Header Ads



பெரும்பான்மை மதம் சிறுபான்மை மதங்கள்மீது மேலாண்மை செலுத்துகின்ற நிலை

ஒரு மதப்போர் இந்த மண்ணில் உருவாகி விடுமோ என்று அஞ்சுமளவுக்கு இன்று நிலைமைகள் மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார் மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவரும் சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குநருமான தமிழ்நேசன் அடிகளார்.

கிழக்கு மாகாணச் சர்வமதப் பேரவையினர் மன்னாருக்கு வந்திருந்த போது அவர்களுடன் இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த அச்சத்தை வெளியிட்டுள்ளார். போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாம் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றோம். ஆனால் மீண்டும் ஒரு மதப்போர் இந்த மண்ணில் உருவாகி விடுமோ என்று அச்சம் கொள்ளும் அளவுக்கு இன்று நிலைமைகள் விரைவாக மாறிக்கொண்டிருக்கின்றன.

நாட்டின் யாப்பிலே அரசின் ஆதரவும் பாதுகாப்பும் பெற்றுள்ள பெரும்பான்மை மதம் இந்நாட்டில் உள்ள சிறுபான்மை மதங்கள்மீது மேலாண்மை செலுத்துகின்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல.

இந்த நிலைமை தொடருமானால் இந்த நாட்டில் மீண்டும் குழப்பமும் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. நல்மனம் கொண்ட அனைத்து மக்களும் இது தொடர்பாக ஆழ்ந்த அக்கறை செலுத்த வேண்டும். சமயத் தலைவர்கள் முதலில் தங்களுக்குள் உறவையும், தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மதங்களுக்கிடையில், மதவாதிகளுக்கிடையில் புரிந்துணர்வை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் எவ்வளவோ செய்யவேண்டி உள்ளது. மத நல்லிணக்கம் என்பது நீண்ட பயணம். அதை உடனடியாக நாம் எட்டிவிடமுடியாது. இப்படியான நல்லெண்ண வருகைகள், சந்திப்புக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் படிப்படியாக நாம் மத நல்லிணக்கத்துக்கான அடித்தளத்தைப்போட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மன்னாருக்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாணக் குழுவினருக்கு மன்னார் பிரதிநிதிகள் நினைவுச் சின்னங்களை வழங்கினர்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சார்ந்த 35 பேர்கொண்ட சமய மற்றும் சமூகத் தலைவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

No comments

Powered by Blogger.