''வேர் அறுதலின் வலி'' நூல் வெளியீடும், நவமணி பத்திரிகை குறிப்பும்
சஞ்சாரி
முஸ்லிம்களது மீள்குடியேற்றம் பற்றி மீளாய்வு செய்ய வாய்ப்பளித்த யாழ் முஸ்லிம் இணையம்
புலம் பெயர்ந்து வாழும் யாழ் முஸ்லிம் இளைஞர்ரால் நடத்தப்படும் யாழ் முஸ்லிம் இணையம் (www.jaffnamuslim.com) இலங்கை தொடர்பாக நடத்தப்படும் இணையங்களில் பிரபல்யமான ஒன்று. இந்த இணையம் மூலம் நடத்தப்பட்ட கவிதை போட்டியில் பங்குபற்றியவர்களது கவிதைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட வேர் அறுதலின் வலி' என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த சனியன்று கொழும்பில் நடைபெற்றது.கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம். பி. கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் முஸ்லிம்களது மீள்குடியேற்றம் பற்றிய ஒரு மீளாய்வுக் கூட்டம் போன்றே அமைந்திருந்தது.
நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், வடமாகாண முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த அரசு உருப்படியான ஒரு திட்டத்தை இதுவரை முன்னெடுக்காதது குறித்து கவலை தெரிவித்த அதே வேளை, மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு ஒரு நஷ்ட ஈட்டுப் பொதியை முன்வைப்பதோடு இந்த விடயத்தில் தமிழ்ச் சமூகம் அதன் ஆதரவை வழங்குவது இன்றியமையாதது என்றார்.
தந்தை செல்வாவின் உரையுடன்வந்த மாவை
மாவை சேனாதிராஜா பேசுகையில் முஸ்லிம்களை அன்று வடக்கிலிருந்து வெளியேற்றியது ஒரு இரத்தக்கறை படிந்த சம்பவம் என்றார். முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமையுண்டு என்பதனை 49 வருடங்களுக்கு முன் தந்தை செல்வா குறிப்பிட்டிருந்ததனை நினைவுபடுத்தி முஸ்லிம்களும் எம்மோடு சேர்ந்து போராட வேண்டும். தவறினால் அனைவரும் அனாதைகளாகி விடுவோம் எனத் திருமலையில் 22.08.1964ல் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாட்டில் ஆற்றிய உரை அடங்கிய ஆவணத்தைக் காட்டி உரையாற்றினார்.தமிழர்களுக்கான அரசியல் தீர்வினையும் உள்ளடக்கியதாகவே அமையும் எனத் தெரிவித்த அவர், நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் சிறுபான்மையினரது உரிமைகளை காக்க ஜனநாயக ரீதியாகப்போராட முஸ்லிம்களும் இணையவேண்டுமென அழைப்பு விடுத்தார். இங்குரையாற்றிய அமைச்சர் றிஷாத் பதியுதீன், மன்னாரில் மீளக் குடியமரச் செல்லும் முஸ்லிம்களுக்கு விடுக்கப்படும் தடைகள் பற்றி பட்டியலிட்டுரையாற்றினார். சுமார் 40 நிமிடத்துக்கு மேல் உணர்ச்சி பூர்வமான முறையில் தம் பக்க நியாயங்களை முன்வைத்த அமைச்சர், மாவை சேனாதிராஜா போன்ற முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்லுகின்ற தமிழ்த் தலைவர்கள் நாட்டுக்குத் தேவை என்றார். முஸ்லிம் தரப்பின் நியாயங்களை பகிரங்கப்படுத்த தமிழ் ஊடகங்கள் தயக்கம் காட்டுவது நீதியானதா என்றும் அமைச்சர் இங்கு கேள்வி எழுப்பினார். வட மாகாண முஸ்லிம் பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் லண்டனில் வாழும் சட்டத்தரணி பசீரும் உரையாற்றினார். முன்னாள் எம்.பி. இமாம் உட்பட்ட பலர் இதில் பிரசன்னமாகியிருந்தனர்.
அமைச்சர் றிஷாதுக்கு ஆதரவாக கரம்நீட்டிய அமைச்சர் ஹக்கீமின் சகோதரர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இக்கூட்டத்தில பிரதம அதிதியாக கலந்து கொள்வாரென அறிவித்திருந்த போதும் அவர் குவைத் சென்றிருந்ததனால் அவர் சார்பில் உரையாற்றிய அவரது சகோதரர் கவிஞர் ஏ.ஆர்.ஏ. ஹஸீர் அமைச்சர் றிஷாத் மன்னார் ஆயருடன் நடத்தும் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டு அதில் றிஷhத் தரப்பிலுள்ள நியாயங்களை ஏன் ஊடகவியலாளர் மகாநாடொன்றை நடத்தி பகிரங்கப்படுத்தாதிருக்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அமைச்சர் றிஷாதின் தரப்பில் நியாயமிருக்கின்றது இது பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்று குறிப்பிட்டு றிஷாதின் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டி உரையாற்றினார்.
Post a Comment