Header Ads



முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் முன்னுள்ள பொறுப்பு..!


(இன்றைய 08-07-2012 நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம் இது)

இலங்கை வாழ் பிரஜைகளுக்கு தாம் விரும்பிய சமயத்தை பின்பற்றி வாழ்வதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஊடாக வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தான் வழிபடும் சமயத்தின் வழிபாட்டுத் தலங்களை அமைத்து சமய வழிபாட்டை நிறைவேற்ற சுதந்திரம் உடைய மக்களாக இலங்கை வாழ் மக்கள் திகழ்கின்றார்கள். இதனை இலங்கை அரசியல் யாப்பு உறுதி செய்துள்ளது.

இலங்கை அரசியல் யாப்பின் பின்வரும் சரத்து இதனையே கூறுகின்றது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் அத்தியாயம் 11 உறுப்பிரை 9 'இலங்கை குடியரசின் பௌத்த மதத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு அதற்கிணங்க 10 ஆம் 14 (1) (உ) ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்பீடு செய்யும் அதேவேளையில் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வருதலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்' என்று குறிப்பிடுகின்றது. இதனைத் தொடர்ந்த அத்தியாயம் 111 உறுப்புரை 10 'ஆளொவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராய் இருத்தற்கான அல்லது மேற்கொள்வதற்கான சுதந்திரமுட்பட சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையதாதல் வேண்டும்.' என்றும் மீண்டும் உறுப்புரை 15 (1) (ஊ) 'தனியார் அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது சொந்தக் கலாசாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கும் ஆன சுதந்திரம் உண்டு' என்றும் குறிப்பிடுகின்றது. சில வாரங்களுக்கு முன் நாட்டிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள், அவற்றின் நிர்வாகிகள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு இரகசியப் பொலிசார் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பணிப்பாளரை வேண்டியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தம்புள்ளை, குருநாகல், தெஹிவளை பள்ளிவாசல் சம்பவங்கள் நடைபெற்ற பின்னணியிலே இந்த கோரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகம் இது குறித்து பெரும் கவலையும் அதிர்ச்சியும் கொண்டுள்ளது.

நாட்டின் பள்ளிவாசல்கள் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வக்பு சபையிலே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு அரசாங்க நிறுவனம். அரசாங்கம் நிறுவனமொன்றில் இருக்கும் விபரங்களை இரகசியப் பொலிசார் ஏன் வினவுகின்றார் என்பதே முஸ்லிம்கள் எழுப்பும் கேள்வியாகும். நாட்டின் எந்தவொரு பள்ளிவாசலாவது சட்டத்துக்கு முரணாக இயங்கியதாகவோ இந்த நாட்டின் இறைமைக்கு மாற்றமாக செயற்பட்டதாகவோ எவ்வித முறைப் பாடுகளும் தெரிவிக்கப்படாத நிலையில் பள்ளிவாசல்களின் விபரங்கள் இரகசியப் பொலிசாருக்கு தேவைப்படுவது ஏன் என்பதே இங்கு எழுப்பப்படும் கேள்வியாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் 20ம் திகதியிலிருந்து இதுவரை இரண்டு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற போதும் இதுவரை அவற்றில் சம்பந்தப்பட்ட எவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படாத நிலையில் பள்ளிவாசல்கள் பற்றிய விபரங்களை தேடுவதில் இரகசியப் பொலிசார் ஏன் அக்கறை காட்டுகின்றார்கள் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவித்துள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலர், தாம் பாதுகாப்பு, உயர் தரப்பினருடன் இது பற்றிப் பேசவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தாலும் இதுவரை என்ன பேசினார்கள் ஏன் அவ்வாறு விபரங்கள் கோரினார்கள் என்பது பற்றி யாருமே தெளிவுபடுத்தாத நிலையில் இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் இருளிலே உள்ளது.

தம்புள்ளை சம்பவம் முதல் இன்று வரை இடம்பெற்று வரும் அந்த நிகழ்வுகள் தொடர்பாக ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் அரசிடமிருந்து ஒரு தெளிவான நிலைப்பாட்டைப் பெறாதிருப்பதையே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

ஊடகங்கள் கேட்கும் போது ஏதாவது சொல்லி விட்டு தப்பி விடுவது போன்று தான் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்துடைய செயற்பாடு இந்த விடயங்களிலே இருப்பதனை உணரக் கூடியதாக உள்ளது.

பள்ளிவாசல்கள் பற்றிய தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் கேட்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் அதனை பகிரங்கப்படுத்தினால் மக்களுக்கு இது தொடர்பாக உள்ள சந்தேகங்களை நீக்கிக் கொள்ள முடியும். இதுவரை எந்தவிதமான நியாயமான காரணங்களும் இதற்கு தெரிவிக்கப்படவில்லை.
அவ்வாறு நியாயமான காரணங்கள் இல்லாவிடில் இலங்கை உலமாக் கட்சி அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போன்று அரசாங்கம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென்பதில் நியாயமிருக்கின்றது.

பள்ளிவாசல்கள் இந்த நாட்டில் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை வளர்ப்பதிலும் தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்த நிலையில், பள்ளிவாசல்களுடைய பணிகளை பலப்படுத்துவது ஆட்சியாளர்களதும் ஏனையவர்களதும் பொறுப்பாகும். அவ்வாறு இருக்க, இரகசியப் பொலிசாரைப் பயன்படுத்தி பள்ளிவாசல்களது விபரங்களைக் கேட்பது இவற்றை பரிபாலிப்ப வர்களின் மனதில் ஒரு அச்சத்தையும் பீதியையும் உருவாக்கலாம்.

இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் முன் பாரிய பொறுப்புள்ள தென்பதை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம். இதற்கு முன்பு நாம் கூறியது போன்று முஸ்லிம் தலைமைத்துவம் நம் மத்தியில் இருக்கும் குறுகிய பேதங்களை மறந்து ஒன்று பட்டு அரச உயர் மட்டத்தோடு இது தொடர்பாக பேசி முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு நல்ல முடிவைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இது போன்ற பிரச்சினைகள் வரும்போது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் அறிக்கைகளுக்கும் பேச்சுக்களுக்கும் மட்டுப்பட்டு இருக்கின்றதா என்ற சந்தேகம் சமூகத்திலிருந்து கிளப்பப்படுகின்றது.

தம்புள்ளை சம்பவம் தொடர்பாக அமைச்சரவையில் பேசுவதாக அமைச்சரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அது நடைபெற்றதாக இதுவரை தெரியவில்லை.

அரசாங்கத்தோடு மோதிக் கொண்டு இப்பிரச்சி னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று சமூகம் முஸ்லிம் தலைவர்களுக்கு கூறவில்லை. ஆனால் கூட்டாக பேச வேண்டுமென்றே அவர்கள் கேட்கின்றார்கள். அது கூட நடப்பதாக தெரியவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளினால் வேதனைப்படுகின்ற சமூகம் மாற்று வழிகளை கையாள முற்படலாம். அதனால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்பட இடமுண்டு. இதனை உணர்ந்து முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் நிதானமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு இவ்வாறான பிரச்சினைகளை அரசின் தலைமைத்துவத்துக்கு தெரியப்படுத்தி இனியும் இது போன்ற வியடங்கள் நடக்காதிருப்பதற்கு உறுதி கொள்ள வேண்டும்.

1 comment:

  1. Namma Aalunga kizhichchaanga poonga. Oru manthiri Kuwai, Saudi enru alairaar, maththa manthiri Qutar, China enru allairar. Kutty maichcharkaL kizhakku maakaana therthalla ore busy. ethri kaddchi MPs aalung kadchchiai kurai solrathile kaalaththai kalikkiraarkal. aakave pothu makkal thaan eathaavathu vazhi paarkkaveendum.

    ReplyDelete

Powered by Blogger.