள் செயற்படுவது வெட்ட வெளிச்சமாகும். தவறான, அபகீர்த்தியான தகவல்கள் பிரசுரமாவது தொடர்பாக நெறியாள்கை செய்வதன் தேவையும் ஏற்பட்டுள்ளது.
ஊடகங்கள் வாசகர்களுக்கு அபகீர்த்தி ஏற்படா வண்ணம் செயற்பட வேண்டுமென சர்வதேச ரீதியிலும், தேசிய மட்டத்திலும் ஒழுக்க நெறிக் கோவைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதூறு மிக்க போலியான தகவல் வழங்கல் மூலம் பொது மனித உரிமை மறுக்கப்படுவதோடு, மனித உரிமைகளும் மீறப்படுகின்றன. இலங்கையில் அநேக ஊடக நிறுவனங்கள் ஊடக தார்மிகங்கள் தொடர்பாக கவனமாகவே உள்ளன.
இருந்தும் இலாபத்தையும், குறுகிய நோக்கங்களுக்கும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட இணையத் தளங்கள் நபர்களுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் அபகீர்த்தியும், அவதூறும் விளைவிப்பதற்காக இத்தகைய சேறுபூசும் செய்திகளை பிரசுரிப்பது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவ டிக்கை என்பதை இணையத் தளங்களை கண்காணிப்பு செய்வதால் தெளிவாகக் காண முடிந்துள்ளது.
வாசகர்களை அபகீர்த்திக்கும் அவதூறுக்கும் உட்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக நடை முறை இருப்பது மிக அவசியம் என்பது கடந்த கால இணையத்தள செயற்பாடுகளால் மிகத் தெளிவாகியுள்ளது.
இன்றேல் வாசகர்கள் தொந்தரவு படுவார்கள். பெரும் நஷ்டம் ஏற்படும். சில இணையத் தளங்களில் பிரசுரமாகும் விடயங்களை எவ்வகையிலும் செய்திகளாக கொள்ள முடியாது. அவற்றை எழுதுவோரை யும் ஊடகவியலாளர்கள் எனக் கொள்ள முடியாது. தற்காலத்தில் குழந்தைப் பருவத்தினரும் இளைய பரம்பரையினருமே அதிகமாக இணையத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களின் மனங்களை கெடுத்து, தவறான முன் உதாரணங்களை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அவ்வாறே முன்னணி முற்போக்கு ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் தொழிலுக்கு இதனால் பெரும் அவமானமும் ஏற்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

Post a Comment