Header Ads



கொழும்பு மாநகர சபையில் பன்றி இறைச்சிக்கறி விவாதம்



கொழும்பு மாநகர சபை மேயர் முஸ்ம்மில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்த நிகழ்வில் பன்றி இறைச்சி வைக்கப்பட்டிருந்ததாக கொழும்பு மாகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹ்ரூப் குற்றம் சுமத்தியிருந்தார். இதுகுறித்து மேயர் முஸ்ம்மிலுக்கு எதிராக பிரேணை கொண்டுவரப்படுமெனவும் அறிவித்திருந்தார். அதன்தொடர்ச்சியாக கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற விவாதத்தை இங்கு தருகிறோம்..!


கொழும்பு மாநகர முதல்வர் ஏ. ஜே. எம். முஸம்மிலுக்கு எதிராக எதிரணித் தலைவர் மஹ்ரூப் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் ஆளும் தரப்புடன் இணைந்து அதனை தோற்கடிக்கப் போவதாக அறிவித்திருக்கும் எதிரணி உறுப்பினர்களான ஆஸாத் சாலி,  ரம்ஸி டோனி ஆகியோர் அரசியல் நேர்மையற்ற ஒருவர் மாநகர சபையில் எதிரணித் தலைவராக இருப்பதையிட்டு வெட்கப்படுவதாகவும் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை நம்பிக்கையில்லாத் தீர்மான அச்சுறுத்தலைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை எனத் தெரிவித்த மாநகர சபை முதல்வர் ஏ. ஜே. எம். முஸம்மில் எதிரணித் தலைவரால் முடிந்தால் அதனைச் செய்து காட்டட்டும் எனச் சவால் விடுத்திருக்கிறார்.

கொழும்பு மாநகர சபைக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது எதிரணித் தலைவரின் முதல்வருக்கு எதிராண சேறு பூசும் கருத்துக்கள் தொடர்பாக ஆளும் மற்றும் எதிரணித் தரப்புகளின் உறுப்பினர்கள் கண்டனத் தொனியில் கருத்துக்களை வெளியிட்டனர்.

எதிரணி உறுப்பினர் ஆஸாத் சாலி உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

இன்று இந்தச் சபையின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது அண்மையில் தலைநகரில் மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள நாடகங்களின் பெயர்களே நினைவுக்கு வருகின்றன. வீரன் செத்துவிட்டான் (வீரயா மெரிலா), ஆந்தை வீதிக்கு வந்து  விட்டது (பக்கமூன வீதி பெகிலா), நரிகள் ஊழையிடுகின்றன (நரியோ புரத்தி ), நாய்களுடன் முடியாது (பல்லெத் எக்கபே) இந்தச் சபைக்கு நல்ல பொருத்தமான பெயர்களாகவே இவை காணப்படுகின்றன.

இங்கு  நாம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் 53 உறுப்பினர்களும் முதல்வருடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டும்.  சேறு பூசும் கலாசாரத்தைக் கைவிட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் செயற்பட வேண்டும். சண்டை பிடிப்பதற்காக மக்கள் எம்மை தெரிவு செய்ய வில்லை. வரிசெலுத்தும் மக்களுக்கு நான்கு வருடங்களுக்குச் சேவை  செய்வதற்காகவே தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போது 8 மாதங்கள் முடிந்துவிட்டன. சும்மா விவாதித்துக் கொண்டிராமல் எல்லோரும் ஒன்று பட்டுச் செயற்படுவோம்.

இந்தச் சபையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியாது.  அதற்கு இடம் கிடையாது அதனையும் மீறி எதிரணித் தலைவர் தீர்மானம் கொண்டுவந்தால் எதிரணி உறுப்பினர்களான நாமும்  ஆளும் தரப்புடன் சேர்ந்து அதனைத் தோற்கடிப்போம். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை  விவாதத்திற்கு எடுக்க இடமளிக்க மாட்டோம். இந்த முயற்சியில் நாம் தோல்விகண்டால் நான் அரசியலிலிருந்தே வெளியேறுவேன். 

பன்றி இறைச்சி சம்பந்தப்பட்ட விடயம் கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற தொன்றாகும். அதற்குப் பின்னர் இச்சபை எத்தனை தடவைகள் கூடியுள்ளது. அப்போதெல்லாம்  பேசாமல் இப்போது ஏன் கிளப்ப வேண்டும். இது முழுதும்  சேறு பூசுவதொன்றாகும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ரம்ஸிடோனி பேசுகையில் கூறியதாவது,

கண்டலமவில் நடந்த கருத்தரங்கிற்கு நாமும் சென்றிருந்தோம். அங்கு  அனைத்துவகை உணவுகளும் வைக்கப்பட்டிருந்தது.  ஐந்து நட்சத்திர ஹோட்டல் நடைமுறை அது. அங்கிருந்த பன்றி இறைச்சிக் கறியை கண்டு நாம் உரிய நடவடிக்கை எடுத்து அதனை அப்புறப்படுத்தினோம்.

இதில் மாநகர சபை முதல்வரை சம்பந்தப்படுத்தி சேறு பூசுவது அபத்தமான செயலாகும். இந்த விடயத்தில் எதிரணித் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட முனைந்துள்ளார். இதனையிட்டு நாம்  வெட்கப்பட வேண்டும்.

மாநகர முதல்வர் ஏ. ஜே. எம். முஸம்மில் இவற்றுக்குப் பதிலளித்துப் பேசுகையில் கூறியதாவது,

எதிரணித் தலைவரின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனது மனைவியும் மகளும் மாநகர சபையில் மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வீதம் சம்பளம் பெறுவதாக எதிரணித் தலைவர் தெரிவித்துள்ளார். அவர்கள் மாநகர சபையில் இருந்து  ஒரு சதம் கூடப் பெறுவதில்லை. மனைவி இங்கு உத்தியோகபூர்வமாக எந்தப் பதவியிலும் இல்லை. அவர் மாநகர சபை மகளிர் அமைப்பின் தலைவியாக  இருந்து பொதுத் தொண்டாற்றி வருகிறார்.

எனது மகள் எமது பிரத்தியேக செயலாளராகவே இருக்கின்றார்.  அதற்கு சதம் கூட சம்பளம் பெறுவதில்லை. முடிந்தால் அதனை நிரூபித்துக் காட்டட்டும்.  நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு நான் பயப்படவில்லை. முடிந்தால் அதனைச் செய்து காட்டட்டும் எனச் சவால் விடுத்தார்.

1 comment:

  1. இன்றிறுக்கும் இனச்சுத்திகரிப்புக்குஎமத்தியில் இப்படியெல்லாம் குளருபடி இல்லாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.