எகிப்தில் அவசரகால சட்டம் முடிவுக்கு வந்தது
எகிப்து நாட்டில் 31ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர சட்டம் முடிவுக்கு வந்துள்ளது.எகிப்து நாட்டில் கடந்த 1981ம் ஆண்டு முன்னாள் அதிபர் அன்வர் சதாத் கொல்லப்பட்டபோது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிபரான ஹோஸ்னி முபாரக், இந்தச் சட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் நீட்டித்து வந்தார்.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் அதிபர் பதவியை வகித்த முபாரக், மக்கள் புரட்சி மூலம் கடந்த ஆண்டு பதவியிலிருந்து விலகினார். இதை யடுத்து, ராணுவ உயர்மட்ட கவுன்சில் தற்போது இடைக்கால ஆட்சி நடத்துகிறது.எகிப்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வாரம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஜனநாயக நடைமுறைப்படி ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதும், அவசர சட்டத்தை வாபஸ் பெறுவதாக ராணுவ உயர்மட்ட கவுன்சில் கடந்த ஜனவரி மாதம் உறுதியளித்தது. இருப்பினும் இந்த சட்டம் வாபஸ் பெறாமலேயே இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவுடன் இந்த அவசர சட்டம் காலாவதியானது. "இதைமேலும் நீட்டிக்கும் திட்ட மில்லை' என, ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளதால், 31 ஆண்டுகால அவசர சட்டம் முடிவு பெற்று விட்டது.

Post a Comment