Header Ads



சிரியாவில் கடும் சண்டை - 2 இலட்சம் பேர் இடம்பெயர்வு


சிரியாவின் அலெப்போவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடப்பதால், இரண்டு லட்சம் பேர் ஊரை காலி செய்து விட்டு, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

தொடர் சண்டை: ராணுவத்துக்கு எதிராக, "எரிமலை' என்ற பெயரில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க ரசாயன ஆயுதங்களை உபயோகிக்க, அரசு படைகள் முயற்சிப்பதாக வந்த தகவலின்படி, ரஷ்யாவும், அமெரிக்காவும், "போராட்டக்காரர்கள் மீது, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது' என, சிரியா அரசை எச்சரித்துள்ளன. சிரியாவின் பாரம்பரிய மாவட்டமான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, "அலெப்போ'வை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசப்படுத்தியிருந்தனர்.

இங்கிருந்து அவர்களை விரட்டியடிக்க, சிரியா ராணுவம் இப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு கிளர்ச்சியாளர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அலெப்போ மாவட்டத்தில் உள்ள சலாஹிதீன் பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்களை விரட்டி விட்டதாகவும், தற்போது இந்த மாவட்டம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சிரியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலெப்போவின் மற்ற பகுதிகளில் கிளர்ச்சி படையைச் சேர்ந்த பலர், துப்பாக்கிகளுடன் உலாவிக் கொண்டிருக்கின்றனர். அன்னிய நாட்டு கூலிப்படையினர் தான் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக, சிரியா அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2 லட்சம் பேர்: குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சண்டை நீடிப்பதால், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். உயிருக்கு பயந்து இரண்டு லட்சம் பேர், துருக்கி மற்றும் ஜோர்டான் நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். சிரியாவிலிருந்து வருபவர்களுக்காக ஜோர்டான் அரசு, ஒன்றரை லட்சம் பேர் தங்கும் அளவுக்கு அகதிகள் முகாமை தயார்படுத்தியுள்ளது. அலெப்போவில் சண்டை நீடிப்பதால் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சொந்த மக்களையே கொன்று குவிக்கும் சிரியா அரசுக்கு, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.