வம்பை விலைகொடுத்து வாங்காதீர்கள்..!
தினக்குரல்
எல்லோருக்குமே ஹேர்டை ஒத்துக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும் என்கிறார்கள் உண்மையா? மூலிகை ஹேர் டைகளில்கூட இரசாயனம் கலக்கிறார்களாமே? ஹேர் டை உபயோகிக்கலாமா, கூடாதா? என்ற கேள்விக்கு தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நடராஜன் அளித்த பதில்.
கண்ணுக்கு மையிடுவது மட்டுமல்ல கூந்தலுக்குச் சாயம் பூசுவதும் காப்பியகாலத்திலேயே இருந்திருக்கிறது. அப்போது வீட்டில் தயாரித்த இயற்கையான சாயங்களையே உபயோகித்திருக்கிறார்கள்.ஆனால் இப்போது யாருக்கும் அப்படி சாயம் தயாரிக்க தெரிவதில்லை அதற்கு நேரமும் இல்லை.
இயற்கை இரசாயனம் அக்ரிலிக் என்று மூன்று வகையான ஹேர் டைகள் கடைகளில் கிடைக்கின்றன. மருதாணி முதல் வகையைச் சேர்ந்தது.அலர்ஜி போன்ற தொல்லைகள் தராதது. ஆனால் இதைப் பயன்படுத்தினால் தலைமுடி சிவப்பாக மாறிவிடுவதால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும். இரசாயனம் மற்றும் அக்ரிலிக் ஹேர் டைகளில் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்புண்டு. சிலருக்கு டை அடித்துக் கொண்டு வெயிலில் போனால் முகம், கண், புருவம் எல்லாம் வீங்கிப் போய்விடும். தலை அரிக்கும். கொப்புளம் வரும். இப்படி அலர்ஜி ஏற்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த பிராண்டைத் தவிர்த்து வேறு பிராண்ட் மாற்ற வேண்டியதுதான். அலர்ஜி ஆனால்தான் மாற்ற வேண்டுமே தவிர விளம்பரங்களில் மயங்கி அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக்கூடாது. ஒரு சிலர் முப்பது வருஷமாக இதே பிராண்டைத்தான் உபயோகிக்கிறேன் டாக்டர் திடீரென்று இப்போ அலர்ஜி ஆகுது என்று வருவார்கள். நீங்கள் பிராண்டை மாற்றவில்லை.ஆனால் வியாபாரத்துக்காக அந்த கம்பனி அதில் சேர்க்கிற பொருட்களை மாற்றியிருக்கிறது என்றேன்.
ஆம் முப்பது வருடத்துக்கு முன்பிருந்த கம்பனிகள் இப்போதும் இருக்கின்றன. ஆனால் பேஸ்ட்டிலிருந்து சோப்பு வரை அன்று இருந்த அதே தரத்திலும் அதே உட்பொருட்களுடனும் தான் இருக்கின்றனவா என்றால் இல்லை. அப்புறம் அலர்ஜி ஆகாமல் என்ன செய்யும்? ஹெர்பல் ஹேர் டைகள் இரசாயன சேர்க்கை கொஞ்சம் பரவாயில்லை.ஆனால் இவையும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஏனெனில் நிறத்துக்காகச் சில கம்பனிகள் இரசாயனம் கலக்கின்றன.
அதற்காக ஹேர் டை உபயோகிக்கவே கூடாது என்றில்லை. உபயோகிக்கலாம். இடைவெளியை முடிந்தஅளவுக்குத் தள்ளிப்போடலாம்.எந்த ஹேர் டை வாங்கினாலும் அதில் இருந்து ஒரு துளி எடுத்து காதின் பின்புறம் பூசி இரண்டு மணி நேரம் விட்டு ஏதேனும் அரிப்பு, கொப்புளம், தடிப்பு வருகிறதா என்று பார்த்து அது ஒரு பிரச்சினையும் இல்லையெனில் உபயோகிக்கலாம். (எல்லா ஹேர் டை பெட்டிகளிலும் சிறிய எழுத்துகளில் இந்தக்குறிப்பைப் போட்டிருப்பார்கள்) இளம்வயதில் இளநரை ஏற்பட்டு டை போடுகிறவர்கள் எனில் பரவாயில்லை.சற்றே வயதானவர்கள் அடிக்கடி டை போட்டு வம்பை விலைகொடுத்து வாங்கவேண்டாம். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நரை முடிக்கென்று சிறப்பு மரியாதை இருக்கிறது என்பதே என் கருத்து.

Post a Comment