நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுக்கு மலேரியா காய்ச்சல் - காட்டிக்கொடுத்தது கட்டுநாயக்கா
மேற்கு ஆபிரிக்க நாடான பெனின் இராஜ்ஜியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களில் 17 பேர் மலேரியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க விமானநிலையத்தின் சுகாதார பரிசோதனைப் பிரிவு மேற்கொண்ட பரிசோதனைகளின்போது இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மலேரியாக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் ஆறு வயதிற்குட்பட்ட ஐந்து பிள்ளைகளும் அடங்குவதாக சுகாதார பரிசோதகர் டி.எம்.பி.சமரக்கொடி தெரிவித்துள்ளார்.
மெனின் இராஜ்ஜியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்று விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்கள் அனைவரும் இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மலேரியாவால் பீடிக்கப்பட்டிருந்த சிறுவர்களை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையிலும் ஏனையவர்களை ஐ.டி.எச்.வைத்தியசாலையிலும் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக விமான நிலைய சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு செல்லும் நோக்கில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெனினுக்கு சென்றிருந்த 147 இலங்கையர்களே நேற்று இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் 20 பெண்களும் அடங்குகின்றனர்.

Post a Comment